தமிழக அரசின் தீர்மானத்தையும் ஐநா அறிக்கையினையும் வரவேற்றுள்ள முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் September 16, 2015 News தமிழக அரசின் தீர்மானத்தையும் ஐநா அறிக்கையினையும் வரவேற்றுள்ள முதலமைச்சர் விக்கி! தமிழர் தாயகத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணையினைக் கோரும் தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையினையும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் வரவேற்றுள்ளார்! அத்துடன், இரு விடயங்களும் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான விடயங்கள் எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இன்றைய தினம் குறித்த இரு விடயங்கள் தொடர்பாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன், வரவேற்றும் உள்ளார். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், முதல்வர் ஜெயலலிதா அம்மையார் தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார். அதாவது இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும். என்பதே அந்த தீர்மானம். குறித்த தீர்மானத்தை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் அதேவேளை, தமிழக முதல்வருக்கு வடமாகாண மக்கள் சார்பிலும், வடகிழக்கு தமிழர்கள் சார்பிலும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இந்த தீர்மானத்தின் ஊடாக இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களும், தமிழகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களும் ஒருமித்த குரலில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச விசாரணை ஊடாக மட்டுமே நீதி கிடைக்கும், என்பதை எடுத்துக் காட்டியிருக்கின்றோம். இதேபோன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் இலங்கை தொடர்பான தனது அறிக்கையினை இன்றைய தினம் வெளியிட்டிருக்கின்றது. அந்த அறிக்கையில் சில முக்கியமான விடயங்கள் மிக ஆணித்தனமாக கூறப்பட்டிருக்கின்றது. அது எமக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றது. ஆனால் இந்த அறிக்கையை அடுத்துவரும், பிரேரணையே மிகவும் முக்கியத்துவமான ஒன்றாகும். எனவே பிரரேரணையினை நல்ல விதமாக கொண்டுவருவதற்கும், மனித உரிமைகள் ஆணையகத்தின் அங்கத்துவ நாடுகள் அதனை எதிர்க்காத வகையில் நிறைவேற்றுவதற்கும் நாங்கள் கடுமையான முயற்சிகளை எடுக்கவேண்டும். அவ்வாறு கொண்டுவரப்படும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலேயே அடுத்தக்கட்ட நடவடிக்கை, அறிக்கை வலுவானதாக இருந்தாலும் அதில் குறிப்பிட்டுள்ளவாறு சர்வதேச நீதிபதிகள், வடக்கு நடத்துனர்கள், சர்வதேச சட்டங்கள் ஆகியன ஒத்துக் கொள்ளப்படும் வகையிலான பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு ஒத்துக்கொள்ளும் வகையில் பிரேரணை அமையவேண்டும். அதற்கு எங்களிடமுள்ள புத்திஜீவிகள், சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.