tamilini-page-001
சுதந்திரப்பறவை
சிறகுடைந்து
சிறைக்குள் வீழ்ந்துபோனது.

புனர்வாழ்வு பூதத்தின்
இனவாத வாயுக்குள்
குதறுண்டுபோனது.

குற்றுயிராய்
சிறைமீண்டதும்
கொடியபுற்றுநோய்
கொண்டுபோனது.

பதினெட்டு ஆண்டுகள்
பரணி பாடிய
பறையொன்று
ஒலியிழந்து போனது.

பெண்ணியம் பேசிய
பெருமேதையொன்று
மண்ணின் பசியோடு
விண்ணுலகம்போனது.

விடுதலையின்
கண்ணியம் காத்த
கண்ணகியொன்று
கண்ணகன்றுபோனது.

கழப்பின்றி
களப்பணியாற்றிய
காவியமொன்று
காற்றடங்கிப்போனது.

ஜயகோ
நேற்றுவரை
மூசியடித்த
புயலொன்று
புகழுடலாய்போனது.
-தூயவன்-