சொந்த இடத்தில் குடியேற்றாவிட்டால் தீக்குளித்த உயிரை மாய்ப்போம்-பரவிப்பாஞ்சான் மக்கள் July 5, 2014 News சொந்த இடங்களை அரசு தர மறுத்தால் தீக்குளித்து எம் உயிர்களை மாய்த்துக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என்று கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் தங்களை தமது சொந்த இடத்தில் மீளக்குடியேற்றுமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை நடத்திய போராடத்டத்தின்போது அவர்களின் ஆவேசக்குரல்கள், அழுகுரல்கள், கண்ணீரைப் பார்த்து அங்கு கூடிநின்ற பலரும் கண்கலங்கினர். மேற்படி மக்களின் போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இப்போராட்டத்தில் பங்குபற்றிய கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் தம்நிலை தொடர்பாக அங்கு தெரிவிக்கையில், “தலைமுறை தலைமுறையாக நாங்கள் பரவிப்பாஞ்சான் பகுதியில் வாழ்ந்து வந்தோம். ஆனால் இன்று எங்களுடைய நாட்டில் சொந்த கிராமத்திலேயே நாங்கள் இன்று அகதிகளாக இருக்கின்றோம். ஒவ்வொருவருடைய வீடுகளில் தங்கிவாழ வேண்டிய அவல நிலையில் இருக்கின்றோம். எங்களிடம் இருந்த சொத்து பரவிப்பாஞ்சானில் உள்ள எமது நிலம் மட்டும்தான். எங்கள் நிலங்களில் விளையும் பொருட்கள் எல்லாம் இன்று தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன ஆனால் நாங்கள் இன்று ஒன்றுக்கும் வழியில்லாத ஏதிலிகளாக மாற்றப்பட்டு நடுத்தெருவில் விடப்பட்டுள்ளோம். எங்களுடைய நிலங்களை விடுவிக்கக் கோரி அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட எமது நிலங்கள் தொடர்பான உறுதிப்பத்திரத்தின் பிரதிகளை கையளிக்க மாத்திரம் பெரும் தொகையான பணத்தினை நாம் செலவிட்டுள்ளோம். ஆனால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. விடுதலைப் புலிகள் அந்த இடத்தினை ஆக்கிரமித்திருந்த காரணத்தினாலேயே எம்மையும் அங்கு குடியேற்ற முடியவில்லை என்று படைத்தரப்பு கூறுகின்றது. ஆனால், விடுதலைப் புலிகள் அங்கு இருந்த காலத்தில் நாம் எமது நிலங்களில், சொந்த வீடுகளிலேதான் வசித்து வந்தோம். மெனிக்பாமில் இருந்து எம்மை இங்கு கூட்டிக் கொண்டு வரும் போது எம்மை எமது சொந்த நிலத்தில் மீள்குடியேற்றுவதாக தெரிவித்தனர். ஆனால் அங்கிருந்து வந்து இன்று 5 வருடங்கள் கடந்து விட்டன. எங்களை எமது நிலத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை. சொல்லொணாத் துயரங்களை நாங்கள் நாளுக்கு நாள் சந்தித்து வருகின்றோம். எங்களுடைய பொறுமைக்கும் எல்லையுண்டு. அரசின் இந்த அடக்குமுறை தொடருமானால் தீக்குளித்து எம் உயிர்களை மாய்த்துக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என்று கண்ணீர் மல்கக் கூறினர். http://www.youtube.com/results?search_query=paravipanchan நன்றி: சங்கதி24