இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் இனத்தைப் படுகொலை செய்த சிங்களப் பேரினவாத அரசாங்கத்தை அனைத்துலக நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டிய, ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில் தமிழர்களுக்கான நீதி சாகடிக்கப்பட்டு, அநீதிக்கு மகுடம் சூட்டப்பட்டுவிட்டது.

ஐ.நா.வின் சரித்திரத்திலேயே 2015 அக்டோபர் 1ம் நாள் களங்கத்தைச் சுமக்கும் கருப்பு தினமாகிவிட்டது.

2009-ஆம் ஆண்டில் கொலைகார சிங்கள அரசுக்கு மனித உரிமை கவுன்சிலில் பாராட்டுத் தீர்மானம் கொண்டுவந்த இந்தியாவும், கியூபாவும் 29 நாடுகளின் ஆதரவோடு அந்த அநீதியான தீர்மானத்தை நிறைவேற்றின.

தற்போது இன்று நடைபெற்ற மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கொலைபாதக சிங்கள அரசையே குற்றங்களை விசாரிக்கும் தீர்ப்பாளியாக்கும் அக்கிரமமான தீர்மானத்தை அமெரிக்காவும், பிரிட்டனும், மாசிடோனியாவும், மாண்டிநீரோவும் முன்வைத்து, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் முழு ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றிவிட்டன.

கடந்த ஆண்டு மனித உரிமை ஆணையர் நியமித்த மார்ட்டி அட்டிசாரி குழு, இலங்கையில் ஈழத் தமிழர்கள் படுகொலையான எண்ணற்ற சம்பவங்களைப் பட்டியலிட்டு, உரிய நீதி விசாரணை வேண்டும் என்று விரிவான அறிக்கை தந்தது. அந்த மூவர் குழு இலங்கைக்குள் செல்வதற்கே சிங்கள அரசு அனுமதிக்கவில்லை.

பன்னாட்டு நீதி விசாரணை ஏற்படுத்தப்பட்டு, புலனாய்வு செய்யப்பட்டால், நடந்தது தமிழ் இனப் படுகொலை என்பது மெய்ப்பிக்கப்படும். ஆனால், இந்த இனப் படுகொலை நடத்துவதற்கு சிங்கள அரசுக்கு உடந்தையாக ஆயுதங்கள் வழங்கி செயல்பட்ட இந்தியா உள்ளிட்ட நாடுகள் குற்றச்சாட்டுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே சிங்கள அரசை வரிந்து கட்டிக்கொண்டு ஆதரித்தன.

சிரியா தேசத்தில் நடக்கும் படுகொலைகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் விசாரிப்பதற்கு ஐ.நா. வின் பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் பரிந்துரை செய்துள்ளார்.

இன்றைய உலகில் தமிழர்கள் நாதியற்றவர்களாக வல்லாண்மை நாடுகளால் ஆக்கப்பட்டு விட்டனர்.

இன்று மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தன்மானத் தமிழர்கள் எவரும் ஏற்க மாட்டார்கள். துன்ப இருளில் தவிக்கும் ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு வெளிச்சத்தைத் தர சூளுரைத்து கடமையாற்றுமாறு தமிழ்க்குலத்தின் இளைய தலைமுறையை – மாணவர்களை, தரணிவாழ் தமிழர்களை வேண்டுகிறேன்.
தடைகளையும் சதி வலைகளையும் தகர்க்கும் உறுதியோடு போராடுவோம்.