விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும். குறைந்த தூரம் ஓடி மேல் எழும்பிப் பறக்கக் கூடிய விமாங்கள் இதற்கெ உருவாக்கப் பட்டன. பின்னர் விமாங்களை கவண்கள் மூலம் செலுத்தும் முறைமை உருவாக்கப்பட்டன. ஐக்கிய அமெரிக்கா ஒரு படி முன்னேறி மின் காந்தத் தொழில் நுட்பம் மூலம் பாரமான போர்விமானங்கள் குறைந்த தூரம் ஓடி மேல் எழும்பும் தொழில்நுட்பத்தை உருவாக்கியது. அமெரிக்கா 10 விமானம் தாங்கிக் கப்பல்களையும் இந்தியாவும் இத்தாலியும் இரண்டு விமானம் தாங்கிக்கப்பல்களையும் பிரேசில், சீனா, இரசியா, பிரான்ஸ், ஸ்பெயின், தாய்லாந்து ஆகியவை ஒரு விமானம் தாங்கிக் கப்பல்களையும் வைத்திருக்கின்றன.

 

உலகின் முன்னணி விமானம் தாங்கிக் கப்பல்கள்:

 1. Gerald Ford-USA
  2. Queen Elizabeth – U. K
  3. Admiral Kuznetsov – Russia
  4. Liaoning – China
  5. Charles De Gaulle – France
  6. Vikramaditya – India
  7. Cavour Italy
  8. Sao Paulo – Brazil
  9. Juan Carol – Spain
  10. Chakri Naruebet – Thailand

 

சிங்கிளாக வராத சிங்கம்

விமானம் தாங்கிக் கப்பல்கள் தனித்துப் பயணிப்பதுமில்லை அவற்றை சுற்றி ஒரு பெரும் பரிவாரம் எப்போதும் இருக்கும். அவை விமானம் தாங்கிக் கப்பலுக்கு பல வட்டப் பாதுகாப்பை வழங்கும். இதில் பல நாசகாரிக் கப்பல்கள் ஈடுபடுத்தப்படும். அத்துடன் குறைந்தது ஒரு frigate கப்பலாவது இருக்கும். மொத்தக் கப்பல்களையும் Carrier Battle Group என அழைப்பர். விமானம் தாங்கிக் கப்பலை எதிரி விமானங்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க ஒரு Guided Missile Cruiser  என்னும் வழிகாட்டல் ஏவுகணை தாங்கிக் கப்பல் அந்தப் பரிவாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும். Light Airborne Multi-Purpose System என்னும் முறைமை கொண்ட கப்பல் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் கடற்கப்பல்களில் இருந்தும் பாதுகாக்கும்.

 

உலகின் முதற்தர விமானம் தாங்கிக் கப்பல்
அமெரிக்கா உருவாக்கியுள்ள USS Gerald R. Ford விமானம் தாங்கிக் கப்பல் மற்ற நாடுகளின் விமானம் தாங்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் இரண்டு தலைமுறைகள் முந்தி விட்டது என சீன ஊடகம் ஒன்று கருத்துத் தெரிவித்தது. 2005-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கப்பல் 2013 ஒக்டோபர் 11-ம் திகதி மிதக்க விடப்பட்டது. ஆனால் 2016-ம் ஆண்டுதான் அது முழுமையான பயன்பாட்டுக்கு விடப்படும். முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜெரால்ட் ஃபோர்ட் அவர்களின் நினைவாக இந்த விமானம் தாங்கிக் கப்பல் பெயரிடப்பட்டுள்ளது. அவர் அமெரிக்கக் கடற்படையின் தளபதியாகவும் இருந்தவர்.  ஆயிரத்து நூற்று ஆறடி நீளமான USS Gerald R. Ford அணுவலுவில் இயங்குகின்றது. 12.8 பில்லியன் டொலர்கள் செலவில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்கப் படைத் துறை வரலாற்றில் மிக அதிகம் செலவு செய்து உருவாக்கப்பட்ட ஒரு படைக்கலனாகும்.

USS Gerald R. Ford இன் சிறப்பு அம்சங்கள்:

 • ஒரு நாளில் இரு நூற்றி இருபது பறப்புக்களை மேற்கொள்ளக் கூடிய தொண்ணூறு விமானங்களை இது தாங்கக் கூடியது.
 • இதன் இயக்கங்கள் யாவும் எண்மியப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக மின்சாரத்தில் இயங்கங்கக் கூடிய இந்த விமானம் தாங்கிக் கப்பலிற்குத் தேவையான மின்சாரம் அணுவலுவில் இருந்து பெறப்படுகின்றது. The comprehensive power system of the carrier refers to a wholly information-based digital system controlled by computer with electricity as the power.
 • பொதுவாக விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து விமானங்கள் கிளம்பும் போது சிறு தூரம் அசைந்து பறக்க ஆரம்பிக்க வேண்டும். இதற்காக இதுவரை விமானம் தாங்கிக் கப்பல்களில்  நீராவிக் கவண் அதாவது steam catapult போன்ற தொழில் நுட்பம் பாவிக்கப்படுகின்றது. ஆடு மேய்ப்பவர்கள் V வடிவத் தடியில் இறப்பர் கட்டி செய்யும் கவணில் இருந்து கல் வீசுவது போல விமானங்கள் பறக்கச் செய்யப்படும். ஆனால் இந்த விமானம் தாங்கிக் கப்பலில் அணுவலுவால் மின்காந்த தொழில் நுட்பம் முதல் முதலாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரண்டு முதல் நாற்பது தொன் வரையான எடையுள்ள ஒரு விமானம் ஒரு சில நொடிகளில் மணிக்கு இருநூற்றி இருபது கிலோ மிட்டர் வேகத்தைப் பெறும். நீராவிக் கவண் தொழில் நுட்பப்படி ஆகக் கூடியது பதினெட்டுத் தொன் எடையுள்ள விமானங்களை மட்டுமே செலுத்த முடியும்.
 • முப்பது கடல் மைல்களிற்கு அதிக வேகமாகப் பயணிக்கக் கூடியது. 112,000 எடையுள்ளது. இருபத்தைந்து மாடிகளைக் கொண்டது. 54 ஆண்டுகள் சேவையில் இருக்கக் கூடியது.
 • உலகின் எந்தப் பாகத்திற்கும் செல்லக் கூடியது.
 • மற்ற வகை விமானம் தாங்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் முப்பது விழுக்காடு குறைந்த பணியாட்கள் இதற்குப் போதும்.
 • இதில் Sea Sparrow missile எனப்படும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை கப்பல்களைத் தாக்க வரும் உயர்வேக ஏவுகணைகளை அழிக்கக் கூடியவை.
 • அடுத்த தலைமுறை போர்விமானங்களையும் ஆளில்லாப் போர் விமானங்களையும் தாங்கக் கூடியது. இதன் மின்காந்த வீச்சு முறைமையால் சிறிய ரக ஆளில்லா விமானங்களும் இதில் உண்டு.

 

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்கா உருவாக்கிய விமானம் தாங்கிக் கப்பல்கள் அதன் உலக ஆதிக்கத்தில் முக்கிய பங்கு வகித்தன. ஐயாயிரம் படைவீரர்களையும் 90 விமானங்களையும் கொண்ட பத்து பெரு விமானம் தாங்கிக் கப்பல்கள்(supercarriers) மிதக்கும் விமானத் தளங்களாக உலகெங்கும் வலம் வருகின்றன. மூன்று கால்பந்தாட்ட மைதானங்களின் நீளம் கொண்ட இந்த விமானம் தாங்கிக்கப்பல்கள் அணுவலுவில் இயங்குகின்றன. பெரு விமானம் தாங்கிக் கப்பல்கள்(supercarriers) ஒரு இலட்சம் தொன் அல்லது 64,000 மெட்ரிக் தொன் எடையுள்ளவை. இவற்றால் ஒவ்வொரு முப்பது செக்கண்ட்களுக்கும் ஒரு விமானத்தை வானில் பறக்க விட முடியும். அமெரிக்கா ஆசியாவில் செலுத்தும் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டும் நோக்கத்துடன் இருக்கும் சீனா முதலில் தகர்க்க வேண்டியது அதன் கடற்படை வலுவையே. பிரித்தானியா உலக ஆதிக்கம் செலுத்திய போது அதன் கடற்படை உலகின் முதற்தரம் வாய்ந்ததாக இருந்தது.

 

சீனாவைக் கலங்கடித்த அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்கள்

1995-ம் ஆண்டு சீனா தாய்வானை ஆக்கிரமிக்கத் திட்ட மிட்டிருந்த வேளையில் அப்போது அமெரிக்காவின் அதிபராக இருந்த பில் கிளிண்டன் சீனாவிற்கும் தாய்வானிற்கும் இடையில் உள்ள தாய்வான் நிரிணைக்கு USS Nimitz என்னும் விமானம் தாங்கிக் கப்பலை அனுப்பி அதை சீனக் கரையில் இருந்து 50 மைல் தொலைவில் நிலை கொள்ள வைத்தார். இரண்டாவது USS Independence என்னும் விமானம் தாங்கிக் கப்பலை தாய்வானின் கிழக்குக் கரைக்கும் அனுப்பினார். அமெரிக்காவின் இப்பெரும் படைவலுவைச் சமாளிக்க முடியாத சீனா தாய்வானை ஆக்கிரமிக்கும் எண்ணத்தைக் கைவிட்டது. இதன் பின்னர் அமெரிக்காவின் விமானாம் தாங்கிக் கப்பல்களை எப்படிச் சமாளிப்பது என்பதில் சீனா அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றது.

 

சீனாவின் பதிலடியும் அமெரிக்காவின் அதிரடியும்

மேற்படி கிளிண்டனின் மிரட்டலுக்குப் பின்னர் சீன விமானம் தாங்கிக் கப்பல்களை அழிக்கக் கூடிய ஏவுகணைகளையும் நீர் மூழ்கிக் கப்பல்களையும் உருவாக்குவதில் அதிக அக்கறை காட்டியது. சீனா உருவாக்கிய ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளும் இரகசியமாக உருவாக்கிய நீர்முழ்கிக் கப்பல்களும் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களை செல்லாக்காசாக்கி விட்டன எனப் படைத்துறை கருத்து வெளியிட்ட வேளையின் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பெண்டகன் மூன்று புதிய Ford-class aircraft carriers வாங்க நிதி ஒதுக்கியது. ஒன்றிற்கான செலவு 13பில்லியன் டொலர்களாகும். இது அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களை சீனாவால் ஏதும் செய்ய முடியாத வகைக்கு அமெரிக்கா தனது ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளையும் நீர்முழ்கிக் கப்பல்களை வேட்டையாடும் விமானங்களையும் உருவாக்கி விட்டது என்பதைக் காட்டியது. 2015-ம் ஆண்டு அமெரிக்காவின் படைத்துறை உற்பத்தி நிறுவனமான போயிங் வானில் விமானம் போல் பறந்து சென்று பின்னர் கடலுக்குள் நீர்மூழ்கி போல் சென்று எதிரியின் நீர்மூழ்கிகளை தாக்கி அழிக்கும் குண்டுகளை உருவாக்கியது. இவை High Altitude Anti-Submarine Warfare Weapon Capability (HAAWC)  என அழைக்கப்படுகின்றன. தன்னகத்தே கணனியைக் கொண்ட இந்த குண்டுகள் விமானங்கள் செய்மதிகளின் உதவிகளுடன் தமது பறப்புப் பாதையை தாமே நிர்ணயித்துக் கொள்ளும் Smart Bombs ஆகும். 2015-ம் ஆண்டு இந்தக் குண்டுகளைத் தாங்கிச் செல்வதற்காக 29 Boeing P-8A Poseidon maritime patrol jets விமானங்களையும் அமெரிக்கப் படைத்துறை வாங்கியது. அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பல்களைப் பாதுகாக்க புதிய வகை ஆளில்லாப் போர்விமானங்களையும் பரீட்சித்துப் பார்த்துள்ளது. இந்த ஆளில்லா விமானங்கள் 6,000 இறாத்தல் எடையுள்ள துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளை தாங்கிக் கொண்டு இரண்டாயிரம் மைல்கள் பறக்கக் கூடியவை. இவை அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களைப் பாதுகாக்க ஈடுபடுத்திய மிகவும் செலவு மிக்க F-35C விமாங்களிலும் பார்க்க மலிவானவையாகும்.

 

சீனாவின் குழவித் தாக்குதல் திட்டம்

பல விமானங்களில் சென்று பல ஏவுகணைகளை அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களைத் தாக்கும் திட்டத்தையும் சீனா கொண்டுள்ளது. இது இலங்கைக் கடற்படை இஸ்ரேலிடமிருந்து வாங்கிய டோராப் படகுகளை விடுதலைப் புலிகள் பல சிறு படகுகளில் சென்று தாக்கும் போது ஒரு படகில் வெடி குண்டுகளை நிரப்பிக்கொண்டு தற்கொடை போராளிகள் டோராவில் மோது அதை மூழ்கடிக்கும் திட்டம் போன்றது. சீனாவைப் பொறுத்த வரை அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலுக்கு சிறு சேதத்தை ஏற்படுத்தினாலே அது பல மாதங்கள் செயற்பட முடியாமல் போகும் என நினைக்கின்றது. ஆனால் பல விமானங்களாள் செய்யப் படும் குழவித் தாக்குதலுக்கு அமெரிக்கா லேசர் படைக்கலன்களைப் பாவித்து முறியடிக்க முடியும். லேசர் படைக்கலங்கள் ஒளிக்கதிர்களைப் பாய்ச்சி எதிரியின் விமானங்களையும் ஏவுகணைகளையும் எரித்துக் கருக்க முடியும். அமெரிக்கா தானியங்கிகளாகச் செயற்படக்கூடிய லேசர் படைக்கலங்களை உருவாக்கி வருகின்றது. அவற்றால் பல இலக்குகளை அழிக்க முடியும். உலகிலேயே அதிக அளவு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்ட நாடாக சீனா இருக்கின்றது. விமானம்தாங்கிக் கப்பல்களை அழிப்பதெற்கென ஓசை எழுப்பாத அதி மௌனமான(Ultra-silent) நீர்மூழ்கிக் கப்பல்களையும் சீனா உருவாக்கியுள்ளது. அவை Carrier Killer என அழைக்கப் படுகின்றன.

 

சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்

சீனாவின் லியோனிங் விமானம் தாங்கிக் கப்பலுடன் நீர்மூழ்கிக்கப்பல்கள், ஃபிரிக்கேட் கப்பல்கள், நாசகாரிக் கப்பல்கள், சேவைவழங்கு கப்பல்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 2013 நவம்பர் நடந்த லியோனிங்கின் பரீட்சார்த்த நடவடிக்கைகளில் ஏவுகணைகளை அழிக்கக் கூடிய இரு நாசகாரிக் கப்பல்களான Shenyang உம் Shijiazhuang உம் இணைந்திருந்தன. அத்துடன் ஏவுகணைகளை வீசும் கப்பல்களான Yantai உம் Weifangஉம் உடன் சென்றன. சில படைத் துறை நிபுணர்கள் இந்த நான்கு கப்பல்களும் ஒரு விமானம் தாங்கிக் கப்பலைப் பாதுகாக்கப் போதுமானவை அல்ல என்கின்றனர். பொதுவாக சீன நாசகாரிக் கப்பல்கள் மற்ற நாட்டுக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறியவை என்கின்றனர். இதனால் போதிய அளவு படைக்கலன்களை இவற்றால் எடுத்துச் செல்ல முடியாது. அத்துடன் ஒரு விமானம் தாங்கிக் கப்பலில் விமானங்களை இறக்கவும் பின்னர் அதிலிருந்து பறக்கச் செய்யவும் விமானிகளுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்ச்சி தேவை எனப்படுகின்றது. இதனால் சீன விமானம் தாங்கிக் கப்பல் முழுமையான செயற்பாட்டில் இறங்க இன்னும் இரண்டு ஆண்டுகள் எடுக்கலாம். அமெரிக்காவின் முன்னணி விமானம் தாங்கிக் கப்பல்களில் ஒன்றான USS Ford 90 விமானங்களைத் தாங்கிச் செல்லக் கூடியவை அத்துடன் அவற்றை இலகுவாக வானில் எழவைக்கும் தொழில்நுட்பமும் உண்டு. சீனாவின் லியோனிங் 40 விமானனங்களை மட்டுமே தாங்கிச் செல்லும். அதில் உள்ள படைக்கலன்கள் குறுந்தூரம் மட்டும் பாயக் கூடியவை.

 

இரசியாவின் விமானம் தாங்கிக் கப்பல்

Kuznetsov  என அழைக்கப்படும் 40 விமானங்கள் தாங்கிச் செல்லக் கூடியது. இரசியாவின் இந்த விமானம் தாங்கிக் கப்பலில் கவண் மூலம் வீமானங்களை மேல் எழச் செய்யும் தொழில் நுட்பம் கூட இல்லாததால் அதன் விமானங்கள் பாரமான படைக்கலன்களை எடுத்துச் செல்ல முடியாது. மேலும் இது எரிபொருளால் இயங்கச் செய்யப் படுகின்றன அமெரிக்காவின் Nimitz class , Ford Class USS Washington Class ஆகிய விமானம் தாங்கிக் கப்பல்கள் அணுவலுவில் இயங்குபவை. பிரித்தானியாவின் Queen Elizabeth உம் அணு வலுவில் இயங்கும். இதனால் இரசியாவின் Kuznetsov  விமானம் தாங்கிக் கப்பல் அல்ல அது ஒரு பெரிய கப்பல் மட்டுமே என அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் சொல்வதுண்டு. ஆனால் இரசியாவின் Kuznetsov  இல் சிறந்த தாக்குதல் விமானங்களான Su-33இருக்கின்றன.

 

பிரித்தானியாவின் விமானம் தாங்கிக் கப்பல்

பிரித்தானியாவின் விமானம் தாங்கிக் கப்பலான  HMS Queen Elizabet  ஒரு supercarrier வகையைச் சார்ந்த விமானம் தாங்கிக் கப்பலாகும். இத்ஹு 2017-ம் ஆண்டு சேவையில் ஈடுபடுத்தப்படும். 2020-ம் ஆண்டு இதே வகையைச் சேர்ந்த  HMS Prince of Wales சேவைக்கு வரும். HMS Queen Elizabet இல்அமெரிக்காவின் F-35C விமானங்கள் இவற்றில் உள்ளடக்கப்படும்.  இவற்றால் குறுகிய தூர ஓட்டத்தின் பின்னர் வானில் எழும்ப முடியும். அத்துடன் மேலிருந்து கீழ் நோக்கித் தரையிறங்கவும் முடியும். அதை Short Take-Off and Vertical Landing (STOVL) என்பர். HMS Queen Elizabet ஆல் தரைமீது தாக்குதல், வேவுபார்த்தல், நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் ஆகியவற்றைச் செய்ய முடியும்.    HMS Prince of Wales விமானம் தாங்கிக் கப்பலில் கவண் மூலம் அதாவது  Catapult Assisted Take Off Barrier Arrested Recovery (CATOBAR) விமானம் எழும்பச் செய்யப்படும்.

 

இந்தியா

இந்தியா 7500 கிலோ மீட்டர் தூரமான தனது கடற்கரையைப் பாதுகாக்க ஒரு வலிமை மிக்க கடற்படையை வைத்திருத்தல் அவசியம். இரசியக் கடற்படையில் 1987இல் இணைந்து கொண்ட Admiral Gorshkov பனிப்போர் முடிவிற்கு வந்த பின்னர் பெரும் பராமரிப்புச் செலவைத் தவிர்ப்பதற்காக 1996இல் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டது. ஆனால் ஒரு தீவிபத்தில் சேதமடைந்த Admiral Gorshkov ஒரு கரையில் இருந்து துருப்பிடித்துக் கொண்டிருந்தது. இதில் இந்தியக் கடற்படையினர் தமது கண்ணை வைத்தனர். இதை இந்தியா பெருமளவு செலவழித்து திருத்தி புதுப்பித்து தனது விமானம் தாங்கிக் கப்பலாக மாற்றி அதற்கு விக்கிரமாதித்தியா எனப் பெயரிட்டது. 12 ஒற்றை இருக்கை மிக்-29 விமானங்களும், 4 இரட்டை இருக்கை மிக்-29 விமானங்களும் விக்கிரமாதித்தியாவில் இருக்கும்.
இந்தியாவின் விக்கிரமாதித்தியாவின் முக்கிய அம்சங்கள்
எடை    45,400 tons full load
நீளம்:     283.1 m
அகலம்:     51.0 m
ஆழம்:     10.2 m
உந்துவலு:     4 shaft geared steam turbines, 140,000 hp
வேகம்:     32 knots
வீச்சு:     13500 miles at 18 knots
சுடுகலன்கள்:     8 CADS-N-1 Kashtan CIWS guns
விமானங்கள்:     16 Mikoyan MiG-29K
உழங்குவானூர்திகள்:Ka-28 helicopters ASW,  Ka-31 helicopters AEW, HAL Dhruv ஆகியவற்றில் பத்து.
விமானம் இறங்கும் இடம்: 273m flight deck

விக்கிரமாதித்தயாவின் மிகப்பெரும் பலம் அதன் கதுவித் (Radar) திறனாகும்.
நிறைவேறுமா சீனக் கனவு?

சீனாவின்DF-21 “Carrier Killer” என்னும்  antiship ballistic missile என்ற ரக ஏவுகணைகளால் 810 கடல் மைல்கள் தொலைவில் உள்ள 1,100 அடி நீளமானதும் 70 விமானங்களைக் கொண்டதும் ஆறாயிரம் பேரைக் கொண்டதுமான ஒரு பெரிய விமானம் தாங்கிக் கப்பலை அழிக்க முடியும் எனச் சொல்லப் படுகின்றது. இதற்குப் பதிலடியாக ஐக்கிய அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பல்களுக்கு கவசமாக 40 கடற்கரைத் தாக்குதல் கப்பல்களை (littoral combat ships) இணைக்கின்றது. தொலைவில் உள்ள எதிரியின் இலக்குகளயும் படைக்கலன்களையும் இனம் காணக் கூடிய வகையில் இக்கப்பல்களில் உணரிகள் பொருத்தப்பட்டுள்ளன. 2015-ம் ஆண்டு சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று 12 மணித்தியாலங்களுக்கு மேல் ஜப்பானை ஒட்டிய கடற்பரப்பில்ல் அமெரிக்காவின் USS Ronald Reagan என்னும் விமானம் தாங்கிக் கப்பலை அதற்க்குத் தெரியாமல் தொடர்ந்து பின்னர் கடலின் மேற்பரப்பிற்கு வந்து தன்னை விமானம் தாங்கிக் கப்பலுக்கு காட்டிக் கொண்டது. ஆனால் ஒரு போர்ச் சூழலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மீது எந்த ஒரு நீர்மூழ்கிக் கப்பலாலும் தாக்குதல் நடத்த முடியாது என்றும் இந்த நிலை 2017வரை இருக்கும் என்றும் அமெரிக்கப் படைத்துறை ஆய்வு நிறுவனமான RAND  தெரிவிக்கின்றது. அமெரிக்காவின் விமானம் தாங்கித் தொழில்நுட்பம் இரண்டு தலைமுறைகள் அதன் எதிரி நாடுகளிலும் பார்க்க முந்தியவையாகும். அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களை அணுவலுவில் இயங்கும் SNN வகையைச் சார்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் பாதுகாக்கின்றன. அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலை அழிக்கக் கூடிய நீர்மூழ்கிக்கப்பல்களை சீனா உருவாக்க்கினால் அவற்றை இடைமறித்து அழிக்கும் முறைமையை உருவாக்குவது அமெரிக்காவிற்கு சிரமமான காரியமல்ல