ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக்கலன்கள் இரசியாவின் எல்லைக்கு அண்மையாக வந்து அச்சுறுத்துவதற்கு எதிராக இரசியா தேவையான எல்லா வழிவகையிலும் செயற்படும் என அதிபர் விள்டிமீர் புட்டீன் சூளுரைத்துள்ளார். அமெரிக்காவின் நாசகாரிக் கப்பல் ஒன்றிற்கும் வேவு பார்க்கும் விமானம் ஒன்றிற்கும் ரோந்து விமானம் ஒன்றிற்கும் ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் இரசியப் போர் விமானங்கள் பறந்தன என்ற குற்றச் சாட்டை அமெரிக்கா முன் வைத்தமைக்குப் பதிலாகவே இரசிய அதிபர் இப்படிக் கருத்து வெளியிட்டுள்ளார். கிழக்கு ஐரோப்பாவில் இரசியப் படைகளுக்கும் நேட்டோப் படைகளுக்கும் இடையிலான முறுகல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஐரோப்பாவிற்கு புதிதாக நியமித்துள்ள படைத் தளபதி Curtis Scaparrottiமீது கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நிலைமை தொடர்பாக அமெரிக்க மூதவையின் படைத்துறைச் சேவைக்கான குழுவினர் பல கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளனர்.

இரசியப் பூச்சாண்டி
நேட்டோப் படையினர் தமது எல்லையில் இருந்து 75 மைல் தொலைவில் வந்து விட்டனர் என இரசியா கரிசனை கொண்டுள்ளது. இரசியா உக்ரேனின் கிறிமியாவைத் தன்னுடன் இணைத்து அதன் கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் கிளர்ச்சியை உருவாக்கியதன் பின்னர் இரசிய விரிவாக்கம் என்ற அச்சம் கிழக்கு ஐரோப்பாவில் அதிலும் முக்கியமாக போல்ரிக் நாடுகளில் உருவாகியுள்ளது. அந்த நாடுகள் தம்மை மீண்டும் இரசியா தன்னுடன் இணைப்பதைத் தடுக்க நேட்டோப் படைகளை தமது மண்ணிற்கு வரவழைக்கின்றன. போல்ரிக் கடலின் கிழக்குக் கரையில் உள்ள எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய நாடுகளை போல்ரிக் நாடுகள் என அழைக்கப்படுகின்றன. இந்த போல்ரிக் நாடுகளிலும் போலந்திலும் இரசியாவிற்கும் முறுகல் நிலை தோன்றியுள்ளது. போல்ரிக் கடலின் கிழக்குப் புறத்தில் லித்துவேனியாவிற்கும் போலாந்திற்கும் இடையில் உள்ள கலினிங்கிராட் (Kaliningrad) என்னும் துறை முகப் பிராந்தியம் இரசியாவின் கட்டுப்பாட்டில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததில் இருந்து இருக்கின்றது. அங்கு இரசியா தனது படவலுவை வியப்பூட்டும் வகையில் அதிகரித்துள்ளது.

கப்பல் இடைமறிப்பு
அமெரிக்காவின் USS Donald Cook என்னும் வழிகாட்டி ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பல் (guided missile destroyer) போல்ரிக் கடலிற்குள் 2016 ஏப்ரல் மாதம் 10-ம் திகதி பிரவேசித்தது. இரசியாவின் எஸ்.யூ-24 போர் விமானங்கள் தொடர்ந்து இரண்டு நாட்களாக அதற்குத் தொல்லைகள் கொடுத்தன. ஒரு கட்டத்தில் 30 அடி அண்மையாகவும் பறப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. இரசியாவின் எஸ்.யூ-24 போர் விமானம் ஒலியிலும் வேகமாகப் பறக்கக் கூடியதும் எல்லாவிதமான கால நிலைகளிலும் செயற்படக் கூடியதுமாகும். USS Donald Cook நாசகாரிக் கப்பலில் போலந்தின் உலங்கு வானூர்தி இந்த நெருங்கிப் பறத்தல் தொடர்பாகவே அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் படைத்துறைக்கான தெரிவுக் குழுவினர் அதிக கரிசனை கொண்டுள்ளனர். USS Donald Cook ஒரு நான்காம் தலைமுறை வழிகாட்டல் ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பலாகும். இதில் உள்ள டொமாஹோக் ஏவுகணைகள் 2,500 கிலோ மீட்டர் வரை பாயக் கூடியவை. அத்துடன் அணுக்குண்டுகளையும் தாங்கிச் செல்லக் கூடியவை. இதில் சாதாரண நிலையில் 56 டொமாஹோக் ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும். போர்ச்சூழலில் 96 ஏவுகணளைகளாக இது அதிகரிக்கப்படலாம். கப்பல்களுக்கு நெருங்கிப் பறத்தல் மட்டுமல்ல அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல்களும் இரசிய நீர்மூழ்கிக் கப்பல்களால் நெருக்குவாரங்களுக்கு உட்படுத்தப் படுகின்றன.

சிறப்பாக்கப் பட்ட சுழற்ச்சிப் படைகள்
2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நேட்டோப் படைத் துறைக் கூட்டமைப்பு கிழக்கு ஐரோப்பாவில் சிறப்பாக்கப் பட்ட சுழற்ச்சிப் படைகளை (Enhanced Rotational Force ) கிழக்கு ஐரோப்பாவில் நிறுத்துவதாகவும் தொடர் பயிற்ச்சிகளில் ஈடுபடுவதாகவும் முடிவு செய்திருந்தது. நேட்டோ கிழக்கு ஐரோப்பாவில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்ற தனது தொடர் வேண்டு கோள்களுக்கு மாறாக இப்பட்டி முடிவு எடுக்கப் பட்டுள்ளது என இரசியா அப்போது கருத்து வெளியிட்டிருந்தது. இந்த நேட்டோக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரித்தானியாவின் HMS Iron Duke என்னும் Type 23 வகையைச் சேர்ந்த Frigate கப்பல், Type-45 வகையைச் சேர்ந்த நாசகாரிக் கப்பல், மூன்று கடற்கண்ணி வாரிஅள்ளும் கப்பல்கள் ஆகியவை 530 கடற்படையினருடன் அனுப்பப்பட்டன. பிரித்தானியாவின் இந்த நகர்வை பனிப்போர்க் காலத்திலும் பார்க்க அதிக வலுவுடைய முன்னோக்கிய நகர்வு என நேட்டோவிற்கான பிரித்தானியப் பிரதிநிதி அடம் தொம்சன் தெரிவித்திருந்தார். பிரித்தானியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கேல் பலன் அதிகரித்த நேட்டோப் படைப் பரவலமர்த்தல் எமது எதிரிக்கு ஒரு கடுமையான செய்தியைத் தெரிவிப்பதுடன் எமது நட்பு நாடுகள் அச்சுறுத்தப்படும் போது நாம் பதில் கொடுக்கத் தயாராக உள்ளோம் என்பதையும் உணர்த்துகின்றத்து என்றார். மேலும் அவர் 2016-ம் ஆண்டு போல்ரிக் பிராந்தியத்தில் அதிக கவனம் செலுத்துவோம் என்றார்.
வேவு விமான இடைமறிப்பு
2016-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் திகதி போல்ரிக் பிராந்தியத்தில் அமெரிக்க வேவு விமானமான ஆர் சி-135ஐ பாதுகாப்பற்ற முறையிலும் தொழில்சார்பற்ற வகையிலும் எஸ் யூ-27 இரசியப் போர் விமானம் இடை மறித்ததாக அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்க வேவு விமானமான ஆர்சி-135 எதிரியின் இலத்திரனியல் பொறிமுறை தொடர்பான தகவல்களைத் திரட்ட வல்லது. ஆனால் இரசிய அதிகாரிகள் தமது எல்லையை நோக்கி ஓர் இனம் காணமுடியாத பொருள் மிக வேகமாக வந்ததாகவும் அதற்கு தமது விமானங்கள் விடைகொடுக்கும்படி நடந்து கொண்டதாகவும் தெரிவித்ததுடன் தமது விமானி பன்னாட்டு விமானப் பறப்பு விதிகளுக்கு அமையவே செயற்பட்டதாகவும் கூறினார்கள். தமது விமானம் அமெரிக்க விமானத்திற்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய எந்த ஒரு செயலையும் செய்யவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்வு இரு நாடுகளுக்கும் இடையில் மேலும் போல்ரிக் பிராந்தியத்தில் நெருக்கடியை அதிகரிப்பதாக அமைந்தது. அத்துடன் போல்ரிக் பிராந்தியத்தில் அமெரிக்காவினது அதிகரித்த படை நகர்வுகளுக்கு இரசியாவும் தனது பதில் நகர்வுகளைத் தீவிரப்படுத்துவதாகவும் சுட்டிக் காட்டுகின்றன. அமெரிக்க வேவு விமானத்திற்கு 50 அடி வரை நெருங்கி வந்த இரசியப் போர் விமானம் உருளைச் சுற்றல் (Barrel Roll) என்னும் அச்சுறுத்தல் பறப்பையும் செய்தது. எதிரி விமானத்தின் பதைக்கோட்டை சுற்றிச் சுற்றி பறந்து சென்று அதைக் கடந்து சுற்றியபடியே செல்லும் நகர்வை உருளைச் சுற்றல் (Barrel Roll) என்பர். இதன் போது எதிரி விமானம் தனது திசையை மாற்ற முடியாமற் செய்யப்படும். போல்ரிக் பிராந்தியத்தில் அமெரிக்கப் படையினரின் நடமாட்டத்தை தனது கொல்லைப் புறத்திற்கு எதிரி வந்துவிட்டது போன்ற உணர்வை இரசியப் படைகளுக்கு ஏற்படுத்துகின்றது. இரசியப் படையினர் அமெரிக்கப் படையினருடன் ஒரு முழுமையான நேரடி மோதலை தவிர்க்க விரும்பும் அதேவேளை அமெரிக்காவின் படை நகர்வுகளைப் கை கட்டிப் பார்த்துக் கொண்டிருக்கத் தயாரில்லை என்பதை அமெரிக்காவிற்கு உணர்த்த விரும்புகின்றனர்.

ரோந்து விமான இடைமறிப்பு
2016 ஏப்ரில் 29-ம் திகதி வெள்ளி காலை அமெரிக்காவின் ரோந்து விமானமான ஆர் சீ – 35 போல்ரிக் கடற் பிராந்தியத்தில் பறந்து கொண்டிருக்கையில் இரசியாவின் எஸ்.யூ-27 போர் விமானம் அதற்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் உருளைச் சுற்றல் (Barrel Roll) பறப்பைச் செய்தது என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்க வேவு விமானத்திற்கு 25 அடிகள் வரை அண்மையாக இரசியப் போர் விமானம் பறந்து சென்றது. அமெரிக்காவின் ரோந்து விமானமான ஆர்.சீ-35 பன்னாட்டு விமானப் பரப்பில் பறந்து கொண்டிருக்கையிலேயே இந்தச் சம்பவம் நடந்ததாக ஐக்கிய அமெரிக்கா தெரிவித்தது.

பரீட்சிக்கப் பட்டதா?
அமெரிக்காவின் USS Donald Cook என்னும் வழிகாட்டி ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பலுக்கு நெருக்கமாகாப் பறந்த இரசிய எஸ்.யூ-24 போர் விமானம் எந்த ஒரு படைக்கலன்களையும் தாங்கிச் செல்லவில்லை. ஆனால் அது இரசியா உருவாக்கிய புதிய Khibiny என்னும் பெயர் கொண்ட எலத்திரனியல் அலைவரிசைக் குழப்பி முறைமையைக் (electronic jamming system) கொண்டிருந்ததாகவும் அவை அமெரிக்காவின் நாசகாரிக் கப்பலின் ரடார்களை குருடாக்கி விட்டதாகவும் தொடர்பாடல் கருவிகளை செயலிழக்கச் செய்ததாகவும் இரசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் USS Donald Cook நாசகாரக் கப்பல் மிக நவீன ஏஜிஸ் தாக்குதல் முறைமையைக் (Aegis Combat System) கொண்டுள்ளது. இது கணனிப் பொறித் தொகுதிகளையும் நான்கு ரடார்களையும் கொண்டு எதிரி இலக்குகளை இனம் கண்டு துரிதமாகத் தாக்கவல்லது. இதில் 50இற்கு மேற்பட்ட விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உண்டு. இரசியாவின் புதிய எலத்திரனியல் அலைவரிசைக் குழப்பி முறைமை 350மைல்கள் விட்டம் கொண்ட ஒரு வட்டப்பரப்ப்பில் எந்த எதிரி ரடார்களையும் குழப்பக் கூடியவை எனச் சொல்லப்படுகின்றது. இதனால் USS Donald Cook இல் இருந்த அமெரிக்கக் கடற்படையினரின் மனோ நிலை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் சொல்லப் படுகின்றது. 27 பேர் பதவி விலகும் விருப்பத்தையும் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவை இது தொடர்பாகக் கரிசனை காட்டியதற்கும் இதுவே காரணம் எனவும் சொல்லப்படுகின்றது. இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வைத் தொடர்ந்து அமெரிக்க நாசகாரிக் கப்பல் ஹங்கேரித் துறைமுகத்திற்குச் சென்று விட்டது.

கிழக்கே போன அமெரிக்காவின் F-22 போர் விமானங்கள்
இரசியாவின் நெருங்கிப் பறத்தல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து போல்ரிக் நாடுகளில் ஒன்றான லித்துவேனியாவிற்கு அமெரிக்காவின் F-22 விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஏற்கனவே 2015-ம் ஆண்டு எஸ்தோனியாவிற்கும் போலாந்திற்கும் F-22 விமானங்கள் அனுப்பி வைக்கப் பட்டிருந்தன. போல்ரிக் பிராந்தியத்தில் மட்டுமல்ல கருங்கடல் பிராந்தியத்திலும் அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையில் முறுகல் நிலை மோசமடைகின்றது. இந்த நிலைமையைச் சமாளிக்க இரசியாவின் முன்னாள் நெருங்கிய நட்பு நாடும் முன்னாள் பொதுவுடமை நாடும் தற்போது அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பு பாராடும் நாடும் நேட்டோவின் உறுப்பு நாடுமான ஹங்கேரிக்கு அமெரிக்காவின் F-22 விமானங்கள் இரண்டு அனுப்பப்பட்டுள்ளன. உலகில் முதலில் செயற்படத் தொடங்கிய ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமாக F-22 விமானம் இருக்கின்றது. F-22 மற்ற விமானங்களுடன் ஒப்பிடுகையில் மிகத் தொலவில் வைத்தே எதிரி விமானங்களையும் இலக்குகளையும் இனங்காணும் திறன் மிக்கது.

சுழற்ச்சி முறைப் படை நகர்வின் நோக்கம்
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில்ல் சிறப்பாக்கப் பட்ட சுழற்ச்சிப் படைகளை (Enhanced Rotational Force ) நேட்டோப் படையினர் ஈடுபடுத்துவது மோசமான ஒரு மூலோபாயத்தை கொண்டது. பெருமளவு படையினரை ஒரேயடியாகக் கொண்டு போய்க் குவிப்பது செலவு மிக்கது. அத்துடன் இரசிய மக்களைக் கலவரமடையச் செய்து அவர்களை விளடிமீர் புட்டீனின் பின்னால் அணி திரளச் செய்யும். சில நூறு அல்லது ஆயிரக் கணக்கில் சுழற்ச்சி முறையில் படையினரை அங்க்கு அனுப்பி பயிற்ச்சியில் ஈடுபடுத்துவதால் பிராந்திய நிலைமைக்கு ஏற்ப போரிடும் திறனை அவர்கள் பெறுகின்றார்கள். இப்படி தொடர்ந்து சுழற்ச்சி முறையில் பல்லாயிரக் கணக்கான படையினரை பயிற்றுவிப்பது ஒரு புறம் நடக்கும். மறு புறத்தில் இரசியாவின் எல்லைப் புற நாடுகளில் பெருமளவு படைக்கலன்களை களஞ்சியப் படுத்தி வைக்கப்படும். ஒரு போர் உருவாகும் நிலை ஏற்படும் போது பல்லாயிரம் படையினரைக் கொண்டு போய் ஒரு குறுகிய கால அவகாசத்தில் இறக்கும் வசதி நேட்டோப் படையினரிடம் உண்டு. இது இரசியப் படைகளுக்குப் பெரும் சவாலாக அமையும்.