மாறி மாறி ஆண்ட சிறீலங்கா பேரினவாதிகளால் காலம் காலமாக தமிழ்மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு வந்துள்ளது.தொடர்ந்தும் படிப்படியாக பறிக்கப்பட்டு வருகின்றது.

இன்நிலையினை உணர்ந்த மக்கள் எந்தெந்தக்காலகட்டத்திலெல்லாம் தமிழீழம் என்ற உணர்வோடு மக்கள் புரட்சியின் உச்சத்திற்கு வருகின்றார்களோ அந்தந்த காலகட்டத்திலெல்லாம் சமாதான ஒப்பந்தங்களை ஏற்படுத்தி தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டத்தின் வீச்சை தணித்து பலவீனமான போராட்டமாக மாற்ற முனைந்தார்கள் இதர்க்கு சரியான தெளிவில்லாத தமிழர்களும் தெரிந்தோ தெரியாமலோ உடந்தையாக இருந்தார்கள் இதனால் ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்ட வரலாறுகள்தான் எமது போராட்ட பாதையில் நிரம்பி வழிகின்றது.இந்த கவலையை தியாகதீபம் அன்றே வெளிப்படுத்தியிருந்தார் ஆனால் இந்த நிலை இனியும் தொடரக்கூடாது என்பதுதான் கற்றறிந்த பாடங்களினூடாக அறியக்கூடியதாக இருக்கின்றது.

குறிப்பாக 1957 இல் பண்டா செல்வா ஒப்பந்தத்தில் தொடங்கி 2002 பிரபா ரணில் வரையான ஒப்பந்தம் வரைக்கும் சிறீலங்கா அரசின் பித்தலாட்டத்தை எந்தசந்தர்ப்பத்திலும் நாம் மறந்துவிட முடியாது.
உலகவரலாற்று சக்கரத்தில் தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டமானது எழு தசாப்தங்களை எட்டும் தூரத்தில் சுழன்று கொண்டிருக்கும் சூழ்நிலையிலும் இன்னும் தமிழின அழிப்பின் அகோரம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
தமிழ் மக்களின் போராட்டமானது இந்திய வல்லாதிக்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்குண்டு தவிக்கின்றது என்பதை தியாகதீபம் திலீபன் அன்றே தன்னுடைய பன்னிருநாள் நீராகாரமின்றி நடாத்திய உண்ணநிலைப்போராட்டத்தினோடு வெளிப்படுத்தியிருந்தார்.

அமைதிப்படை என்ற போர்வை போர்த்தி எமது மண்ணை ஆக்கிரமித்து சிறீலங்காவுக்கு தாரைவார்க்க வருகின்றார்கள் என்பதை விடுதலைப்புலிகள் உணர்ந்திருந்தபோதும் மக்கள் புரியாது புளகாகிதத்தில் மிதந்தனர்.
இந்த ஆபத்தான சூட்சுமத்தை புரிந்துகொண்ட திலீபன் அவர்கள் 1987 செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி காலை சரித்திர சாவை ஏற்றுக்கொண்டு ஜந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலை மேடையில் தன்னை மெழுகுவர்த்தியாக உருக்கி அமைதிப்படையின் கோரமுகத்தினை உலகத்திற்கு அம்பலப்படுத்தியதோடு காக்ககவந்தவர்கள் அல்ல எம்மை தாக்க வந்தவர்கள் என்ற உண்மையை ஈழத்தமிழ் மக்களுக்கு உணரவைத்ததோடு தலைவரின் பாசத்துக்குரிய தமிழக தொப்புள்க்கொடி உறவுகளுக்கும் தமிழீழத்தின் நிலையை தெளிவுபடுத்தியதோடு இந்திய வல்லாதிக்கத்தின் அரசியல் முகத்திரையை கிழித்தெறிந்து 26 செப்டம்பர்1987 அன்று வீரச்சாவை தழுவிக்கொண்டார்.

ஒரு ஒப்பற்ற வீரனின் நினைவு நாளிலே இன்னும் மண்ணின் விடுதலைக்காக துணிவோடும் உறுதியோடும் போராடிவருகின்ற நாம் அந்த வீரன் உறுதியான தியாகத்தை நெஞ்சில் சுமந்து போராட்டத்தை இலக்கு நோக்கி நகர்த்துவதே எமது கடமையாக அமைகின்றது.
அன்று திலீபன் தீர்கதரினமாக பதிவுசெய்த பக்கங்களை புரட்டிப்பார்த்தால் இன்று தாயகத்தில் மக்கள் பரிதாபமான நிலையில் வாழ்கின்ற ஒரு சோக நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்பதை யாரும் மறுப்பதர்க்கு இல்லை

ஆனால் தமிழக உறவுகளும் புலம்பெயர் உறவுகளும் எமது மக்களின் விடுதலைக்காக போராட்ட களங்களை திறந்திருக்கின்றார்கள் இந்த தேசிய பலத்தை சிதைப்பதர்க்கு சிலந்தி வலைகள் பின்னப்படுகின்றது என்ற எண்ணத்தை மனதில் இருத்தி இறுக்கமான கட்டமை பேணிப்பாதுகாத்து போராடவேண்டும்
ஏனெனில் திலீபன் அவர்கள் குறிப்பிட்டது போல் இன்னும் சரியான புரிதல் இல்லாது இழிநிலையையும் அடக்குமுறை நிலையையும் புரிந்து கொள்ள தவறினால் வரலாற்றில் பூமிப்பந்தில் பரிதாபத்திற்குரிய இனமாக மாறிவிடுவோம் என்பதை உணர்ந்துகொண்டு திலீபன் கண்ட மக்கள் புரட்சிக்கு தமிழினம் தயாராகவேண்டும்.

-தூயவன்-