fd3mbf_iEJAஒசையின்றி நடக்கின்றது ஓர் உலகப் போர் – – வேல் தர்மா June 5, 2016 Political article தென் சீனக் கடலில் சீனா நிர்மாணித்த தீவுகளுக்குச் சவால் விட அமெரிக்கப் போர் விமானங்களும் நாசகாரிக் கப்பல்களும் செல்கின்றன. சிரியாவில் வல்லரசு நாடுகளின் படை நடவடிக்கைகளின் நடுவில் ஒரு மோசமான மனிதப் பேரவலம் நடந்து கொண்டிருக்கின்றது. போல்ரிக் கடலிலும் கருங்கடலிலும் இரசியப் படைகளும் நேட்டோப் படைகளும் ஒன்றின் மூக்கு வரை மற்றதன் கைகள் வீசப்படும் நிலைவரை சென்றுள்ளன. எஸ்த்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய நேட்டோ உறுப்பு நாடுகளை இரசியா 60 மணித்தியாலங்களுக்குள் ஆக்கிரமிக்கலாம் அதைத் தடுக்க நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பால் ஏதும் செய்ய எனப் படைத்துறை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த முறுகல் நிலைகளும் போரும் ஒரு புறம் நடக்க ஓசையின்றி ஒரு போர் உலகில் நடக்கின்றது.அது பெரிதாக மக்களைச் சென்றடைவதில்லை. நான்காம் முனைப்போர் மற்றப் படைத்துறை நடவடிக்கைகளுக்கு என ஜெனிவா உடன்படிக்கை ஐக்கிய நாடுகளின் சாசனம் எனப் பல விதி முறைகள் இருப்பது போல் இணைய வெளிப் படைத்துறைக்கு என ஏதும் இல்லை. இதனால் இணையவெளிப் போர் கட்டுப்பாடின்றி நடக்கின்றது. ஓசையின்றி நடக்கும் இப் போர் தரை, வானம், கடல் ஆகிய மூன்றிலும் நடக்கின்றன. பல நாடுகளிடையேயும் தீவிரவாத அமைப்புக்களுக்கும் அரசுகளுக்கும் இடையில் நடக்கும் இந்தப் போரில் துப்பாக்கிகள் வெடிப்பதில்லை குண்டுகள் வீசப்படுவதில்லை. அந்தப் போர்தான் இணையவெளிப்போர். இணைய வெளியில் உளவுகள் பார்க்கப் படுவதுண்டு, தகவல்கள் கொள்ளை அடிக்கப் படுவதுண்டு.தாக்குதல்கள் நடத்தி பெரும் சேதங்கள் விளைவிக்கப் படுவதுண்டு. பல நாடுகளும் தீவிரவாத அமைப்புக்களும் இணையவெளிப் படைப்பிரிவை அமைத்துள்ளன. தரைப்படை, கடற்படை, வான் படை போல் இணையவெளிப் படையும் போரின் இன்றியமையாத பிரிவாக உருவாகிப் பல ஆண்டுகள் கடந்துவிட்டன. நாடுகள் கூட்டாகச் செய்யும் போர் ஒத்திகையில் இணைய வெளித் தாக்குதல்களும் ஒன்றாக அமைந்துள்ளன. தனிப்பட்ட ரீதியில் இணையவெளியில் தாக்குதல்கள் திருட்டுக்கள் செய்பவர்களை hacktivists என அழைக்கின்றனர். அமெரிக்காவின் 2018-ம் ஆண்டுத் திட்டம் ஐக்கிய அமெரிக்கா 2018-ம் ஆண்டில் நிறைவேற்றப்படும் இணையவெளி படைத் திட்டம் ஒன்றை வரைந்துள்ளது. அதில் 133 பிரிவுகள் இருக்கும். அவற்றில் 27 தாக்குதல் அணிகளாகும். 133 பிரிவுகளிலும் 4300 படையினர் இருப்பர். 27 தாக்குதல் அணியில் 1600 படைவீரர்கள் இருப்பர். இவர்கள் வெறும் படை வீரர்கள் அல்லாமல் கணனித்துறை நிபுணர்களாக இருப்பர். இவர்கள் சீனாவின் இணைய வெளித் தாக்குதல்களை சமாளிப்பதிலும் ஈடுபடுவார்கள். அத்துடன் வட கொரியாவின் இணையவெளிப் படைப்பிரிவான Bureau 121இன் நடவடிக்கைகளுக்குப் பதில் நடவடிக்கை எடுப்பார்கள்.அமெரிக்காவின் படைத் துறை இரகசியங்களை இணைய வெளி மூலம் எதிரி நாடுகள் திடுடாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இந்த இணையவெளிப்படைப்பிரிவினர் ஈடுபடுத்தப்படுவர். அமெரிக்கா உருவாக்கும் போர் விமானம் தொடர்பான இரகசியங்களை எதிரி நாடுகள் திருடி அவற்றை அழிப்பதற்கான வழி முறைகளை சில நாட்களிலேயே உருவாக்கி விடலாம். முன்பு அப்படி ஒன்றை உருவாக்கப் பல ஆண்டுகள் எடுக்கும்.அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் ஒகஸ்டா நகரில் அமெரிக்காவின் இணைய வெளிப் படைப்பிரிவின் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு ஊடுருவிகளின் பல்கலைக் கழகமும் (hacker university) அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் Fort Gordon என அழைக்கப்படுகின்றது. அங்கு எதிரியின் கணனித் தொகுதிகளை ஊடுருவும் முறைகள் பற்றிய பயிற்ச்சி, ஆராய்ச்சி போன்றவை நடக்கின்றன. வெளியுலக இணைய வெளித் தொடர்புகள் ஏதும் இன்றி இந்தப் பல்கலைக் கழகம் செயற்படுகின்றது. அங்கு கைப்பேசிகள் கூட எடுத்துச் செல்ல முடியாது. உள்ளக தொடர்பாடல்கள் மட்டுமே பாவிக்கப் படுகின்றன. புளோரிடா மாநிலத்தில் Pensacola நகரில் உள்ள Information Dominance என்னும் பயிற்ச்சி நிலையத்தில் ஆறுமாதங்கள் பயிற்ச்சி பெற்றுத் தேர்ச்சியடைந்தவர்கள் Fort Gordonஇல் மேலதிக பயிற்ச்சி ஒன்பது மாதங்களுக்குப் பெறுவார்கள்.பின்னர் அமெரிக்காவின் பல்வேறுபட்ட படை நிலையங்களில் Cyber Analysis Course என்னும் கற்கை நெறி போதிக்கப்படும். ஐக்கிய அமெரிக்கா தனது படைநடவடிக்கைகளை எதிரியின் படைத்துறை இலக்குகளுக்கு மட்டும் எதிராகச் செய்ய வேண்டும் என்ற தற்கட்டுப்ப்பாட்டுடன் செயற்படுவதாகச் சொல்லிக் கொள்கின்றது. அமெரிக்கப் படைத்துறை பல வெளிநாடுகளின் கணனிக் கட்டமைப்புக்களிற்குள் வைரசைப் புகுத்தி வைத்திருந்து தேவையான நேரங்களில் அவை அந்தக் கணனிக் கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்யும் ஒரு முறைமையை உருவாக்கியுள்ளது. இது வழமையான ஊடுருவல்களிலும் வேறுபட்டது. இந்த வைரசின் இருப்பைக் கண்டறிவதும் கடினம். அமெரிக்கப் படைத்துறை அமெரிக்க அதிபரின் ஒப்புதலின் பேரிலேயே இந்த வைரசுக்களை செயற்பட வைக்க முடியும். தகவல் வாரி அள்ளும் விமானம் 2016 மே மாத நடுப்பகுதியில் ஐக்கிய அமெரிக்காவின் EP-3E Aries என்னும் வேவு விமானம் சீன எல்லைக்கு அண்மையாக பன்னாட்டு வான் பரப்பில் பறந்து கொண்டிருக்கையில் சீனாவின் இரண்டு J-11 போர் விமானங்கள் அதற்கு 50 அடி அண்மையாகச் சென்று அதற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் பறந்தன. ஐக்கிய அமெரிக்கா இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தது. EP-3E Aries என்பது நான்கு இயந்திரங்கள் உள்ள 105அடி நீளமும் 34 அடி உயரமும் கொண்ட இலத்திரனியல் வேவுவிமானமாகும். இது பறக்கும் இடத்தில் இருந்து பல சதுரமைல் பரப்பளவில் உள்ள இலத்திரனியல் தகவல்களை வாரி அள்ளக் கூடியது எனச் சொல்லப்படுகின்றது. இந்த விமானத்தில் இணையவெளிப் படை வீரர்களும் உள்ளடக்கப் பட்டுள்ளனர். அவர்கள் இலத்திரனியல் கருவிகளை இயக்கி எதிரியின் தகவல் தொடர்பாடல்களை அபகரித்துக் கொள்வர். இப்படிப் பட்ட விமானம் தனது நாட்டிற்கு அண்மையாகப் பறப்பது ஆபத்து என்ற படியால் சீனா அதை இடைமறித்தது கூட்டுக் களவாணிகள் சீனாவும் இரசியாவும் இணைந்து அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் பலவற்றின் கணினிகளை ஊடுருவி அமெரிக்க அரசுறவியலாளர்கள் மற்றும் உளவாளிகள் பற்றிய பல தகவல்களைத் திரட்டியுள்ளன. விமானச் சேவைகளின் கணினிகளை ஊடுருவி அதன் பயணிகளின் விபரங்களையும் பயண விபரங்களையும் திரட்டி அதில் அரசுறவியலாளர்கள் யார் உளவாளிகள் யார் என்பது பற்றியும் அவர்களது நடமாட்டம் பற்றியும் தகவல்களை இரசியாவும் சீனாவும் பெற்றுக் கொண்டதுடன் இரு நாடுகளும் தாம் திருடிய தகவல்களை ஒன்றுடன் ஒன்று பரிமாறியும் கொண்டன என லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் பத்திரிகை அண்மையில் செய்தி வெளிவிட்டிருந்தது. அதே பத்திரிகை. ஜுனேய்ட் ஹுசேய்ன் என்ற ஒரு தனிநபர் அமெரிக்காவின் 1300அமெரிக்காவின் படைத்துறை மற்றும் உளவுத் துறையைச் சேர்ந்தவர்களின் பெயர்கள், படங்கள், முகவரிகள் போன்றவற்றை இணையவெளி ஊடுருவல் மூலம் திரட்டி பின்னர் அவற்றை சமூக வலைத்தளங்களில் பிரசுரித்து அவர்களைக் கொல்லும் படி வேண்டுகோள் விடுத்ததாகவும் அதே பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அமெரிக்க தொழில்நுட்பங்களை சீனா இணைய வெளியில் ஊடுருவித் திருடுவதால் அமெரிக்காவிற்கு ஆண்டு தோறும் 300 பில்லியன் டாலர்கள் இழப்பீடும் இரண்டு மில்லியன் பேருக்கான வேலைகள் இழக்கப்படுவதாகவும் அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள். சீனாவிடம் “இணையவெளி நீலப் படைப்பிரிவு” என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. இவை “இரவு யாளி” என்னும் பெயரில் பிரித்தானியாவிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் லொக்கீட் நிறுவனத்தின் கணனிகள் தொடர் ஊடுருவல் முயற்ச்சிகளுக்கு உள்ளாகி வருகிறது. முழுக்க முழுக்க கூகிளின் இணையத் தளம் போல் போலியான ஒரு இணையத்தளத்தை சீனாவில் உருவாக்கி அதில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் உண்மை என நம்பி உள் நுழைந்து தமது மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை பதிந்தனர். இதனால் பல இரகசியங்கள் திருடப்பட்டன. இணையவெளிப் போர்முனையில் சீனா முன்னணியில் இருக்கிறது என்று ஐக்கிய அமெரிக்கா அஞ்சுகிறது. இதனால் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தனது இணையவெளிப் போர் முறைமைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாக 27-01-2013இலன்று செய்திகள் வெளிவந்தன. இந்தியப் படைத்துறை இரகசியங்கள் சீனாவின் கையில் சீன இணைய ஊடுருவிகள் பலதடவை இந்தியப் படைத்துறைக்குத் தெரியாமல் அவர்களின் கணனிகளை ஊடுருவி பல தகவல்களைப் பெற்றுள்ளார்கள் என நம்பப்ப்டுகிறது. இதில் எந்த அளவு தகவல்கள் பாக்கிஸ்தானுக்குப் பரிமாறப்பட்டது என்பது பெரும் கேள்வி. மும்பையைச் சேர்ந்த ஒரு இணையவெளி ஊடுருவி தான் அரச அதிகாரிகளுக்கு தனது வைரஸை இணைப்பாகக் கொண்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் அதில் 75% மானவர்கள் அதைத் திறந்து பார்ப்பார்கள் என்றும் அதன் மூலம் தன்னால் பல அரச செயற்பாடுகளை மறு நாள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றார். சீனாவின் இணையவெளிப் படைப்பிரிவு இணைய வெளித் தாக்குதல், இணையவெளித் திருட்டு ஆகியவற்றில் சீனா முன்னணியில் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் கருத்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. சீனாவிடம் “இணையவெளி நீலப் படைப்பிரிவு” என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. ஒரு இலட்சம் படைவீரர்களைக் கொண்ட சீனாவின் இணையவெளிப் படைப்பிரிவு 12 பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அதில் மூன்று ஆராய்ச்சி மையங்களும் உண்டு. 2015-ம் ஆண்டு சீனா தனது படைத்துறையை மறுசீரமைத்த போது பல வேறுபட்ட துறையினரின் கட்டுப்பாடுகளில் இருந்த பல்வேறு இணைய வெளிப் படைப்பிரிவினர் ஒரு கட்டளைப் பணியகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர். 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவின் Fortune எனப்படும் ஊடகம் சீனா அமெரிக்காவில் இணையவெளி ஊடுருவல் செய்த இடங்களைக் கொண்ட ஒரு வரைபடத்தை வெளியிட்டது. அவ் ஊடுருவல்கள் மூலம் அமெரிக்காவின் வாகன உற்பத்தி தொடர்பான இரகசியங்கள், மருந்தாக்கல் இரகசியங்கள், படைத்துறை இரகசியங்கள், குடிசார் போக்கு வரத்துக் கட்டுப்பாட்டு முறைமைகள் பற்றிய தகவல்கள் உட்பட பல தகவல்களை சீனா திருடியதாக Fortune குற்றம் சாட்டியது. 500இற்கு மேற்பட்ட இணைய வெளி ஊடுருவல்கள் சீனாவில் இருந்து அமெரிக்காவில் 2005இலிருந்து 2015 வரை செய்யப்பட்டதாக Fortune தெரிவித்திருந்தது. Boeing, Lockheed Martin ஆகிய விமான உற்பத்தி நிறுவனங்களின் கணனித் தொகுதிகளை சீனா ஊடுருவி அமெரிக்கப் போர் விமானங்களின் இரகசியங்களைப் பெற்றுக் கொண்டது எனவும் குற்றம் சாட்டப்படுகின்றது. வட கொரியாவின் இணைய வெளிப் படையணி இணையவெளிப் போர் முறைமையில் முன்னணி்யில் இருக்கும் நாடுகளில் வட கொரியாவும் ஒன்றாகும். அது பல இளைஞர்களை கணனித் துறையில் பயிற்ச்சிக்கு என வெளி நாடுகளிற்கு அனுப்பி பின்னர் அவர்களை வைத்து தன் இணையவெளிப் படைப்பிரிவை உருவாக்கியது. பொருளாதாரப் பிரச்சனையில் இருக்கும் வட கொரியாவிற்கு மிகவும் குறைந்த செலவில் இணைய வெளிப் படைப்பிரிவை உருவாக்க முடிந்தது. வட கொரியாவின் இணைய வெளிப் படையில் 6,000 பேர் உள்ளனர். Bureau 121 என அழைக்கப்படும் இவர்களால் 2014-ம் ஆண்டு இலகுவாக Sony Picturesஇன் கணனிகளை ஊடுருவி உலகை உலுப்பக் கூடியதாக இருந்தது. வட கொரிய அதிபரை பேட்டி காண்பதை முக்கிய பங்காகக் கொண்ட Sony Picturesஇன் திரைப்படம அதிபரைக் கேலி செய்வதாக அமைந்ததால் ஆத்திரப்பட்ட வட கொரிய அரசு தனது இணைவெளிப்படையினரைக் கொண்டு Sony Picturesஇன் கணனிகளை ஊடுருவச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஐ எஸ் அமைப்பிற்கு எதிராக்க பிரித்தானியாவின் தாக்குதல் பிரித்தானியாவின் RAF Rivet என்னும் உளவு விமானம் லிபியாவின் சேர்டே நகரில் நிலை கொண்டுள்ள ஐ எஸ் போராளிகளின் தொடர்பாடல்களுக்கு எதிராக 2016 மே மாதம் 14-ம் திகதி ஒரு இணையவெளித் தாக்குதலை நடத்தியது. விமானத்தில் இருந்து ஒலிபரப்பப்பட்ட அலைவரிசைக் குழப்பி ஐ எஸ் போரளிகளின் தொடர்ப்பாடலை முற்றாக துண்டித்தது. தமது விமானத்தில் இருந்து வலு மிக்க்க ஒலிபரப்பிகளால் நாற்பது நிமிடங்கள் செய்யப் பட்ட இத் தாக்குதலால் ஐ எஸ் போராளிகள் கலவரமடைந்ததாக பிரித்தானியப் படையினர் தெரிவித்தனர். ஐ எஸ் போராளிகளுக்கு எதிராக ஒரு தரை அல்லது வான்வெளித் தாக்குதல் செய்யப்படும் போது இப்படிப்பட்ட தொடர்பாடல் துண்டிப்புக்கள் அவர்களை திக்கு முக்காடச் செய்யும்.2011-ம் ஆண்டு பிரித்தானியா தந்து இணையவெளி படைவலுவை 650மில்லியன் பவுண்கள் செலவில் பல ஆயிரம் இணையவெளி வல்லுனர்களை படைத்துறையில் இணைத்து அதிகரித்துக் கொள்வதாக அறிவித்தது. எதிர்காலப் போரில் முதலில் களமிறங்குவது இணைய வெளிப்படை. இணையவெளியில் பல தாக்குதல்களும் திருட்டுக்களும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. 1967-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேல் போரிலும் 1971-ம் ஆண்டு நடந்த பங்களாதேசப் போரிலும் வான்படையினரே முதலில் தாக்குதல்களைத் தொடுத்தனர். இனி வரும் காலங்களில் நடக்கும் போரில் இணையவெளிப் படையினரே முதலில் செயற்படுவர். 2014-இரசியா கிறிமியாவைத் தன்னுடன் இணைக்க முன்னர் பல இணைய வெளித் தாக்குதல்களை உக்ரேன் மீது மேற்கொண்டது. பொய்பரப்புரை, படைத்துறை வழங்கல் முறைமைகளைச் செயலிழக்கச் செய்தல், உட்கட்டுமானங்களைப் பராமரிக்கும் கணனிகளைச் செயலிழக்கச் செய்தல் ஆகியவை இரசியாவால் செய்யப்பட்டதாகக் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப் பட்டன.