ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கை குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கூறப்பட்ட விடயங்கள் உறுதியாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையை மட்டுமே கூறி வருவதாகவும் இலங்கை அரசாங்கம் தமது கருத்துக்களை நிராகரிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தாம் வலுவான ஆதாரங்களுடன் அதனை நிரூபித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆதாரங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தை விடவும் பல விடயங்களில் புதிய அரசாங்கம் மாறுபட்டுள்ள போதிலும், தமிழர் நிலைமைகள் விவகாரத்தில் இரண்டு அரசாங்கங்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

மைத்திரி – ரணில் அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யவும், ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்கவும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும் தமிழர்களை பொருத்தமட்டில் மாற்றங்கள் நிகழவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைகள், வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னம் போன்ற விடயங்களில் மாற்றத்தை காண முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் மீது யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட சில அதிகாரிகளுக்கு மைத்திரி அரசாங்கம் பதவி உயர்வுகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் உலகிற்கு ஒன்றையும் தமிழ் சமூகத்திற்கு மற்றொன்றையும் கூறி வருகின்றமை சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என உறுதியளித்திருந்தார். மறுபுறத்தில் படையினர் இரத்தம் சிந்தி வென்றெடுத்த நாட்டை பிளவடையச் செய்ய அனுமதியோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென தெரிவித்திருந்தார்.

ஹைபிரைட் நீதிமன்றில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாட்டு நீதவான்களாகவே இருக்க வேண்டுமென மக்ரே தெரிவித்துள்ளார். முழு அளவில் சுயாதீனமாக விசாரணைக்குழு செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அரசியல் நடாத்தும் நோக்கில் ஆவணப்படங்களை வெளியிடவில்லை எனவும், தாம் ஊடகவியலாளர்க என்ற ரீதியில் சரியான நேரத்தில் சரியான விடயங்களை வெளிக்கொணர முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமது திரைப்படங்கள் மேற்குலக நாடுகளின் அரசியல் அல்லது பொருளாதார நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலானதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது மேற்குலக நாடுகள் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆவணப்படங்களை தயாரிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். நம்பகமான பக்கச்சார்பற்ற சர்வதேச நீதவான்களைக் கொண்டு யுத்தக் குறறச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கலம் மக்ரே தெரிவித்துள்ளார்.