WhUq0eJJGZEபூகோள அரசியலும் புவிசார் அரசியலும்- வேல் தர்மா April 28, 2016 News, Political article பூகோள அரசியல் உலகெங்கும் உள்ள நாடுகளில் எந்த மாதிரியான ஆட்சி முறைம நிலவ வேண்டும் எந்த மாதிரியான பொருளாதாரக் கொள்கைகள் இருக்க வேண்டும் என்பது பூகோள அரசியலாகும். நாடுகளிடையேயான உறவுகள், உலக வர்த்தகம், உலக சுகாதாரம், மதங்களிடையேயான முரண்பாடு, உலக சூழலின் சுத்தம், உலகப் போக்குவரத்து, விநியோகம், ஆகியவற்றில் அக்கறை கொள்வதும் பூகோள அரசியலாகும். மனித உரிமைகள் மீதான அக்கறையும் பூகோள அரசியலில் ஒரு கருவியாக உள்ளடக்கப்பட்டுள்ளது எனச் சொல்லலாம். புவிசார் அரசியல் புவிசார் அரசியல் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்கள் தொகைக் கட்டமைப்பும் பொருளாதாரமும் தொடர்பான ஆதிக்கமாகும். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்களின் அரசியல் ஆதிக்கம் பொருளாதார வளங்கள் மீதான ஆதிக்கம், ஆட்சி முறைமை, அரசுகளிடையான உறவுகள் என்பவை புவிசார் அரசியலில் முக்கியத்துவம் பெறுகின்றன. பல பிராந்தியங்களில் உள்ள புவிசார் அரசியலையும் அவற்றின் இடையே உள்ள தொடர்புகளையும் கருத்தில் கொள்வது பூகோள அரசியலாகும். மாவீரன் அலெக்சாண்டர், கிளியோப்பட்றா போன்றோரில் இருந்து பலர் உலகை ஆள வேண்டும் என நினைத்துத் தோல்வி கண்டனர். ஹிட்லருக்குப்பின்னர் யாரும் உலகை ஆள வேண்டும் என்ற முனைப்புடன் செயற்படுவதில்லை என்றே கூறலாம். உலகம் முழுவதும் பொதுவுடமை ஆட்சி முறைமை நிலவ வேண்டும் என்ற பலருடைய கருத்து சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் வலுவிழந்து விட்டது. ஆனாலும் 1848-ம் ஆண்டு உலகத் தொழிலாளர்கள் ஒன்று படுங்கள் என மாக்ஸும் ஏங்கெல்ஸும் முன்வைத்த கோரிக்கை இன்றும் உயிர்ப்புடனே இருக்கின்றது. பூகோள அரசியலும் அமெரிக்காவும் உலகம் முழுவதும் தமக்குச் சார்பான ஆட்சியாளர்களும் ஆட்சி முறைமையும் இருக்க வேண்டும் என்பதில் தற்போது ஐக்கிய அமெரிக்கா அதிக விருப்புடன் இருக்கின்றது. பூகோள அரசியலில் அதிக அக்கறை காட்டும் நாடாக அமெரிக்காவே இருக்கின்றது. அமெரிக்கத் தேர்தலில் போது அதிகம் விவாதிக்கப்படும் பொருட்களாக “உலகப் பாதுகாப்பும்” உலகெங்கும் அமெரிக்காவின் செயற்பாடுகளும் இருக்கின்றன. அந்த அளவிற்கு வேறு எந்த நாடுகளிலும் விவாதிக்கப்படுவதில்லை. தற்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைப் பற்றி விமர்சிக்கும் உள்ளூர் அரசியல்வாதிகள் அதிகம் முன்வைக்கும் கருத்து உலக அரங்கில் அவரது செயற்பாடுகள் பற்றியதாகவே இருக்கின்றது. தென் சீனக் கடல், கிழக்குச் சீனக் கடல் ஆகிய இரண்டும் உட்பட்ட ஆசிய பசுபிக் பிராந்தியம், மத்திய கிழக்கு, கிழக்கு ஐரோப்பாவில் இரசியாவின் செயற்பாடுகள், மேற்கு ஐரோப்பாவின் பாதுகாப்பு, மத்திய ஆபிரிக்காவில் உள்ள தீவிரவாதம், போன்றவை தொடர்பாக “கரிசனை” கொண்டு செயற்படும் நாடாக ஐக்கிய அமெரிக்காவே இருக்கின்றது. பூகோள அரசியல் என்று பார்த்தால் அது அமெரிக்கா முன்னெடுக்கும் அதனது வெளிநாட்டுக் கொள்கை மட்டுமா எனக் கேட்கும் அளவிற்கு உலகெங்கும் ஐக்கிய அமெரிக்காவின் செயற்பாடுகள் இருக்கின்றன. இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதையிட்டு இந்தியாவிலும் பார்க்க அதிகமாக அல்லது ஈடாக அக்கறை காட்டும் நாடாக அமெரிக்காவே இருக்கின்றது. சீனாவுடன் உலக அரங்கில் முரண்பட்டுக் கொண்டிருந்த ஐக்கிய அமெரிக்கா எழுபதுகளில் சோவியத் ஒன்றியம் சீனாவை ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சம் நிலவியபோது சீனாவுடன் ஒன்றை ஒன்று பாதுகாக்கும் ஒப்பந்தத்தைச் செய்தது. அமெரிக்கப் பொருளாதாரமும் பூகோள அரசியலும் இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலக மொத்த உற்பத்தியின் அரைப்பங்கிற்கு மேற்பட்ட உற்பத்தியை அமெரிக்கா செய்து அது உலகின் முன்னணிச் செல்வந்த நாடாக மாறியது. அமெரிக்க நாணயமான உலக அரங்கில் அதிகம் பாவிக்கப்படும் நாணயமானது. அந்த பொருளாதார ஆதிக்கத்தை தொடர்ந்து பேண அமெரிக்கா பூகோள அரசியலைக் கையில் எடுத்துக் கொண்டது. தனது உற்பத்திக்குத் தேவையான உலகெங்கும் உள்ள மூலப் பொருட்களை மலிவான விலையிலும் பாதுகாப்பாகவும் தனது பொருட்களை உலகெங்கும் விற்பனை செய்யவும் அமெரிக்கா உலகப் பாதுகாப்பில் அக்கறை காட்டியது. அதன் தலையான குறிக்கோள் உலகில் பொதுவுடமை வாதம் பரவாமல் தடுப்பதும் அதை ஒழித்துக் கட்டுவதாகவும் இருந்தது. உலக ஒழுங்கு என்னும் ஒரு பதத்திற்குள் அமெரிக்கா தனது உலக ஆதிக்க ஆசையை மறைந்திருந்துக் கொண்டது. அமெரிக்கா இதற்காக தனது கடற்படையை ஒரு தன்னிகரில்லா நிலைக்கு உயர்த்திக் கொண்டது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பு உலகில் தனது ஆதிக்கத்தை வளர்த்தது. அமெரிக்க நாணயம் உலக நாடுகளிடையிலான கொடுப்பனவுகளில் மட்டுமல்ல கடன் வழங்கலிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. 2009-ம் ஆண்டு நிகழ்ந்த உலகப் பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னர் வளர்முகநாடுகள் டொலரில் பட்ட கடன்களின் மொதத் தொகை இரண்டு ரில்லியன் டொலர்களில் இருந்து நான்கரை ரில்லியன்களாக உயர்ந்துள்ளது அமெரிக்காவின் கட்சி அரசியலும் பூகோள அரசியலும் அமெரிக்காவின் பூகோள அரசியலில் அங்குள்ள இரு அரசியல் கட்சிகளான குடியரசுக் கட்சியும் மக்களாட்சிக் கட்சியும் பெரும்பாலும் ஒத்துப் போகின்ற போதிலும் சில விடயங்களில் முரண்படுகின்றன. ஆனால் இந்தக் கட்சிகளுக்குள் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. அதிபர் பராக ஒபாமா டெமொக்ரட்டிக் பார்ட்டி எனப்படும் மக்களாட்சிக் கட்சியை சேர்தவர் ஆனால் அவரை டெமொக்கிறட்ஸ் என்று சொல்வதிலும் பார்க்க லிபரல் டெமோக்கிறட்ஸ் என்றே அதிகம் சொல்கிறார்கள். மக்களாட்சிக் கட்சிக்குள் முற்போக்கு மக்களாட்சியினர், தாராண்மை மக்களாட்சியினர், பழமைவாத மக்களாட்சியினர், தொழிற்சங்கவாதிகள், கிருத்தவவாதிகள், மதசார்ப்பற்றவர்கள் என பதினைந்திற்கு மேற்பட்ட பிரிவினர் உண்டு. குடியரசுக் கட்சியில் மரபுவாதிகள், பழமைவாதிகள், Neoconservative எனப்படும் புதிய பழமைவாதிகள், மிதவாதிகள், தாராண்மைவாதிகள் எனப்பத்திற்கு மேற்பட்ட உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர்கள் ஒரு சட்டத்திற்கு வாக்களிக்கும் போது தமது கட்சிக் கொள்கையிலும் பார்க்க தமது உட்பிரிவின் கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதை விட ரீ பார்ட்டி என்னும் ஒரு முக்கிய குழு உள்ளது. இது குடியரசுக் கட்சியிலும் மக்களாட்சிக் கட்சியிலும் இருக்கும் வரி விதிப்பிற்கு எதிரான கொள்கையைக் கொண்டவர்களின் குழுவாகும். Taxed Enough Already என்ற சொற்தொடரின் முதலெழுத்துக்களான ரீ ஈ ஏ ஆகிய எழுத்துக்களை ஒன்று சேர்த்து இது ரீ பார்ட்டி எனப்படுகிறது. உலகெங்கும் முதலாளித்துவத்தை வளர்ப்பதை அடிப்படைச் சுதந்திரம், மனித உரிமை, தாராண்மை மக்களாட்சி என்னும் பெயர்களில் இரு கட்சிகளும் முன்னெடுக்கும். இரு கட்சிகளும் அமெரிக்காவின் உலக மேலாண்மைக்கு ஒத்து வராத ஆட்சியாளர்களைப் பதவியில் இருந்து விலக்கி தமக்குச் சாதகமானவர்களை ஆட்சியில் அமர்த்துவதில் ஒத்துப் போகின்றன. ஆனால் மக்களாட்சிக் கட்சியின் தாராண்மைவாதிகள் தமக்குச் சார்பாக ஆட்சியில் இருப்பவர்கள் தமது நாட்டின் மக்களின் மேல் அக்கறை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். குடியரசுக் கட்சியினர் அமெரிக்காவிற்குச் சார்பான ஆட்சியாளர்கள் தமது நாடுகளை எப்படி ஆள்கின்றார்கள் என்பதில் காட்டும் அக்கறை குறைவு. அமெரிக்காவின் தற்போதைய பூகோள அரசியல் பிரச்சனைகள் 1. இரசியாவை (புட்டீனை) அடக்குதல் 2. சீன விரிவாக்கத்தைத் தடுத்தல் 3. ஈரானை அணுக்குண்டு தயாரிக்காமல் தடுத்தல் 4. பலஸ்த்தீன இஸ்ரேலியப் பிரச்சனையைத் தீர்த்தல் 5. உலக சூழல் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்தல் 6. ஆசிய பசுபிக் நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தல் 7. மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் நட்பை மேம்படுத்தல் 8. இசுலாமிய நாடுகளுடனான ஒற்றுமையை உருவாக்குதல் 9. இசுலாமியத் தீவிரவாதத்தை ஒழித்தல் 10. ஆப்கானிஸ்த்தான் போரை முடிவுக்குக் கொண்டுவருதல் ஆனால் அமெரிக்க மக்கள் உலக அரங்கில் அமெரிக்காவின் ஆதிகத்தை அங்கீகரிக்கும் நிலையில் இருந்து விலகிச் செல்கின்றார்கள். அமெரிக்காவின் உள்நாட்டுப் பிரச்சனையும் பொருளாதாரப் பிரச்சனையும் இதன் பிரதான காரணிகளாகும். ஆனால் அமெரிக்க ஆட்சியாளர்கள் உலக அரங்கில் தமக்குச் சாதகமான நிலைவந்தால் தமது உள்நாட்டுப் பிரச்சனை சீரடையும் என நினைக்கின்றார்கள். உலக அலைகளை ஆட்சி செய்த பழைய பிரித்தானியாவைப் பின்பற்றி தனது கடற்படையை மேம்படுத்திக் கொண்ட அமெரிக்காவின் ஒவ்வொரு கடற்படைப்பிரிவும் ஒவ்வொரு மிதக்கும் கடற்படைத் தளங்களாகும். அமெரிக்காவைக் குழப்பும் மூன்று நாடுகள் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியுடன் அமெரிக்கா பனிப்போரில் வெற்றி பெற்றதாகக் கருதப்பட்டது. நேட்டோ தனது கூட்டமைப்பு மேலும் 12 நாடுகளை இணைத்துக் கொண்டது. இந்தப் பன்னிரண்டு நாடுகளுக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்தது போலாந்து ஆகும். இவை முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும் அதன் ஆதிக்க வலயத்துள் இருந்த நாடுகளுமாகும். அமெரிக்காவின் உலக ஆதிக்க வளர்ச்சிக்கு தற்போது தடையாக இருப்பவை இரசியா, சீனா, ஈரான் ஆகிய மூன்று நாடுகளுமாகும். இவை மூன்றும் இணைந்து அமெரிக்காவிற்கு எதிரான ஒரு வலுவான கூட்டணியை உருவாக்குமா என்பதற்கு சாதகமான பதில் வருவதற்கான சூழல் இன்னும் உருவாகவில்லை. இந்த மூன்று நாடுகளும் ஒன்றிணைவது ஐக்கிய அமெரிக்காவின் பூகோள ஆதிக்கத்திற்கு ஒரு பெரும் சவாலாக அமையும். இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்றும் இணைந்து அச்சு நாடுகள் என்னும் பெயரில் செயற்பட்டது போல் இவை மூன்றும் இணையாமல் இருக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு. உலகத்தில் அறுபதிற்கு மேற்பட்ட நாடுகளுடன் படைத்துறை ஒத்துழைப்பு உடன்படிக்கை செய்து கொண்டுள்ள அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை குழப்ப இரசியா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. வர்த்தக ரீதியில் உலக அரங்கில் அமெரிக்காவிற்கு பெரும் சவால் விடுக்கக் கூடிய நாடாக சீனா உருவெடுத்துள்ள போதிலும் அதன் உலக வர்த்தகம் பெருமளவில் வட அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் தங்கியிருக்கின்றது. இரசியா சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஐரோப்பியக் கலாச்சாரத்தைக் கொண்ட இரசியர்கள் மேற்கத்தைய பாணி ஆட்சி முறைமைக்கு மாறுவார்கள் என ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் எதிர்பார்த்தன. இரசியாவை நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைக்கும் முயற்ச்சிகள் கூட மேற்கொள்ளப்பட்டன. இரசியாவின் எதிர்காலம் ஐரோப்பாபில் இருக்கின்றது என்ற வாதம் பரவலாக முன்வைக்கப்பட்டன. இதன் மூலம் ஐரோப்பாவின் புவிசார் அரசியல் தலைகீழாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. உலக அரசியல் சமநிலையை அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் பாதமாக மாற்றும் என இரு நாடுகளும் அஞ்சின. இரசிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த போலாந்து, ஹங்கேரி, எஸ்த்தோனியா, லித்துவேனியா, லத்வியா ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இரசியா இணைவதை விரும்பவில்லை. அத்துடன் இரசியாவில் நிலவும் ஊழல், மனித உரிம மீறல், போன்றவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உகந்தது அல்ல எனவும் கருதப்பட்டது. அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைவதற்கன Copenhagen Criteria என்னும் கொப்பெனகன் கட்டளைவிதிகளான மக்களாட்சி, சந்தைப் பொருளாதாரம், பொருளாதார நிலைமைகள் போன்றவை தொடர்பான் நிபந்தனைகளை இரசியா திருப்தி செய்ய முடியாது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பொருளாதாரத்தில் ஒரு மோசமான நிலையில் இருந்த இரசியா உலகில் ஏற்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து தனது வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை பெரிதளவில் அதிகரித்துக் கொண்டது. இதன் பின்னர் உலக அரங்கில் இரசியாவின் ஆதிக்கத்தை மீள் நிலைநாட்டலை இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் ஆரம்பித்தார். அது சிரியாவில் ஆரம்பித்து இரசியாவுடன் உக்ரேனின் ஒரு பகுதியாக இருந்த கிறிமியாவை இணைத்தது வரை தொடர்கின்றது. மேற் கொண்டு ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தனது நவீன நீர் மூழ்கிக் கப்பல்களை அதிகரிக்கவும் இரசியா தொடங்கி விட்டது. மேற்கைத் தோற்கடிப்பதற்கு மேற்கு நாடுகள் போல் மாற வேண்டும். குறைந்தது மேற்கு நாடுகளைப் போல் உற்பத்தித்திறன் உள்ள பொருளாதாரம் வேண்டும். அப்படி ஒன்று இல்லாததால்தான் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்தது எனச் சொல்லலாம். ஆனால் இரசியாவில் நிலவும் மோசமான ஊழல் மேற்கு நாடுகளுடன் போட்டிப் போடக்கூடிய திறனை இரசியாவிற்கு வழங்காது. புட்டீனால் மேற்கை வெல்ல முடியாது. ஆனால் ஹிட்லரைப் போல் ஒரு மோசமான அழிவை மேற்கு நாடுகளில் ஏற்படுத்த முடியும். சில மேற்கு நாட்டு அரசியல் விமர்சகர்கள் சொல்வது போல் புட்டீன் ஒன்றும் ஹிட்லரைப் போல் கிறுக்குப் பிடித்த தலைவர் அல்லர். அவர் சிறந்த கோந்திரோபாயவாதி. ஒரு ஜூடோ வீரர் என்ற வகையில் எதிரியைச் சமநிலை குலையச் செய்வதில் அவர் வல்லவர். ஆனால் தனது நாட்டின் பொருளாதாரத்தை சீர்திருத்தி மேம்படுத்த முன்னர் அவர் உலக அரங்கில் ஒரு சண்டியனாக இறங்கிவிட்டார். அவரது தவறால் நேட்டோக் கூட்டமைப்பின் நாடுகளிடையேயான ஒருமைப்பாட்டை அவர் மேன்மையடைய வைத்துவிட்டார். இதனால் இரசியாவை மீண்டும் சோவியத் ஒன்றியக் கால நிலைக்கு இட்டுச் செல்லும் திட்டம் உக்ரேனில் முடங்கிப் போய்க்கிடக்கின்றது. ஆனாலும் அவர் ஈரான் ஓர் அணுவல்லரசாக மாறுவதை விரும்பவில்லை. அதில் மேற்கு நாடுகளுடன் ஒத்துழைக்க விரும்புகின்றார். இதனால் இரசியவால் கிழக்கு ஐரோப்பாவைத் தாண்டி ஒரு பூகோள அரசியல் ஆதிக்கம் செலுத்த இப்போது முடியாமல் இருக்கின்றது. உலக அரங்கில் தாம் சிறுமைப்படுத்தப்பட்டு விட்டதாக இரசியர்கள் விரக்தியடைந்துள்ளனர். இந்த விரக்தியின் வெளிப்பாடாக ஜோர்ஜியா நாட்டின் ஒரு பகுதியும் உக்ரேனும் ஒரு பகுதியும் இரசியாவின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதையும் தாண்டி தன் ஆதிக்க நிலப்பரப்பை மேலும் விரிவாக்கினால் இரசியா ஒரு போரைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கு புட்டீன் தயார் ஆனால் இரசிய மக்களோ அல்லது இரசியப் பொருளாதாரமோ அதற்குத் தயாரில்லை. புட்டீனின் ஆதரவாளர்கள் ஐக்கிய அமெரிக்காவை ஒரு கதிரியக்கக் குப்பை மேடாக மாற்றும் வலு இரசியாவிடம் மட்டுமே இருக்கின்றது என அறை கூவல் விடுக்கின்றனர். இரசியாவின் சமூக பொருளாதார வல்லுனர்களின் கருத்து இவர்களின் கருத்தை ஒத்ததாக இல்லை. சீனாவின் கடன்வழங்கு அரசுறவியல் (இராசதந்திரம்) சீனா தனது கடல்சார் பட்டுப்பாதைக்கு ஆதரவாக முத்து மாலைத் திட்டத்தையும், நிலம் சார் பட்டுப்பாதைக்கு ஆதரவாக பொருளாதார வலயப் பட்டிகளையும் உருவாக்கி வருகின்றது. இதற்காகத் தனக்கு நட்பு நாடுளைப் பெற கடன்வழங்கு இராச தந்திரத்தைக் கையாள்கின்றது. சீனா சில நாடுகளுக்கு கடன் வழங்குவதன் மூலம் அந்த நாடுகளின் ஆட்சியாளர்களைத் தனக்கு ஆதரவாக மாற்றி அந்த நாடுகளைத் தனது பொருளாதாரச் சுரண்டலுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கின்றது. சீனாவின் 3.8 ரில்லியன் டொலர்கள் பெறுமதியான வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு சீனாவின் கடன்வழங்கு இராசதந்திரத்திற்கு உகந்ததாக அமைந்துள்ளது. ஆனால் சீனா கடன் வழங்கும் நாடுகள் பன்னாட்டு நாணய நிதியம், உலக வங்கி போன்ற மேற்குலக நலன் பேணும் உலக நிதி அமைப்புக்களால் கடன் நிராகரைக்கப்ப்பட்ட நாடுகளாக இருக்கின்றன. அந்த நாட்டு ஆட்சியாளர்களை மேற்கு நாட்டு ஊடகங்கள் அயோக்கியர்கள் என இனம் கண்டும் உள்ளன. சீன நாடானது இலங்கை, வெனிசுவேலா, எக்குவேடர், ஆர்ஜெண்டீனா, உக்ரேன், ஜிம்பாவே போன்ற நாடுகளுக்கு பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான கடனை வழங்கியதுடன் அந்த நாடுகளில் பாரிய பொருளாதாரத் திட்டங்களிலும் பெரு முதலீடு செய்துள்ளது. சீனாவின் இந்தக் கடன்களும் முதலீடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக ஆபத்துக்கு உள்ளாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது. இலங்கையில் செய்யப்பட்ட ஆட்சி மாற்றம் சீனாவின் இந்தக் கடன் வழங்கு இராசதந்திரத்திற்கு பெரும் ஆபத்தாக அமைந்துள்ளது. இலங்கையில் சீனா முதலீடு செய்த பல பில்லியன்கள் இப்போது ஆபத்துக்கு உள்ளாகி உள்ளது. லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு சீனா வழங்கியுள்ள கடன் 119 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானதாகும். இதில் 56 பில்லியன்கள் வெனிசுவேலாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. சீனா கடன் வழங்கிய நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. அத்துடன் உறுதியற்ற ஆட்சியாளர்களையும் கொண்டுள்ளன. அவர்கள் செய்யும் ஊழல்களால் மேற்கு நாடுகளால் அந்த நாடுகளில் இலகுவாக ஆட்சி மாற்றத்தைச் செய்யக்கூடிய நிலை ஏற்படுகின்றது. பொருளாதாரத் திட்ட முதலீடு என்னும் பெயரில் வேறு நாடுகளில் தான் செய்யும் முதலீடுகளில் சீனா தனது நாட்டு மக்களை வேலைக்கு அமர்த்துகிறது. இதுவும் சினாவுடன் அந்த நாடுகளுக்கு சிக்கல்களை உருவாக்குகின்றது. சீனாவிற்கு என்று பல பிராந்திய புவிசார் அரசியல் ஈடுபாடுகள் உண்டு ஆனால் சீனவிற்கு என ஒரு பூகோள அரசியல் செயற்பாடு இன்னும் உருவாக்கப்படவில்லை. ஈரான் ஈரான் நாடானது சீனாவிலும் பார்க்க மிகச்சிறிய பொருளாதாரம் என்றாலும் இரசியாவிலும் பார்க்க மிகச் சிறிய படை வலுவைக் கொண்டிருந்தாலும் இவ்விரண்டு வல்லரசுகளிலும் பார்க்க அதிக அளவு பிரச்சனையை அமெரிக்காவிற்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றது. லெபனானில் ஹிஸ்புல்லா, காசா நிலப்பரப்பில் ஹமாஸ் ஆகிய அமைப்புக்கள் உட்படப் பல அமைப்புக்கள் மூலம் ஈரானால் இதைச் சாதிக்க முடிகின்றது. உலக எரிபொருள் வழங்கலில் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் ஈரான் இருக்கின்றது. இஸ்லாமிய நாடுகளுடன் நல்லுறவை வளர்க்கவும் இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஒழித்துக் கட்டவும் அமெரிக்காவிற்கு ஈரான் தேவைப்படுகின்றது. அமெரிக்கா ஈரானை தனது படை வலுவின் மூலம் அடக்குவதிலும் பார்க்க பங்காளியாக்கி தனது நோக்கங்களை நிறவேற்றும் கொள்கையில் தற்போது முனைப்புக் காட்டுகின்றது. உலக ஒழுங்கு, உலகச் சமநிலை என்ற பதங்களை முன்னிலைப்படுத்தி அமெரிக்கா தனது பூகோள அரசியலை முன்னெடுக்கின்றது. உலக அமைதிக்கு தனது தலைமைத்துவமும் பங்களிப்பும் அவசியம் என அமெரிக்கா சொல்கின்றது. ஆனால் இரசியாவிடமோ சீனாவிடமோ உலக அமைதி தொடர்பாக அமெரிக்காவின் கொள்கைகளுக்கு மாற்றீடாகவோ அல்லது உலக அமைதிக்கு உகந்ததாகவோ எதாவது கொள்கை இருக்கிறது போல் தெரியவில்லை. அமெரிக்காவிற்கு வேண்டப்படாத ஆட்சியாளர்களுடன் கை கோர்ப்பது மட்டும் உலக அமைதிக்கு வழிவகுக்காது. உலக மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இரசியாவோ அல்லது சீனாவோ ஒரு சிறந்த கொளையுடன் உலக அரங்கில் செயற்பட வேண்டும். வேறு வழியில் அமெரிக்காவைச் சமாளிக்க முடியாது.