சிறிலங்காவில் நீண்டகாலமாகச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள்,  பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி நேற்று ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளை எட்டியுள்ளது.

மொனராகல, அனுராதபுர, நீர்கொழும்பு, பொலன்னறுவை, மட்டக்களப்பு, மகசின், பதுளை, வெலிக்கடை, தும்பறை உள்ளிட்ட 14 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதி கள் நேற்றுக் காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியை சிறைச்சாலையிலேயே கழித்து விட்டோம். எஞ்சியிருக்கும் சொற்பகாலத்தையாவது எமது மனைவி, பிள்ளைகள், பெற்றோர், உறவுகளுடன் கழிக்க விரும்புகின்றோம்.

வேறு எதனையும் நாம் கோரவில்லை. அவர்களுடன் எம்மை இணைத்து விடுங்கள் என்று உண்ணாவிரதத்தை ஆரம்பித்த அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் சிறிலங்காவின் அனைத்துச் சிறைச்சாலைகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் கண்டி போகம்பரை சிறைச்சாலையில் மட்டும், போராட்டத்தை முன்னெடுப்பதற்கு நேற்று அனுமதி மறுக்கப்பட்டது.

சிறைச்சாலை நிருவாகத்திடம் முன்கூட்டிய அறிவிக்காத காரணத்தினாலேயே அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ள தமிழ் அரசியல் கைதிகள், தமக்கு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தினராலும் ஏனைய கைதிகளாலும் எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படுத்தப்படவில்லையெனவும், தாம் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டனர்.

இதற்கிடையே, உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக, அரசியல் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் அறிக்கைகளை வெளியிடடுள்ளன.

மேலும், இவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க சிறிலங்கா அதிபர் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இது தொடர்பாக சிறிலங்கா அதிபருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.