ஒற்றுமையை சிதறடிக்கும் முயற்சிக்கு ஒஸ்லோவில் விழுந்த முதல் அடி!

2009_Tamilsin Oslo

‘அபிவிருத்தி’ என்ற பெயரில் புலம் பெயர் ஈழத்தமிழர் அமைப்புகளின் செயற்பாட்டையும் ஒற்றுமையையும் சிதறடிக்கும் முயற்சிக்கு ஒஸ்லோவில் விழுந்த முதல் அடி!

2009 இன அழிப்புப் போரின்போது, ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சியில், ஈழத்தமிழர்களின் புலம்பெயர் அமைப்புகளை உடைப்பதற்கான உத்திகள் மீண்டும் ஒரு முறை உலகளாவிய ரீதியில் வகுக்கப்பட்டன.

இவர்களின் திட்டத்தில் ஒரு முக்கிய குறியாக நோர்வே வாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் கட்டமைப்புகளை உடைக்கும் நோக்கம் இருந்தது. இதற்கு இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு பகிரங்கமாக வெளியிட்ட தகவல்களே ஆதாரம். நோர்வேஜிய பத்திரிகைகளிலும் இது குறித்து நிறைய எழுதப்பட்டிருந்தது. இந்த ஓட்டம் இறுதியில் இங்குள்ள கட்டமைப்புக்களிலும், உப கட்டமைப்புகளிலும் பணிபுரிபவர்களின் பெயர்ப் பட்டியல்களைத் தடைப் பட்டியலாக்கும் வரை சென்றது.

2009இல் அமெரிக்க இராணுவ வட்டத்தில் இருந்து, குறிப்பாக பென்ரகனில் இருந்த கோட்டபாயாவின் நண்பரான பேராசிரியர் ஜேம்ஸ் கிளாட் போன்றவர்கள் தொடக்கம் இலங்கையைச் சேர்ந்த சிங்கள பயங்கரவாத பேராசியரான றொகான் குணரட்ணா வரை இந்தத் திட்டமிடலில் பங்கெடுத்துக்கொண்டிருந்தார்கள். இவற்றுக்கான ஆதாரங்களையும் அவர்களே வெளியிட்டிருந்தார்கள்.

கொழும்பின் ஜனாதிபதி மகிந்த சீனாவையும், அமைச்சர் பசில் இந்தியாவையும், போர்ச் செயலர் கோட்டபாயா அமெரிக்காவையும் கையாளுவது என்ற ராஜபக்ச சகோதரர்களின் வெளியுறவு அணுகுமுறையை சிங்கள அரசு கைக்கொண்டிருந்தது.

இதன் ஒரு கட்டமாக, இன அழிப்பில் முன்நின்று கொடுங்கோரங்களைப் புரிந்த இராணுவத் தளபதிகளை உலகெங்கும் தனது அரசின் பிரதிநிதிகளாகக் கொழும்பு அனுப்பிவைத்தது. ஐ.நா.வின் செயலாளருக்கு அருகிலும் அவர்களை இராஜதந்திர முகவர்களாகத் தொழிலுக்கு அமர்த்தியது.

2009 இன அழிப்புப் போரின் முடிவில், வட்டுவாகலில் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் வலயத்திற்குள் சிங்கள இராணுவத்தினரின் கைகளில் உறவுகளின் முன்னிலையில் கையளிக்கப்பட்ட போராளிகளையும் பின்னர் முட்கம்பிவேலிகளுக்குள் வைத்துப் பிரித்தெடுத்துக் காணாமலாக்கப்பட்ட போராளிகளையும் போர்க் கைதிகள் என்று வகைப்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் முன்வரவில்லை.

போர்க்கைதிகள் (Prisoners of War) என்ற வரைவிலக்கணம் சர்வதேச போரியற் சட்டத்திற்கு உட்பட்டதாகும். அரசியற் கைதிகள் (Political Prisoners) என்பது உள் நாட்டுச் சட்டத்திற்கே உட்படுவது.

சர்வதேச சமூகம் வேண்டுமென்றே தமிழ்ப் போராளிகளை போர்க்கைதிகளாக அங்கீகரிக்கத் தவறியது. தமிழர்களின் தேசிய விடுதலை இயக்கம் இன அழிப்புப் போரில் அழிக்கப்பட்டபோதும் அவ்வியக்கத்தின் முன்னாள் போராளிகளைத் தொடர்ந்தும் பயங்கரவாதிகள் என்ற வரைவிலக்கணத்தின் ஊடாக மாத்திரமே அணுகும் அரசியல் நிலைப்பாடே அது.

அதேவேளை ஓர் அரசான இலங்கைத்தரப்பின் போர்க்குற்றங்களுடன் ஈழத்தமிழர்களின் போராட்ட இயக்கத்தின் குற்றங்கள் என்று தாம் குறிப்பிட்டவற்றைச் சமப்படுத்தலாயினர். போர்க்கைதிகள் என்ற அந்தஸ்தை வழங்க மறுத்தவர்கள், குற்றத்தில் மட்டும் தமிழ்ப்போராளிகளைச் சமனாகக் காண்பதில் குறியாக இருந்தனர்.

இலங்கை அரசோ தமிழ்ப் போராளிகளை அரசியற் கைதிகளாகக் கூட அங்கீகரிக்கவில்லை.

அண்மையில், ஐ. நா. மனித உரிமை உயர் ஸ்தானிகரான ஜோர்டானிய இளவரசர் சைட் அவர்கள் தமிழ்க் கைதிகளை ‘பாதுகாப்புக் கைதிகள்’ என்று இறுதியாக இடம்பெற்ற ஜெனீவா அமர்வில் வியாக்கியானஞ் செய்திருக்கிறார். அதாவது இலங்கை அரசின் பாதுகாப்புக்கு குந்தகமானவர்களாகக் கூறப்படும் கைதிகள் என்று அவர் எமது போராளிகளை மலினப்படுத்தியிருக்கிறார்.

இதேவேளை அரசுகள் சார்ந்த சர்வதேச சமூகமானது அமெரிக்காவில், பிரித்தானியாவில், கனடாவில், ஐரோப்பிய யூனியனில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது பயங்கரவாதிகள் என்று 2009இற்கு முன்னர் போட்ட தடையைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்கே விழைகிறது.

ஒரு புறம் பயங்கரவாதப் பட்டியிலிட்டிருக்கும் ஓர் அமைப்பின் முன்னாள் போராளிகளைச் சிறையில் அடைத்திருக்கும், காணமற்போகச்செய்யப்பட்டிருக்கும் சூழலில், தமிழ்ப் போராளிகளை அரசியல் கைதிகள் என்று குறிப்பிட இந்த அரசுகள் சார்ந்த சர்வதேச சமூகம் தொடர்ந்து மறுத்துவருகிறது.

இதேவேளை, ராஜபக்ச கொண்டுவந்த எல்.எல்.ஆர்.சி என்ற கண்துடைப்புக் கமிசனை அரசுகளைப் பெருமளவில் சாராத உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் ஒருபுறம் புறக்கணித்திருந்தன. ஆனால் இந்த அமைப்புகள் கூட இறுதியில் அதே எல் எல் ஆர் சியின் பரிந்துரைகளை நிறைவேற்றக் கோரும் நிலைக்கே நிர்ப்பந்தமாகத் தள்ளப்பட்டன.

மறுபுறத்தில் ஐ.நா. மனித உரிமைச் சபையை தமது இராஜதந்திர நகர்வுகளுக்குப் ‘பயன்படுத்தும்’ அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்ட அரசுகளின் அணிகள் தமக்குள் ஒரு திட்டம் வகுத்துக்கொண்டன.

அதாவது, ஈழத் தமிழர் உரிமைகளை மையப்படுத்தாமல், இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைக் கோராமல், ஈழத் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருக்கும் இராணுவத்தை விலக்கி ஒரு சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையை அங்கு உருவாக்காமல், எந்த ஒரு வகையிலும் முன்னாள் போராளிகளுக்கு அங்கீகாரம் வழங்காமல் ஜெனிவா மனித உரிமைத் தொடர்களில் தாம் கொண்டுவரும் தீர்மானங்களில் குறிப்பிடப்படும் குற்றங்களில் மாத்திரம் இலங்கை அரசுக்கு ஈடாக விடுதலைப் புலிகளையும் ஒரு சம குற்றத் தரப்பாகக் கையாளுவதன் மூலம், இலங்கை அரசை தமது பிடிக்குள் கொண்டுவருவதற்கான அரசியல் வெளியாக ஜெனீவாவைப் பயன்படுத்துவது என்பதே அந்தத் திட்டம்.

2009இல் தெருத்தெருவாக புலம் பெயர் சமூகம் போராடியபோது எவ்வாறு எம்மைக் கண்டும் காணாதவர்கள் போலத் தமது இராஜதந்திரங்களை வகைப்படுத்தினார்களோ அதைப்போலவே, ஜெனிவாவுக்கு வெளியில் தமது கோரிக்கைகளோடு வருடாந்தம் அணிவகுக்கும் ஈழத் தமிழர்களைத் தொடர்ந்தும் கண்டுகொள்ளாமல் விடுவது என்பதில் அரசுகளைச் சார்ந்த சர்வதேச சமூகத்தினர் விடாப்பிடியாக இருந்தார்கள்.

கோர்ட்டும் சூட்டுமாகவும், மைக்கும் ஊடகமாகவும் ஜெனிவாவுக்கு உள்ளே வலம் வந்த எமது தமிழர் பிரதிநிதிகளையும், ஒரு புறம் தமது இராஜதந்திரக் கையாளுகைக்குரிய கையாட்களாக மாற்றிவிடுவதிலும், மறுபுறம் ஈழத் தமிழர்களுக்குள் உள் முரண்பாடுகளையும் குழப்பங்களையும் பேணுவதற்கான ஜாம்பவான்களாக அவர்களை மாற்றிவிடுவதிலுமே அரசுகளை மையப்படுத்திய சர்வதேச சமூகம் முனைப்புடன் செயற்பட்டது.

இந்த அரசுகள் சார்ந்த சர்வதேச சமூகமானது அனைத்தையும் தெளிவாக அறிந்த நிலையிலேயே செயலாற்றிவருகிறது என்பது பட்டவர்த்தனமான உண்மையாகும்.

அரசுகள் சார்ந்த சர்வதேச சமூகம் தமிழரின் மூலப் பிரச்சனையை இன்னும் விளங்கிக்கொள்ளவில்லை என்றும், எமது நிலைமை அவர்களுக்கு சரியாக விளங்கிவிட்டால் அவர்கள் எமக்கு நியாயம் வழங்குவார்கள் என்று நம்பி எம்மவரில் சிலர் பரிதாபகரமாக போராட்ட மன நிலையில் இருந்து விடுபட்டு அவல மனப்பான்மைக்கு உட்பட்டவர்களாக அங்கலாய்த்து சிந்தித்தார்கள். இந்த மாய வலைக்குள் விழுந்த எம்மவர்களும் இறுதியில் அவலத்திற்குப் பலிக்கடா ஆக்கப்பட்டார்கள்.

இவ்வாறு ஜெனீவா வட்டாரத்தில் எம்மைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கருத்துகள் கதைப்பவர்களையே இரண்டு தரப்புகளும் புரிந்த போர்க்குற்றங்களை விசாரியுங்கள் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்பவர்களாக மாற்றிவிட்டார்கள்.

ஜெனிவாவுக்குள் ‘அரசியல்’ அல்லது ‘இராஜதந்திரம்’ செய்கிறோம் என்று ஈழத்தமிழர்களைத் தம்மைத் தாமே நம்பவைத்து, அவர்களுக்குள் குழுவாத அணிப் போட்டிகளை உருவாக்கி, உட்பொறாமைகளை ஊட்டி, ஏகாதிபத்தியங்கள் தமது சிந்தனை ஓட்டத்துக்குச் சார்பான நிலைக்கு தமிழர் தரப்பைப் பலிக்கடா ஆக்கும் வித்தையைச் செய்வதை சமாந்தரமாகத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தனர்.

இதற்கு எம்மவர்களும் மிகவும் அழகாகப் பலியாகினார்கள். இதற்கு ஓர் உதாரணமாக வயதான தமிழ்ப் பாதிரியார் ஒருவர் திகழுகிறார். இன்று இவர் மைத்திரிபாலாவிற்கு வாழ்த்துப் பாடும் அதல பாதாள நிலைக்குச் சென்றிருக்கிறார். இது கவலைக்குரியதே.

எமக்குள் இருக்கும், அல்லது காலத்துக்குக் காலம் எமக்குள் இருந்து உருவாக்கப்படும் இவர்களைப் போன்றவர்களின் அவல அரசியல் ஒரு புறம் இருக்க, உண்மையாகப் புலம் பெயர் தமிழர் தமது அகக் கண்களைத் திறந்து கூர்மையாக அவதானிக்கவேண்டிய சக்திகள் யார் என்றால், எமக்குள் புகுந்து எம்மவர்களைத் தம்வயப்படுத்தும் இந்தச் சர்வதேச ஜாம்பவான்களையே.

இவ்வாறாக, இரண்டாவது முள்ளிவாய்க்கால் ஜெனீவாவில் அரங்கேறியிருக்கிறது. தற்போது மூன்றாவது முள்ளிவாய்க்காலையே அபிவிருத்தி என்ற போர்வையில் வெகு நாள் தயாரிப்புடன் எமக்குள் திணிக்கும் திட்டமிட்டு நடக்கிறது.

தொடர்ந்து பலிக்கடா ஆகும் எம்மவர்களைத் துரோகிகள் என்று வருணித்துக்கொண்டு அதேவேளை நாம் செய்யவேண்டிய அரசியற் பணிகளைச் சரிவரச் செய்யாது குழுவாதங்களில் ஈடுபட்டிருப்பது எமது தலையில் நாமே மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்வதற்கு ஒப்பானது.

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை என்று மகாகவி பாரதி தனது நாட்டை ஆட்கொண்டிருந்த அந்நிய ஆக்கிரமிப்பாளரை அந்நாளில் நோக்கினானோ, அதைவிடவும் பலமடங்கு வீரியத்துடன் இந்த அரசுகளின் வெளியுறவுக்கொள்கைக்காகவும் பூகோள அரசியல் இலக்குக்காகவும் இன அழிப்புக்குப் பலிக்கடா ஆக்கப்படும் நாம் எழுந்து பறந்தாக வேண்டும்.

எமது எழுச்சிமிக்க அரசியற் போராட்டப் பறப்புக்குத் தார்மீக அறிவும் துணிவும் அவசியம். பணத்தை விடவும், கருவியைவிடவும், எமது இருப்பை விடவும், துணிவும் அறமும் அறிவுமே ஆதாரமாகின்றன.

இதை எவ்வாறு எம்மிடம் இருந்து பறிப்பது என்பதற்காக வகுக்கப்பட்டிருக்கும் திட்டமே ‘அபிவிருத்தி உதவி’ என்ற பெயரில் எம்மவரை ‘சிறிலங்கா’ கோட்பாட்டுக்குள் ஈடுபடுமாறு ஒரு பொறிக்குள் தள்ளிவிடுவது.

இந்தப் பொறி எவ்வாறு, ஏன் ஒஸ்லோவை மையப்படுத்தி பின்னப்பட்டுவருகிறது என்பதையும், இதில் ஈடுபட்டிருப்பவர்கள் யார் என்பதையும், விருப்பு வெறுப்புகளுக்கும், சுயம் சார்ந்த வன்மங்களுக்கும் அப்பாற்பட்ட விஞ்ஞான பூர்வமான புரிதலில் நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.

ஐரோப்பாவின் பயங்கரவாதத் தடைகளுக்குள் அகப்படாத இரண்டு நாடுகள் இருக்கின்றன. அவைதான் நோர்வேயும் சுவிற்சர்லாந்து நாடுகளும்.

குறிப்பாக நோர்வே எமது விடயத்தில் சமாதன தூதராகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட நாடு, புலம் பெயர் சமுகத்தில் தாக்கம் செலுத்தக்கூடிய ஆளுமையைக் கொண்ட ஒரு புலம் பெயர் சமுகமாக நாம் கணிக்கப்படுகிறோம். இந்த வகையிலேயே நோர்வேயின் புலம்பெயர் சமூகம் தெரிவு செய்யப்பட்டுக் கையாளப்படுகிறது.

இந்த முயற்சி ராஜபக்ச காலத்தில் இருந்து தொடர்ச்சியாக நோர்வேயில் பல கூட்டத் தொடர்களூடாக நடைபெற்றுவருகிறது.

இந்தக் கைங்கரியத்தில் அபிவிருத்தி நிதியம் (Utviklingsfondet) என்ற நோர்வேஜிய நிறுவனமும், 2011 இல் இது போன்ற வேலைத்திட்டத்திற்காக இந்த நிறுவனம் விசேடமாக உருவாக்கிக்கொண்டிருக்கின்ற டயஸ்போரா நெற்வேர்க் (Diaspora Network) என்ற புதியதொரு நிறுவனமும் இயங்குகின்றன. இவற்றை விட வேறு நிறுவனங்களும் இந்த வேலைத்திட்டத்தில் ஆங்காங்கே ஈடுபடுத்தப்படுகின்றன.

இந்த நிறுவனங்களின் ஊன்றுகோல் ஊடாக, இதேபோன்ற பலமான பின்னணிகளும் நோர்வேஜிய அரசின் பல மில்லியன் குரோணர் நிதிமூலத்தோடும் நெதர்லாந்தில் இருந்து இயங்கும் சந்திரிகா குமாரதுங்காவின் நெருங்கிய ஆலோசகரும், இலங்கையின் ஜனாதிபதியான மைத்திரிபாலவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அதிகாரபூர்வ பிரதிநிதியுமான ராம் மாணிக்கலிங்கம் என்பவர் ஒஸ்லோவில் வந்து எமது நிறுவனங்களை கடந்த மே 4ம் திகதியன்று சந்திக்க விழைந்தார்.

இதற்கான முஸ்தீபுகளை நாம் அமைதியாக அவதானித்துக்கொண்டிருந்தோம்.

இறுதியில் அவர்கள் ஒழுங்குசெய்த கூட்டத்தை புறக்கணித்ததோடு மட்டுமன்றி எமது கொள்கை நிலைப்பாட்டைத் தெளிவாக ஆங்கிலத்தில் எழுதி ஐந்து நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து பகிரங்கமாக வெளியிட்டிருக்கிறோம்.

அழைக்கப்பட்ட 12 நிறுவனங்களில் ஏழு நிறுவனங்கள் எமது கருத்துநிலையோடு ஒத்த கருத்தில் இருப்பவை. இந்த ஏழு அமைப்புகளும் அந்தக் கூட்டத்தை சனநாயக முடிவின் அடிப்படையில் புறக்கணித்தார்கள்.

இது தொடர்பான ஆழமான விடயங்களை எமது மக்களோடு நாம் பகிர்ந்துகொள்வது அவசியமானது என்ற அடிப்படையில் இந்தக் கட்டுரைத் தொடர் வரையப்படுகிறது.

மிகுதி தொடரும்.