அன்னை பூபதி அவர்களின் 28 வது நினைவு கூரல் பேர்லினில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது April 25, 2016 News, TCC அன்னை பூபதி அவர்களின் 28 வது நினைவு கூரல் பேர்லினில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது சுதந்திர தமிழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி. அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் !அன்னை பூபதியின் மரணம் சம்பவித்தவுடன் ஏற்பட்ட அதிர்வலைகள் தமிழீழ மக்களை எல்லாம் ஒட்டு மொத்தமாகப் பாதித்தது. இந்திய அரசையும், அதன் எண்ணங்களுக்கு உட்பட்ட தீர்வையும் நிராகரித்து தமிழீழமே இனி எங்கள் தேசம் என்ற உறுதியான எண்ணத்தை மக்கள் மனதில் தூக்கிப் போட்டது. அன்னை பூபதி கண்களை மூட, தமிழ் மக்கள் இதயக் கண்கள் அனைத்தும் ஒரு நொடி ஒற்றுமையாக அகலத் திறந்தன. ஆம் ! அந்த நொடியிலேயே கண்ணுக்குத் தெரியாத தமிழீழம் மலர்ந்து விட்டது.அன்னை பூபதி அவர்களின் 28 வது ஆண்டு நினைவு நாள் மற்றும் நாட்டுப்பற்றாளர் தினம் மிகவும் உணர்வுபூர்வமாக யேர்மனி பேர்லின் நகரில் நடைபெற்றது . வணக்க நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றி, மலர்வணக்கம் ,அகவணக்கம் செலுத்தப்பட்டது .அன்னை பூபதி அம்மா வின் வரலாற்றுத் தொகுப்பு காணொளி ஊடாக காண்பிக்கப்பட்டது. அத்தோடு காலத்தின் தேவை கருதி தாயக மக்களுக்கு செய்யப்பட்ட வாழ்வாதார உதவிகளின் விபரங்களும் , வலிசுமந்த மாதத்தில் செய்யப்பட இருக்கும் வேலைத்திட்டங்கள் சார்ந்தும் எடுத்துரைக்கப்பட்டது. மாவீரர்களுக்கான வணக்கத்தோடு நாம் நில்லாமல் அவர்கள் எந்த இலட்சியத்துக்காக போராடினார்களோ அந்த உயரிய இலட்சியத்துக்காக நாம் அனைவரும் தொடர்ந்தும் போராட வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என முழக்கமிட்டு வணக்க நிகழ்வு நிறைவுபெற்றது .