சர்வதேச விசாரணையை இந்தியாவே தீர்க்கமாக கொண்டுவர வேண்டுமென சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு தனது மனம் நெகிழ்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக இயக்குநர் கௌதமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,

ஈழ மண்ணில் நடந்தது ஒரு இனப்படுகொலை என்றும், அக்குற்றத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க சர்வதேச போர்க்குற்ற விசாரனை வேண்டுமென்றும், உலகம் முழுக்க வாழ்கின்ற ஈழத் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு வேண்டுமென்றும்,

ஒருவேளை ஈழத் தமிழர்களின் உரிமைக்கு எதிராக அமெரிக்காவோ ஐ.நா வோ தவறு இழைக்குமானால் அவர்களுக்கு இந்தியா துணை போகக்கூடாதென்றும், எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவே முன்னின்று ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க ஐ.நா வில் தீர்மானம் கொண்டு வர வேண்டுமென்றும்,

வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் மரியாதைக்குறிய முதலமைச்சர் கொண்டு வந்திருப்பது உலகம் முழக்க வாழ்கின்ற தமிழர்களின் நெஞ்சத்தில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எங்கே முள்ளிவாய்க்காளோடு அவர்களின் வாழ்க்கை முடிந்துவிடுமோ என்று நித்தம் புழுங்கி மனம் சிதைந்துகொண்டிருந்த தமிழினத்திற்கு ஒரு பெரும் வெளிச்சத்தை காட்டியிருக்கிறது.

15.9.2015 அன்று தம்பிகள் பிரதீப்குமார், செம்பியன், பிரபாகரன், இளையராஜா, பன்னீர் உள்ளிட்ட பதினைந்திற்கும் மேற்ப்பட்ட கல்லூரி மாணவ தலைமைகளுடன் முதல்வரை சந்திக்க தலைமை செயலகத்திற்கு சென்றிருந்தோம்.

மனுவில் மேற்கண்ட அனைத்து கோரிக்கைகளையும் எழுதி முதல்வரின் சார்பாக அவரின் முதன்மை செயலாளர்களின் ஒருவரான திருமிகு. ஜான் லூயிஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

நாங்கள் எங்களின் மனத்துயரங்களை உலகத் தமிழர்களின் பெருமூச்சுக்களை எடுத்துச்சொல்லி எங்களுக்கான ஒரே நம்பிக்கை முதலமைச்சர் அவர்கள் மட்டுந்தான் மீண்டுமொருமுறை அவர் தீர்மானம் போட்டுவிட்டால் இந்த உலகம் தமிழர்களை ஏமாற்றுவதற்கு தயங்கும்.

ஆதலினால் எங்கள் உணர்வுகளை முதல்வரிடம் சேர்பித்து விடுங்கள் என்று கூறி விடை பெற்றோம்.

முத்தனை செயலாளரின் அலுவலக்திளிருந்து உடன் வந்த அதிகாரிகள் உங்களுக்கு நல்ல செய்தி வரும் என்றார்கள் அந்த நல்ல செய்தி அடுத்த நாளே (16.09.2015) இப்படி ஒரு வாலாற்று தீர்மானமாக வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

இதற்காக எத்தனை முறை நன்றி சொன்னாலும் முதல்வர் அவர்களுக்கு தகும். ராஜதந்திரத்துடன் இந்தியா ஈழத் தமிழர்களுக்கு உரிமையை பெற்றுத்தரவேண்டும் என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.

ஆனால் இந்தியா ராஜதந்திரத்தோடு எங்களுக்கு துரோகம் இளைத்து விடக்கூடாது என்பதே எங்களின் கவலை. தமிழ் நாட்டில் உள்ள எட்டுக் கோடி தமிழர்களின் ஒரே முகமான தமிழ் நாட்டின் முதல்வரின் கோரிக்கையை, தீர்மானத்தை மீண்டுமொருமுறை இந்திய அதிகாரவர்க்கம் காலில் போட்டு மிதித்துவிட்டால் அது ஈழத் தமிழர்களுக்கு இலங்கை அதிகர வர்க்கம் செய்த வன்முறையை விட மிகக்கொடூரமான வன்முறையாக தமிழர்கள் எடுத்துக்கொள்ள நேரிடும.

தாங்கள் இரண்டாவது முறை கொண்டுவந்த தீர்மானத்தோடு ஈழதமிழர்களுக்கு நிரந்திர தீர்வு கிடைக்கும் வரை ஒரு பாதுகாப்பு அரணாக நீங்கள் இருக்க வேண்டும் என்றும் இத்தகைய செயலுக்காக காலம் உள்ளவரை உலகத்தமிழர்கள் உங்களை வணங்கி வாழ்த்தி கொண்டு இருப்பார்கள் என்றும்.

ஈழத்தமிழர்கள் விடுதலைக்கான மாணவர்கள் கூட்டியக்கத்தோடு நானும் எனது மனம் நெகிழ்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.