வடக்கென்ன கிழக்கென்ன தமிழீழமே எமது தாயகம் April 5, 2016 News மட்டக்களப்பு புல்லுமலையை பிறப்பிடமாகக் கொண்ட கேணல் நாகேஸ் 1985-86 காலப் பகுதியில் தன்னை விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். ஆரம்பகாலத்தில் லெப்.கேணல் றீகன் அவர்களின் அணியில் தனது சமர்க்களப் பணியை ஆரம்பித்தார். காலங்களில் சிறப்பாக செயல்ப்பட்ட அவர் இந்திய ஆக்கிரமிப்பு படைகளுக்கெதிரான யுத்தம் ஆரம்பமானபோது புல்லுமலைப் பகுதி விடுதலைப் புலிகளின் முகாமின் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டார்.Col-Nagesh இந்தக் காலகட்டத்தில் அவரின் தலைமையில் இந்திய,சிறிலங்கா படையினருக்கெதிரான பல வெற்றிகரத் தாக்குதல்கள் நடத்தப் பட்டன. இத்தாக்குதல் நடவடிக்கைகள் பலவற்றில் ஆயுதங்களும் கைப்பற்றப் பட்டன. கண்ணிவெடித் தாக்குதல்களில் அவருக்கென்று தனியிடமொன்று இருந்தது.நாகேசால் பல வெற்றிகர கண்ணிவெடித் தாக்குதல்கள் நடத்தப் பட்டிருந்தன.ஆயினும் இந்தியப் படைகளின் (“தீப்பெட்டி ஜீப்”) மிகச் சிறிய ஜீப் வண்டிமீது தாக்குதல் நடத்துவது பெருத்த சவாலாக இருந்தது. அதன் பருமன் வேகம் என்பன வெற்றிகரமான கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றை கேள்விக் குறியக்கிநின்றது. ஆனால் மண்டூர் என்ற இடத்தில் வைத்து நாகேஸ் மேற்கொண்ட தாக்குதலில் அந்த ஜீப் வண்டி சுக்குநூறானது. இந்திய படையினர் வெளியேறியதைத் தொடர்ந்து துரோகிகளுடனான சண்டைகளில் நாகேசின் அணி பல முனைகளிலும் பங்குகொண்டு அவர்களைச் சிதறடித்தது. பின்னர் நடைபெற்ற சிறிலங்கா படைகளுடனான பல்வேறு சண்டைக் காலங்களில் நாகேஸ் தலைமையில் அணிகள் சமரிட்டன. காலத்தின் தேவையை உணர்ந்து தமிழ் ஈழ எல்லைகள் கடந்தும் போரிடவேண்டிய கடமை நாகேசிக்கு வழங்கப் பட்டது. நகேசின் அந்த சிறிய அணி மலையகம் வரை தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தியிருந்தது. மலையகத்தில் கூட தாக்குதல் நடத்தி ஆயுதங்கள் கைப்பற்றிய பெருமை கேணல் நாகேஸ் மற்றும் அவருக்கு துணைநின்ற மேஜர் விஸ்ணு (சின்னப் புல்லுமலை) ஆகியோருக்கே உரித்தாகும். மலையகத்தில் மிகச் சிறிய இந்த அணிக்கெதிராக சிறிலங்கா படைத்தரப்பு ஆயிரக்கணக்கில் படையினரை ஈடுபடுத்தியிருந்தது. பூநகரி படைத்தள அழிப்பு நடவடிக்கைகளுக்கென மட்டக்களப்பு அம்பாறைப் பிராந்தியத்தில் இருந்து போராளிகள் புறப்பட்ட போது நகேசின் அணியும் அதில் இடம்பெற்றது. ஜெயந்தன் படையணி உருவாக்கப் பட்டபோது தாக்குதல் தளபதிகளில் ஒருவராக நாகேஸ் நியமிக்கப் பட்டார். நாகதேவன் துறைப் பகுதிக்கு தளபதி அன்பு தலைமையில் சென்ற அணியில் ஜெயந்த படையணியின் ஒரு பிரிவு நாகேஸ் தலைமையில் களமிறங்கியது. அந்தமுனையிலும் ஜெயந்தன் படையணி தனது போர்க்குனத்தக் காட்டியது. பின்னர் பலாலி முனரங்க பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளில் நாகேஸ் தலைமையிலான அணிசெயட்பட்டது. மீண்டும் தென்தமிழீழம் சென்ற அணிகள் பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. பின்னர் ஜெயசிக்குறு எதிர் சமருக்காக படியங்கள் கிழக்கில் இருந்து வன்னி வந்தபோது நாகேசும் ஜெயந்தன் படையணித் தளபதிகளுள் ஒருவராக களம் வந்தார். ஜெயசிக்குறு களமுனைகளில் பகுதிப் பொறுப்பாளராக கடமையாற்றிய கேணல் நாகேஸ் ஓயாத அலைகள் நடவடிக்கைகளிலும் அணித் தலைமையேற்று வழிநடத்தினார். விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணி யில் நாகேஸ் செயல் பட்டுக் கொண்டிருந்தாலும் மக்கள் நலச் செயற்பாடுகளிலும் அவர் கவனம் செலுத்தத் தவறவில்லை. புல்லுமைப் பிரதேசம் எங்கும் மக்களால் நேசிக்கப் பட்ட ஒரு போராளியாக அவர்.விளங்கினார். இவற்றிக்கு மேலாக மட்டக்களப்பின் எல்லைகளைக் காத்து நின்ற ஒரு வீராகவும் அவர் கொள்ளப் படுகிறார். இப்பகுதி சிங்களப் படையினருக்கும் சிங்களக் காடையருக்கும் நாகேஸ் என்றபெயர் எப்போதும் அச்சமூட்டும் ஒன்றாகவே இருந்துவந்தது. இவ்வாறு இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தன் உடலெங்கும் விழுப் புண் தாங்கி தமிழீழத்தின் களங்கள் யாவும் ஏன் அதற்கு அப்பாலும் தொடர்ந்து களமாடிய மாவீரன் கேணல் நாகேஸ். அவனுக்கும் மனைவி குழந்தைகள் இருந்தனர் ஆனாலும் அந்த மாவீரன் அவற்றிற்கு மேலாக இந்த மண்ணை மக்களை நேசித்தான். வடக்கென்ன கிழக்கென்ன தமிழீழமே எமது தாயகம் என்று இறுதிவரை களமாடிய அந்த மாவீரன் ஆனந்த புரத்தில் தன்னை ஆகுதியாக்கினான்.