தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தெளிவுறுத்தல் November 3, 2017 TCC தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தெளிவுறுத்தல் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தின் நிர்வாகத்திற்கும் அங்கு பணியாற்றிவந்த ஒரு தமிழாசிரியருக்கும் இடையே எழுந்துள்ளதாகக் கூறப்படுகின்ற பிணக்கை முன்வைத்து ஒஸ்லோவில் அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூகப்பிளவு தொடர்பான தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தெளிவுபடுத்தல். குறித்த பிணக்குத் தொடர்பாக அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் நிர்வாகம் பொறுப்புடன் சுமுக நடவடிக்கைக் குழு ஒன்றை நியமித்திருப்பதை நாம் வரவேற்கிறோம். இந்தப் பிணக்கைப் பயன்படுத்தி குழுவாதப் போக்குகளில் ஈடுபடுபவர்கள் எமது அமைப்பின் பெயரைத் தமது உள்நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியிருப்பதால் கொள்கைரீதியான எமது நிலைப்பாட்டை ஐயந்திரிபுற பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு எழுந்துள்ளது. தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டப் பாதையில் புலம் பெயர் மக்களின் நலன் பேணும் கட்டமைப்புக்கள் பல உருவாக்கம் பெற்றன. இவற்றின் உருவாக்கத்திற்குத் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனை அடித்தளமாக இருந்தது. ஆயிரமாயிரமாய்த் தம்முயிர் ஈந்த தன்னலமற்ற மாவீரர்களின் உன்னதமான தற்கொடையாலும், பல்லாயிரக்கணக்கான போராளிகளினதும் தமிழீழ மக்களினதும் தீரம் செறிந்த பங்களிப்பாலும், தமிழீழ விடுதலைப் போராட்டம் புடம்போடப்பட்டு வீறுநடைபோட்ட காலத்தில், புலம்பெயர் சூழலில் இந்த அமைப்புக்கள் வித்தூன்றின. இவை தமிழீழத் தேச உருவாக்கத்திலும், அரச உருவாக்கத்திலும் தூண்களாகவும் விழுதுகளாகவும் பரிணாம வளர்ச்சிகண்டன. ஆகவே, இவற்றின் நீடித்த செயற்பாடு தமிழ்த் தேசியத்தின் உயிர்ப்பாகும். இவற்றின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் பலரும் பங்களித்திருக்கிறார்கள். ஆனால், எவரும் தமது முற்காலப் பங்களிப்பைக் காரணம் காட்டி தனிநபராகவோ அல்லது குழுமங்களாகவோ இந்த அமைப்புகள் மீது உரிமைகோர முயல்வதைத் தேசியப் பிறழ்வு நடவடிக்கையாகவே நாம் நோக்கவேண்டியிருக்கிறது. இந்த அமைப்புகளின் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் பங்களித்தவர்களில் ஒரு பகுதியினர் தாங்கள் பின்னாளில் எடுத்திருக்கும் குழுவாத நிலை காரணமாக தேசவிடுதலைப்போராட்டக் காலத்தில் உருவாக்கப்பட்ட அமைப்புகளில் தமக்கு ஒரு வகிபாகம் இருப்பதான மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களைக் காட்டி, பரப்புரைகளை மேற்கொண்ட, பிளவு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலேயே தொடர்ச்சியாக நாட்டம் காட்டுவதை நாம் காண்கிறோம். ஏற்கனவே நொந்துபோயிருக்கும் புலம்பெயர் சமூகத்தை மேலும் பிளவுபடுத்தும் செயற்பாடாகவே இந்தப் போக்கை நாம் நோக்கவேண்டியிருக்கிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாகவே இது அமைந்திருக்கிறது. ஆகவே, அன்னை பூபதி கலைக்கூடம், தமிழர் வள ஆலோசனை மையம் ஆகியவற்றின் நிர்வாகங்கள் மீது மேற்கொள்ளப்படும் சிதைப்பு மற்றும் கைப்பற்றல் முயற்சிகளுக்குத் துணைபோக வேண்டாம் என்று தேசியத்தின் பெயரால் வேண்டுகோள் விடுக்கிறோம். ஏற்பட்டிருக்கும் பிணக்கைச் சுமுகமான அணுகுமுறையூடாக அணுகும் ஆற்றலைக் குறித்த நிறுவனங்கள் வெளிப்படுத்தியிருப்பதை நாம் உணருகிறோம். இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்களுக்கு மேலோட்டமாக எடுபடாது, ஆழமான பின்னணிகள் பற்றிய விளக்கத்தோடும், பகுத்தறிவுக் கண்ணோடும் தேசிய, சமூகப் பிரக்ஞையோடும் அவற்றைப் பார்க்குமாறு அனைவரையும் இத்தருணத்தில் வேண்டிக்கொள்கிறோம். எமது உள் முரண்பாடுகளை நாகரீகமான நிறுவன வழிமுறைகளில் தீர்த்துக்கொள்வோம். தேசியச் சிதைப்புக்கும், தேசிய நீக்கத்துக்கும் எமது அகமுரண்பாடுகளை எவரும் பயன்படுத்த இடமளிக்கமாட்டோம் என்று உறுதியெடுத்துக் கொள்வோம்! தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்! நன்றி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – நோர்வே ஓஸ்லோ – 03-11.2017