நோர்வேயில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் எழுச்சிநாள் March 8, 2017 News உலகப்பெண்களுக்கே வழிகாட்டியாக உயர்ந்து நின்ற எமது பெண்கள் தலைவனின் வழிநடத்தலில் அனைத்துத்துறைகளிலும் தம்மை வளர்த்தது மட்டுமன்றி, தமிழ் தேசிய உணர்வுகளையும்கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வித்திட்டவர்கள். எந்தவொரு நாட்டுடனும் ஒப்பிடமுடியாத அளவிற்கு பெண்களின் புரட்சிக்கு செயல்வடிவம் கொடுத்து உயர்ந்து நின்றவர்கள். அதிகாரப்போக்கினாலும், ஆக்கிரமிப்பாளர்களின் கொடூர வெறியினாலும் எம்மினத்தின் உரிமை நசுக்கப்பட்டது, ஆனால் இப்போது மீண்டும் பெண்ணடிமை தலை தூக்கி நிற்கின்றது. சமூகப்பிரச்சனைகளை உருவாக்கி ஆளுமை சிதைந்த அடிமைத்தன வாழ்வுக்கே பெண்ணினத்தை மீண்டும் வழிநடத்திச்செல்கிறது. திட்டமிட்ட இன அழிப்பின் பெயரில் எங்கள் உறவுகள் சிதைக்கப்பட்டு வருகிறார்கள். நாம் எங்கு நிற்கின்றோம்?கர்ப்பிணி பெண்கள் தொடக்கம் பெண்குழந்தைகள் வரை நாளுக்குநாள் திட்டமிட்டு வன்புணர்வுகளினால் சிதைக்கப்பட்டு அழிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கான வன்முறைகள் நீடித்துக்கொண்டே போகின்றது. எமது பெண்ணினத்தை எப்படிக் காப்பாற்றப் போகின்றோம்? ஆபத்திலிருந்து எம் பெண்ணினத்தை காப்பாற்ற நோர்வே தமிழ் மகளிர் அமைப்பினரினாகிய நாம் அனைத்துப் பெண்களையும் உள்வாங்கி பெண்களிற்கு அறிவூட்டல் வாய்ப்பும், பொருளாதார வாய்ப்பும் அளித்து ஒருங்கிணைந்த பெண்கள்சமூகமாக அடிமைகளற்ற பெண்ணெழுச்சியுள்ள சமூகமாக உருவாக்க தொடர்ந்து எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம். அந்தவகையில் அனைத்துலக பெண்கள் எழுச்சிநாளில் பல்லின மக்களுக்கு எமது பிரச்சனைகளை வெளிக்கொணரும் முகமாக அவர்களோடு இணைந்து நோர்வே தமிழ் மகளீர் அமைப்பினர் போராட்டத்தினை நடாத்தியுள்ளனர்