2ஆம் லெப்ரினன் மாலதி நினைவாக நடைபெற்ற சுதந்திரப்பறவைகள் எழுச்சி நிகழ்வு October 11, 2015 News 10.10.2015 சனிக்கிழமை மலை 6மணிக்கு நோர்வே ஒஸ்லோவில் தமிழ் மகளீர் அமைப்பால் 2ஆம் லெப்ரினன் மாலதி நினைவாக சுதந்திரப்பறவைகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட தொழிலாளர் கட்சியின் ஒஸ்லோ உபதலைவரும் ஒஸ்லோ மாநகர உறுப்பினருமாகிய கம்சாயினி குணரட்ணம் அவர்கள் 2ஆம் லெப்ரினன் மாலதியின் திருவுருவப்படத்திற்கு சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. இந்நிகழ்வில் நோர்வே வாழ் தமிழ் இளையோர்களின் சிறப்பான கலைவெளிப்பாடுகள் உணர்வோடு நிகழ்தேறியதுடன் ரிரிஎன் புகழ் கணேஸ் தம்பையா குழுவினரின் காலத்தின் நிஜத்தை வெளிப்படுத்திய நாடகம் எல்லோரையும் சிந்திக்கத்தூண்டியது. அத்தோடு நோர்வே மகளீர் அமைப்பால் வருடம்தோறும் வெளியிடப்படும் துருவமங்கை நூல்வெளியீடும் தமிழ்த்திறனை ஊக்கிவிக்கும் முகமாக மகளீர் அமைப்பால் நடாத்தப்பட்ட படம் பார்த்து கதை எழுதும் போட்டியில் வெற்றிபெற்ற சிறார்களுக்கான பரிசு வழங்கலும் நிகழ்வின் முக்கிய பதிவுகளாக அமைந்தது. மற்றும் தமிழ் மகளீர் அமைப்பின் தாயகம் நோக்கிய செயற்பாடுகள் தொடர்பான விபரணமும் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவின் சமகால அரசியல் உரையும் இடம்பெற்றதுடன் இறுதியாக இடம்பிடித்த நையாண்டிமேளப்புகழ் செல்வகுமாரன் ஒலிவர் அவர்கள் பாடிய என் இனமே என் சனமே பாடலும் தம்பையா கணேஸ் அவர்கள் பாடிய ராஜகோபுரம் எங்கள் தலைவன் என்ற பாடலும் மண்ணினதும் மக்களினதும் நினைவுகளுடன் எமது எண்ணங்களை கட்டிப்போட்டது.