HomeDiasporaயார் இந்த ராம் (ராமானுஜன்) மாணிக்கலிங்கம்? May 11, 2016 Diaspora, News, Political article யார் இந்த ராம் (ராமானுஜன்) மாணிக்கலிங்கம்? அவரது நிறுவனத்துக்கு நோர்வே எத்தனை மில்லியன் குரோணர்களை அள்ளி வழங்கியிருக்கிறது? அவரது இலங்கைப் பின்னணி என்ன? சதிஸ் நம்பியார் (இடது) – ராம் மாணிக்கலிங்கம்( வலது) போராட்ட இயக்கங்களின் தீவிரத் தன்மையைக் குறைப்பதற்கான சர்வதேச செயற்பாடுகளில் நெதர்லாந்தில் இருந்து இயங்கும் நிறுவனமான (Dialouge Advocacy Group) என்ற அமைப்பை உருவாக்கி இயக்கிவரும் இலங்கையைச் சேர்ந்த தமிழரான இவர் அயர்லாந்து தொடக்கம், ஸ்பானியா வரை ஆயதப் போராட்ட இயக்கங்களின் ஆயதங்களைப் பூட்டிவைக்கும் செயற்பாடுகளையும் அரசுகளுடனும் அந்த அரசுகளுக்கு எதிராக ஆயுத ரீதியில் போராடுகின்ற இயக்கங்களையும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று இயைந்தது போகவைக்கலாம் என்பதையும் தனது நிறுவனத்தின் ஊடாக முன்னெடுத்துவருகிறார். ஒருவரோடொருவரைக் கதைக்கச் செய்வது அமைதி முயற்சிகளுக்கு அவசியமானதே. தேசிய இனப்பிரச்சனை போன்ற சிக்கல்களைப் பேசித் தீர்ப்பதற்கும் அது வேண்டியதே. ஆனால், இலங்கை விவகாரத்தில் இதை ஒரு ‘கூட்டிக்கெடுக்கும்’ செயற்பாடாக இவர் முன்னெடுக்கிறார் என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. ராம் மாணிக்கலிங்கம் சந்திரிகா குமாரதுங்கா ஜனாதிபதியாக இருந்த போது, குறிப்பாக அவர் சமாதான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருந்தபோது அவருக்கு ஆலோசகராக இருந்தவர் என்பதும், இலங்கைக்கான ஐ.நா.வின் பிரதிநிதியாக நியூ யோர்க்கில் இருந்தவர் என்பதும், நீலன் திருச்செல்வம், கதிர்காமர் போன்றோரின் நண்பர் என்பது போன்ற இன்னோரன்ன தகவல்கள் இலகுவாக அறியக்கிடைக்கின்றன. இதேவேளை விக்கிலீக்ஸில் இவரை அமெரிக்க புவியியல் உளவு நிறுவனம் ஒன்று (Startfor) ஆலோசனைக்காகப் பிரேரித்திருப்பது கூட வெளியாகியிருக்கிறது. இணையத்தில், குறிப்பாக யூரியூப்பில், அவரே தனது வேலையை விளக்கும் காணொளிகளுமுண்டு. இவர் தற்போது இலங்கை ஜனாதிபதியின் நல்லிணக்க ஆணைக்குழுவில் ( Sri Lankan President’s Office for National Unity and Reconciliation) உத்தியோகபூர்வமாக இடம்பெறுகிறார். வன்னி மீதான போரின் முடிவு எப்படி எப்படியெல்லாம் போக வாய்ப்பிருக்கின்றது என்ற தனது அளவீடுகளை நோர்வே அரசுக்கும் இணைத்தலைமை நாடுகளுக்கும் 2008 இல் கட்டியம் கூறிய அவர், கடந்த பெப்ரவரி மாதம் போர்க்குற்ற விசாரணையை முன்னிலைப்படுத்தக்கூடாது என்றும் புதிய யாப்பு ஒன்றை வரைவதே முதலில் செய்யப்படவேண்டியதென்றும் ஒரு கட்டுரையையும் வரைந்திருந்தார். இவரது இந்தக் கருத்துநிலையை கொழும்பில் இருந்து இயங்கும் சுமந்திரனின் ஆலோசகரான நிரன் அங்கற்றெல் என்பவரே கடுமையாக விமர்சித்திருக்கிறார் என்றால் ராம் மாணிக்கலிங்கத்தின் சிந்தனையைப் பற்றி வேறென்ன சான்றுகள் சொல்ல இருக்கிறது? அது ஒரு புறம் இருக்க, இவரோடு நோர்வே வாழ் தமிழர்கள் ஒட்டி உறவாட வேண்டும் என்பதற்கு நோர்வே மக்களவையின் பிரதிநிதி ஒருவருக்கு நோர்வேஜிய வெளிவிவகார அமைச்சு மிகுந்த சிபாரிசுகளைச் செய்தது. குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான சுனாமிக் கட்டமைப்புப் பேச்சுவார்த்தையில் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்காவை இணங்கவைத்த கைங்கரியத்தை ராம் மாணிக்கலிங்கமே செய்து கொடுத்ததாக நோர்வேஜிய வெளிவிவகார அமைச்சு அவரைக் கவரும் வகையில் கூறியிருந்தது. ஆனாலும், அவர் குறித்த சந்திப்புக்குச் செல்லவில்லை. கடந்த புதன்கிழமை நடைபெறவிருந்த சந்திப்புக்கான முன்னேற்பாடாக ஏற்கனவே ராம் மாணிக்கலிங்கம் நோர்வே வந்து சென்றிருக்கிறார். அதன் அடிப்படையில் கடந்த புதன் கிழமை நோர்வேஜிய நிறுவனங்கள் ஒழுங்குசெய்த சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. இந்த நகர்வின் ஓர் அங்கமாக, ஒஸ்லோவில் இருக்கும் சில ஈழத்தமிழர் அமைப்புகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டுவிடவேண்டும் என்று சில முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், இவ்வாறான முயற்சிகள் பயனளிக்கவில்லை. நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, நோர்வே ஈழத்தமிழர் மக்களவை, நோர்வே பொருண்மிய மதியுரையகம், தமிழ்ப் பெண்கள் அமைப்பு மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆகிய ஐந்து நிறுவனங்களும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனவின் அதிகாரபூர்வமான நல்லிணக்க முகவரான இந்த ராம் மாணிக்கலிங்கத்துடனான சந்திப்பைத் தாம் ஏன் புறக்கணித்தோம் என்பதற்கான ஒருமித்த தன்நிலை விளக்கத்தை ஆங்கிலத்தில் கடந்த புதன்கிழமையன்று வெளியிட்டிருந்தன. குறிப்பாக, உலக சக்திகள் அபிவிருத்தி என்ற அணுகுமுறையில் கொழும்பை மையப்படுத்தியே சிந்திக்கின்றன என்பதையும், அந்தச் சிந்தனை முறை அடிப்படையிலேயே குளறுபடியானதென்பதையும், தவறானதொரு அணுகுமுறையில் புலம் பெயர் மக்களை அணுகுவதற்குப் பதிலாக, தங்களது சிந்தனை முறையில் நல்லதொரு பிரளய மாற்றத்தை முதலில் ஏற்படுத்தி, ஈழத்தமிழரின் உண்மையான அபிவிருத்தி என்பது என்ன என்பதைப் புரிந்துகொண்டு உலக சக்திகளின் அணுகுமுறையை மாற்றுவது எப்படி என்றே இந்த நோர்வேஜிய நிறுவனங்கள் சிந்திக்கவேண்டும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும், இந்த நிலைப்பாட்டிலேயே தாம் ராம் மாணிக்கலிங்கத்துடனான சந்திப்பை புறக்கணிப்புச் செய்வதாகவும் இந்த ஐந்து நிறுவனங்களும் தமது நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தன. இந்த ஐந்து நிறுவனங்களோடு அழைக்கப்பட்டிருந்த ஏனைய அமைப்புகளான தமிழர் வள ஆலோசனை மையம், தமிழ் இளையோர் அமைப்பு, நோர்வே தமிழ்ச்சங்கம், மற்றும் தமிழ் இந்து கலாச்சார மன்றம் ஆகிய அமைப்புகளும் குறித்த சந்திப்புக்கு சமுக மளித்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக, அழைக்கப்பட்ட 12 அமைப்புகளில், ஒன்பது அமைப்புகள் சந்திப்பைப் புறக்கணித்தன அல்லது தவிர்த்துக்கொண்டன என்று இறுதியாகக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. மிகுதி மூன்று அமைப்புகளும் வேறுவிதமான சிந்தனைப்போக்கினைக் கொண்டவை. இவைபற்றி பின்னர் நோக்குவோம். அதற்கு முன்னர், விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையாக நாம் எதை நோக்கவேண்டும் என்பதைப் பார்ப்போம். எம்மைக் கையாளவிழைகின்ற நோர்வே அரச, அரச சார்பற்றதாகக் கூறிக்கொண்டு இயங்கும் நிறுவனங்கள் எப்படிச் சிந்திக்கின்றன. அவை வெளியிடும் கருத்துக்கள் என்ன. நடைமுறையில் என்ன விதமான தடயங்களை அவர்கள் விட்டுச்செல்கிறார்கள். யார் யாருடன் நாம் தொடர்பாட வேண்டும் என்று அவர்கள் அதீதப் பிரயத்தனங்களை மேற்கொள்கிறார்கள். எவ்வாறு இந்த நகர்வுகளுக்கு நிதி வழங்கல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சர்வதேச ரீதியில் இவர்களின் வலைப் பின்னல்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பது போன்ற தரவுகளை நோக்குவதன் மூலமும் அவர்களின் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக அவதானிப்பதன் மூலமுமே அவர்களின் நகர்வுப் போக்குகளையும் சிந்தனை ஓட்டங்களையும் நாம் அவதானிக்கலாம். இவற்றை அவதானிக்கின்ற அதேவேளை எம்மைக் கையாள விழையும் நோர்வேஜிய நிறுவனங்களுடனும் எமது விவாதத்தை கருத்தியல் ரீதியாக மேற்கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது. அவ்வாறு எமது கருத்தியலை முன்வைப்பதற்கு அவர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கவேண்டும் என்பது கூட அவசியமில்லை. அவர்களின் கருத்தியலுக்கு மாற்றான கருத்தியலை அவர்கள் உள்வாங்கக்கூடிய வழிமுறைகளில் முன்வைப்பதே போதுமானது. இந்தக் கருத்தியல் விவாதம் எழுகின்றபோது அவர்களின் பதில் நடவடிக்கைகள் எவ்வாறு அமைகின்றன என்பதும் எமக்கு அவர்களின் போக்கை வெளிப்படுத்தும். இதற்கு மொழி வன்மையும், தொழிநுட்ப வன்மையும் அவசியமாகிறது. அவர்களின் தளத்திற்கு உட்புகுந்தும் எமது கருத்தியல் முன்னெடுக்கப்படவேண்டும், உட்புகாத நிலையிலும் வெளியில் இருந்து அது மேற்கொள்ளப்படவேண்டும். அதேவேளை வெளியே இருந்து செயற்படுவோர் உள்ளே புக முற்படுவதும் பொறியாகிவிடும். இந்த அரசியற் புலனாய்வுத்திறன் சர்வதேசமயப்படுத்தப்பட்ட அரசியற் போராட்டத்திற்கு தற்போதைய காலத்தில் அடிப்படையானது. அதன் ஒருங்கிணைப்பும் சரியான முறையில் ஒரு நாட்டுக்குள் நடைபெறவேண்டும். பொதுவாக, இவ்வாறான முறையில் நாம் ஆழமாக ஆராய்ந்து அவர்களது ஓட்டங்களை அறிந்துவிடுவதில் எமது முயற்சியைச் செலவிடாதிருப்பதற்காகவே எமக்குள் திட்டமிட்டு உள் முரண்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. அவர்களின் எண்ணக்கருவை நோக்கியே நாம் சிந்திக்க நிர்ப்பந்திக்கப்படும்போது, எமது நிறுவனங்களின் உட்கட்டமைப்புகளையும், முரண்நிலைகள் மையம்பெறும் எமது புகலிடவாழ்வின் நகரத்தையும், அந்த நகரத்தின் ஏதோ ஒரு பகுதிக்குள்ளும், இறுதியில் வெறும் கட்டடக் காட்டிலே அமைந்திருக்கும் சுவர்களுக்குள்ளேயும் எமது சிந்தனைகளும், முயற்சியும், முரண்பாடுகளும், செயற்பாடுகளும் முடக்கப்பட்டுவிடும். நாம் நகரங்களுக்குள்ளும், எமது சமூகத்தின் உள் வரம்புகளுக்குள்ளும் சிறைவைக்கப்படுகிறோம். நாம் இவ்வாறு சிறைவைக்கப்பட்டாலே ‘கையாளப்படுபவர்களாக’ இலகுவில் மாற்றப்பட்டுவிடுவோம். எனவே, பிளவுகளுக்கு அப்பாற்பட்டு, மேவி நின்று நிதானமாக சிந்திக்கின்ற, தொடர்ச்சியாக அவதானிக்கின்ற ஆற்றல் எமது நிறுவனங்களிடையே இருக்கவேண்டும். குறைந்த பட்சம் கருத்தியல் இணைப்புக்கான ஒரு சக்தியேனும் எம்மிடையே இருக்கவேண்டும். அது எம்மிடையே இல்லாமற்போய்விடவில்லை என்பதற்கான நம்பிக்கைதரும் அறிகுறியே ஒஸ்லோவில் கடந்த புதன் கிழமை முன்னெடுக்கப்பட்ட தீர்க்கமான நகர்வின் பின்னாலுள்ள போராட்ட அரசியல் ஆகும். மிகுதி தொடரும்.