போர்க்களங்களில் புயலாக நின்ற வீரன் பிரிகேடியர் மணிவண்ணன் April 4, 2016 News தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட மணிவண்ணன். தொடக்க காலத்திலேயே கேணல் ராயு அவர்களுடன் இணைந்து தனது விடுதலையின் பணியை மேற்கொண்டிருந்தார். கேணல் ராயு அவர்களின் வீரச்சாவுக்கு பின்னர் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்தார். கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களின் செயர்ப்பாட்டுக் காலப்பகுதியில் தான் சிறிலங்காப்படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்லறித் தாக்குதலில் பாரிய இழப்புக்களை சந்தித்திருந்தது என்பது குறிப்பிடத் தக்ககது. பலாலித் தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள், முகமாலை – பளை மீதான தாக்குதல்கள் மற்றும் வவுனியா ஜோசப் தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள் அதே போன்று மன்னார் சிறிலங்கா படைத்தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள் என்று பிரிகேடியர் மணிவண்ணன் அவர்கள் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட காலப்பகுதியில் சிறிலங்கா படைத்தரப்பு பாரிய நெருக்கடிகளை சந்தித்திருந்தது உண்மையே. அதே போன்று முகமாலை சமர்க்களத்திலே ஆட்லறிகளின் நேரடி சூச்சின் மூலம் பல ராங்கிகளை அழித்ததும் இவரின் காலப்பகுதியிலே தான். விடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது. முன்னேறுகின்ற படையினரின் வழங்கல் தளங்களையும், முதன்மையான படைத்தளங்களையும் தாக்கியழிக்கும் கடமையே கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணிக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தொடக்க காலத்தில் இவ்வாறான பல தாக்குதல்களை கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணி மேற்கொண்டிருந்தாலும், போர் நெருக்கடியான காலங்களை சந்தித்திருந்த போதிலும் அதாவது வன்னிமண்ணை சிறிலங்காப் படைகள் முற்றுகையிட்டு மண்ணையும் மக்களையும் சூற்றிவளைத்திருந்த காலப்பகுதியில் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் செயற்பாடுகள் மாற்றமடைந்திருந்ததன. அதாவது தொலைதூரத் தாக்குதலுக்கு பதிலாக இராணுவத்துடன் நேரடி சூட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தன. இந்த வகையில் தான் புதுக்குடியிருப்பு மண் சிறிலங்கா படைகளின் வல்வளைப்புக்குள் சென்றுகொண்டிருந்தபோது நேரடியாகவே ஆனந்தபுர மண்ணிலே பல ஆட்லறி நிலைகளை உருவாக்கி நேரடியான பல தாக்குதல்களை படையினர் மீது ஏற்படுத்தி பல இழப்புக்களை ஏற்படுத்திய வண்ணம் இருந்தனர். அந்தக் களமுனைகளிலே போராளிகளுக்கு பிரிகேடியர் மணிவாணன் அவர்கள் கட்டளைகளையும் வழங்கிக்கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் சிங்களப் படையின் தாக்குதலில் ஆனந்தபுர மண்ணிலே பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் இன்னும் சில தளபதிகளும், போராளிகளும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார். கேணல் தமிழ்செல்வி உலகத்தில் வாழும் தாய்களுக்கெல்லாம் பெருமை தேடித்தந்தாள் ஆனந்தபுரத்தில் எங்கள் தமிழ்செல்வி. உக்கிரமான போர்க்களம் என்று தெரிந்து கொண்டும் இரண்டு வயதுக் பெண்குழந்தையை அருகிருந்தவர்களிடம் விட்டுக் களம் புகுந்தவள் இவள். கள நிலவரங்களைத் தெரிந்து கொண்டும் தான் பெற்ற பிள்ளையை விட்டு தன் தாய் நிலம் காக்க ஓடியவள் இவள். களத்தில் தன் தளபதி பிரிகேடியர் விதுசாக்காவிற்குப் பக்கதுணையாக நின்று போர் புரிந்தவள் இவள். தளபதிகளான பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா அக்களத்தில் வீரச்சாவைத் தழுவிய போது, அனைத்துப் பெண் போராளிகளையும் ஒழுங்குபடுத்தி, வழிநடத்திப் போர் புரிந்தவள் இவள் . களத்தில் தான் வீரமரணம் அடைவது உறுதி எனத் தெரிய வந்த போது, தன் தோழிக்கு தொலைத்தொடர்பு மூலம் சொன்னாளாம் “நான் இந்தச் சண்டையிலை இருந்து நிச்சயம் உயிரோடு வரமாட்டன். என்ரை பிள்ளையை நீங்கதான் எல்லாரும் பார்க்கணும். நீங்க எல்லாரும் பார்ப்பீங்கள் என்ற நம்பிக்கையோடு நான் போறன்” அவள் தோழி ” தினமும் அவள் வார்த்தைகள் தன் காதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது” எனக் கூறி கண்கலங்கி நின்றபோது…….. அவள் வார்த்தைகள் அனைவரையும் புல்லரிக்கச் செய்தது. அவளுடைய அந்தச் சாதனைகள் விண்ணைத் தொட்டு நிற்கின்றது. சிறுவயதில் போராட்டத்தில் இணைந்த இவள் மணலாற்றில் தன்னுடைய பயிற்சியினை எடுத்து முடித்தவள். மணலாற்றில் உள்ள மண்கிண்டி மலையில் ஓர் தாக்குதலில் தன் திறமையை வெளிக்காட்டி அனைவராலும் இனம் காணப்பட்ட ஒரு போராளி ஆனாள். கனரக ஆயுதங்களைக் கையாள்வதில் இவளுக்கு நிகர் இவளே. அனைத்துக் கனகர ஆயுத பயிற்சிகளையும் இலகுவாகப் பயின்றது மட்டுமின்றி, பிரதான கனரகப் பயிற்சி ஆசிரியருமானாள். ஜெயசிக்குறுவில் அவளுக்கென்று தனி வரலாறு உண்டு. அனைத்துக் காலநிலைகளிலும் நடந்த இச்சமரில் அவளுடைய பாதம் படாத இடமே இல்லை. மாலதி படையணியின் தளபதியாக பல களங்களை வழி நடத்தி, சாதனையாளராகப் தலை நிமிர்ந்து நின்றாள். விதையாகிப் போன கேணல் தமிழ்செல்வியே ! விழி மூடித் துயில் கொள்ளு….. உன் கனவு நனவாகும். அதுவரையும் ஓயோம். கேணல் கோபித் , லெப் கேணல் அமுதாப் சாள்ஸ் அன்ரனி படையணியின் தளபதிகளாகாக களம் பலகண்டவர்கள். இறுதி முச்சு வரையும் போர்களங்களில் போராடிய இளம் தளபதிகள், சொல்லி வைத்து செயலாற்றுவதில் இவர்கள் உத்தமர்கள். ஆனந்த புரத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட இவர்களை நெஞ்சில் இருத்தி தியானிப்போம். கேணல் கோபித் இவன் ஒரு வேவுப்புலி வீரனாகவே எனக்கு அறிமுகம். மெலிந்த உயரமான இவன் கண்களில் மட்டும் தேடலுக்கான ஒளி கூர்ந்த பார்வை நிறைந்திருக்கும். ஆம் இவன் புகாத எதிரி முகாம் இல்லை எனலாம்.தனது போராட்ட வாழ்க்கையில் பெரும் பகுதியை வேவுப்பணிக்காகவே செலவிட்டவன். பிரிகேடியர் பால்ராஜ், கேணல் தீபன், கேணல் ஜெயம் இவர்களோடு அருகிருந்து தன் பணியை சிறப்பாகச் செய்து தலைவர் வரை விரும்பப்ட்டவன். இவனது பொறுப்பில் வேவுபார்த்து நடாத்தப்பட்ட பல இராணுவமுகாம் தகர்ப்புக்கள் எமக்கு முழுமையான வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளது. எதிரியின் குகைக்குள் சென்று பட்டி தொட்டியெல்லாம் புகுந்து விளையாடியவன். அத்தோடு நின்றுவிடாது சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறந்த சண்டைக்காரன், ஒரு பொறுப்பாளன் இவ்வாறு வளர்ந்தவன் இறுதியில் சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத்தளபதியுமானான். அன்று தொட்டு இறுதிவரை கட்டளைத் தளபதியாகவும் இருந்து பலநூறு வீரர்களை வழிநடத்தியவன். இவனுடைய தியாகமும், வீரமும், நற்குணமும் நிறைந்து கிடக்கும் வீரவரலாற்றை என் பேனாவுக்குள் அடக்கிவிட முடியாது. இறுதிவரை நின்று கடுஞ்சமர் புரிந்தவன். ஆனந்தபுர ஆரம்பச்சமர்க்களத்தில் தனது படையணியை வழிநடத்தி சண்டையில் எதிரியை திணறடித்து வீரமரணம் அடைந்தாலும் எமது தமிழீழ வரலாற்று பதிவில் இவனுக்கு தனியிடம் உண்டு. கேணல் சுயாகி , லெப் கேணல் மெய்யறிவு இம்ரான் பாண்டியன் படையணியில் பல பணிகள் ஆற்றிய இந்த வீரர்கள் பிரிகேடியர் ஆதவனோடு ஆனந்தபுரத்தில் களமாடி காவியமானார்கள்.நீண்ட வரலாறுகளைத் தந்த இந்த வீரர்களை மனத்திருத்தி தியானிப்போம். கேணல் சுயாகி சுயாகி அண்ணை என்றால் அண்ணையின் ஆயுதங்களாகட்டும், இதரபொருட்களாக இருக்கட்டும் அதற்குரிய பாதுகாப்பாளன் இவனே. வெளியில் அறியப்படாத, ஏன் போராளிகளுக்குக் கூட பெரியளவில் அறிமுகமில்லாதவன். ஆரம்பத்தில் மணலாற்றுக் காடுகளில் அண்ணன் இருந்த காலந்தொட்டு ஆனந்தபுரத்தில் தலைவரோடு நின்று பாதுகாப்புச்சமரில் ஈழமண்ணை முத்தமிடும் வரை ஒரே பணியை செய்தவன்.அப்பணிக்கான பொறுப்பாளன். அண்ணனின் நம்பிக்கைக்குரிய இரகசியக் காப்பாளன். அதனால்த்தான் 23வருடங்களுக்கு மேலாக தலமை அருகிருக்கும் பாக்கியம் கிடைத்தது. தன் பணியில் மிகவும் கண்ணியமுடையவன். திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தந்தை இவன். இவனது வீட்டுத்தோட்டத்தில் காய்கறி மற்றும் பழவகைகளுக்குக் குறைவிருக்காது. எங்கு சென்றாலும் தன் வீட்டுப் பழவகை, காய்கறிகள் கொண்டு சென்று கொடுப்பது இவனது தாராள மனம். இவனுடைய பணி மிகவும் கடினமானது. போராளிகளை இவனது அன்பான வழி நடத்தலால் அப்பணிக்கு சுலபமாக்கியவன். அனைவரையும் மதித்து நடக்கும் ஒரு பண்பாளன். ஆனந்தபுரத்தில் அண்ணனுக்கு துணை நின்றான். இறுதிகளத்தில் கரும்புலிகளுக்கு நிகரான சமர்க்களத்தில் சமராடி வீரமரணம் அடைந்த செய்தி எம் தலைவனுக்கும், எம்மண்ணுக்கும் பேரிழப்பாகும். இறுதிவரை உறுதியோடு அமைதி காத்தவன். அப்படியே துயில்கின்றான் எம்மினத்தின் விடியலுக்காய்…. கேணல் அமுதா பெண்ணாக பிறந்து புலியாக மாறி புயலாக எழுந்து பல களம் கண்ட வீரத் தளபதி இவள். ஆனந்தபுரத்தில் மோட்டார் அணியின் பெண் போராளிகளை வழிநடத்தி களத்தில் காவியமானவள். அமுதா பயிற்சிமுகாம் முடிந்த கையோடு கனரக ஆயுதப்பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். அங்கு 60mm மோட்டார் அணியில் ஒரு காப்பாளராக பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் போதே எனக்கு அறிமுகம்.நிறத்த மெல்லிய நெடுத்த அவளது தோற்றம் கனரக ஆயுதத்திற்குப் பொருத்தமில்லாதவாறே பார்ப்பவர்கள் கணிப்பிடுவர்.முகத்தில் என்றும் அமைதி குடிகொள்ள யாரை கண்டாலும் ஒரு சிரிப்பே இவளது பதிலாக இருக்கும். கதைப்பது குறைவு ஆனால் பயிற்சி வேளையில் உருவத்திற்கு பொருத்தமில்லாதா சுமையை 60mm செல் பெட்டியை நிறைத்த மணலோடு தூக்கி கடின பயிற்சிகளை எல்லாம் இலாவகரமாகச் செய்து முடித்தாள். படிப்படியாக 60mm மோட்டார் கண்ணர், இரண்டு மோட்டார்களின் பொறுப்பாளர் என இவளுடைய பயிற்சி ஆசிரியர்களின் அரவணைப்பில் வளர்ந்தாள் எனலாம். மேஜர் சௌதினி,மேஜர் கோகிலா இவளுடைய பெரும் வழிகாட்டிகள். தொடர்ந்து 82mm மோட்டார் தொட்டு 5 இன்சி வரை வைத்து இலகுவாகச் சண்டை செய்தவள். தனது ஒரு காலை இழந்த பின்பும் பல மோட்டார் அணிகளின் ஒருங்கிணைப்புப் பொறுப்பாளராய் சிறப்பாகச் செயல்ப்பட்டு ஆனந்தபுரத்தில் கேணல் அமுதாவாக விதையாகிப் போனாள். கரும்புலி லெப் கேணல் கிந்துஸ்தானி வெடிகுண்டை உடம்பில் கட்டி கண் இமைக்கும் நேரத்தில் பல எதிரிகளை கொன்று குவித்து ஆனந்தபுரத்தில் சாதனை படத்த தமிழினத்தின் தடை நீக்கியே உன்னை மறந்துடுமா நெஞ்சம். ஆனந்தபுரக்போர்க்களத்தில் போராடி வீரமரணம் அடைந்த புனிதா, லெப்-கேணல் மோகனா, மேஜர் தென்னரசி, மேஜர் குலமதி, கப்டன் தமிழினி, கப்டன் தமிழ்முகில் ,கப்டன் அமுதினி, கப்டன் இசைஎழில், கப்டன் காவேரி, கப்டன் மதியொளி, கப்டன் அலையரசி, கப்டன் அகல்மதி ஆகியோரையும் இன் நாளில் நினைவு கூரு கிறோம். சித்திரை மாதம் , 05ம் திகதி மட்டும் நடந்த இந்தச் சமரில் இறுதிவரை எதிரியோடு சமரிட்டு காவியமாகிய 450க்கு மேற்பட்ட மாவீரர்களையும் இந்நாளில் நெஞ்சிருத்தி நினைவு கூறுகிறோம்.