மாவீரரை தந்த இசைவீரன்

துயிலும் இல்லத்திலே
மாவீரர்கள் விதைக்கப்பட முன்னே
‘சூரிய தேவனின் வேருகளே
ஆயிரம் பூக்களைச் சூடுகிறோம்’ என‌
அழுதழுது ஒலிக்கும்
சாந்தனின் பாடல்.

ஈழத்துப் போர்க்காலத்தில்
போராளிகளின் தோள்களில்
துப்பாக்கி இருந்தது.
வாய்களில் உங்கள்
பாட்டு இருந்தது.

‘இந்தமண் எங்களின்
சொந்தமண்’ என‌
சொன்னவர் ஆயிரம்
பாடியதோ நீங்கள் மட்டுமே…

குரலை மட்டுமா
கொடுத்தீர்கள் மண்ணுக்கு.
பெற்ற கொழுந்துகளையும்
மாவீரராய் கொடுத்தீர்களே..

ஆரம்ப இராணுவ‌
பயிற்சிக் கல்லூரிகளில்
அதிகாலை நான்கு மணிக்கு
‘பாயும் புலியணி வீரம் பேசிடும்’
பாடல் கேட்டபடிதான்
பயிற்சிப் போராளிகள்
பணி தொடங்குவர்.

சோற்றுக்கு வழியின்றி
துயர்சுமந்த காலத்திலும்
‘பிட்டுக்கு மண்சுமந்த…’
பாடல் கேட்கையில்
பசியாறுமே சாந்தண்ணா…

பூநகரி வென்றபோது
“சங்கு முழங்கடா தமிழா”
ஆனையிறவுச் சமருக்காய்
“ஆனையிறவின் மேனிதழுவி
போனது போனது பூங்காற்று”
முல்லைச்சமர் முடிந்தபின்னே
“முல்லைமண் எங்களின் வசமாச்சு
ஈழம் முறிலும் வெல்வது திடமாச்சு”
கிளிநொச்சி சமர் முடிய‌
“கைகளில் விழுந்தது கிளிநொச்சி
புலி
வென்றதை பாடடி தங்கச்சி”
புலனாய்வுத் துறையதன்
புதுப்பாடல் இறுவட்டிலும்
பூத்ததே உங்கள் பாடல்.

நரம்புகள் இயக்கத்தை
நோயது தடுத்தாலும்
உங்கள் நா பதிந்த இயக்கத்தை
எதுதான் தடுக்கும்?

இசைப்பேரரசே…
உம்பிள்ளை
இசையரசனையும்
இம்மண்ணுக்கு கொடுத்தீரே…

எஸ்.ஜீ.சாந்தன்
பாடகன் எனும்
பதத்தினுள் மட்டும்
பதுக்கப்பட வேண்டியவனல்ல.
அதற்கு அப்பால்
ஆயிரமாயிரம் பாயிரத்தினால்
அர்ச்சிக்கப்பட வேண்டியவன்.

நவீன காலத்திலும்
பதுங்குகுழி ஒலிப்பதிவு கலையகத்தில்
பாடியது சாந்தன் குரல்.

பக்திப் பாடல்கள்
உங்கள் குரலில் கேட்கையில்
ஒரு சுகம்.
ரி.எம்.எஸ் இன் பாடலும்
உங்கள் குரலில்
தித்திக்கும் ரகமே தனி.

‘ஆதியாய் அநாதியாய்
அவதரித்த செந்தமிழ்’ என‌
அழுத்திச் சொன்னவா
தலைமையின் பாடல்கள்
தாராளமாய் தந்தவா..
போர்முடிந்த பின்னே
புனர்வாழ்வு முகாம்வலி அனுபவித்தவா..
காலம் உள்ளவரை
கானமாய் பயணிக்க வா…

சாந்தனின் பாடல்கள்
போர்க்காலக் குயிலின்
பூபாள் இராகங்கள்.

எஸ்.ஜீ.சாந்தன்
முகத்தினால் அறியப்பட்டவரல்ல.
படத்தினாலும் அறியப்பட்டவரல்ல.
குரலினால்தானே அறியப்பட்டதிந்த குயில்.
அந்தக்குரல்
இதோ….இப்போதும்
உயிரோடு உலவுகிறதே…
அப்படி இருக்க‌
எஸ்.ஜீ.சாந்தனை
இறந்துவிட்டார் எனலாமோ…?

யோ.புரட்சி,
26.02.2017,