இரசியப் பொருளாதாரம் ஒரு மோசமான நிலையில் இருக்கின்றது, இன்னும் ஓராண்டுக்குள் இரசிய அரசு முறியலாம் எனச் சில பொருளியலாளர் எதிர்வு கூறுகின்றனர்.  இரசியாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு குறைந்து கொண்டே போகின்றது. அதன் பாதீட்டில் வரவிலும் பார்க்க செலவு அதிகரித்திருப்பதை தொடர்ந்து பேண முடியாத அவல நிலை உருவாகியுள்ளது. உக்ரேனிடம் இருந்து பிடுங்கிய கிறிமியாவைத் தக்க வைக்க பெரும் செலவு செய்ய வேண்டியுள்ளது. இரசியாவின் பொருளாதாரம் இத்தாலியிலும் சிறியதாகி விட்டது. இப்படி இரசியாவிற்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன.  2011இல் இருந்து2015வரை இரசியப் படைக்கல ஏற்றுமதி 28 விழுக்காடு அதிகரித்துள்ளது.

 

இரசியப் பொருளாதாரத்தின் அச்சாணி

காஸ்புறம் (Gazprom)என்ற இரசிய நிறுவனம் உலகின் மிகப் பெரிய எரிவாயு உற்பத்தி நிறுவனமாகும்.  2015-ம் ஆண்டில் இருந்து உலகச் சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்ததால் காஸ்புறம் (Gazprom) புதிய முதலீடுகள் செய்வதை மிகவும் குறைத்துக் கொண்டுள்ளது. இரசியா சீனாவிற்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பெரிய நிறுவனமாக காஸ்புறம் (Gazprom) இருப்பதால் அதை முகாமை செய்வது கடினமாக இருக்கின்றது என்று சொல்லி அதைப் பல கூறுகளாகப் பிரித்து தனி நிறுவனங்களாக்கி தனித் தனியாக நிர்வகிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் பலதரப்பில் இருந்தும் விடப்பட்டுள்ளது. இரசிய அரசுக்கு சொந்தமான காஸ்புறம் (Gazprom) இரசிய அரசின் பொருளாதார அச்சாணி மட்டுமல்ல உலகில் இரசியா முன்னெடுக்கும் புவிசார் அரசியல் நகர்வுகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. 2015-ம் ஆண்டு அதன் இலாபம் 6விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. காஸ்புறம் (Gazprom) நிறுவனத்தின் பெறுமதி 2008-ம் ஆண்டில் இருந்ததுடன் ஒப்பிடுகையில் 86விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. 2016–ம் ஆண்டு காஸ்புறம் (Gazprom) நிறுவனத்தின் காசுக் கையிருப்புக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டும் வகையில் அதன் இலாபம் மிகக் குறைவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

படைக்கல வியாபாரம்

இரசியாவின் பொருளாதாரம் படைக்கலன்களின் உற்பத்தியில் ஓடிக்கொண்டிருக்கின்றது என்று சொல்லும் அளவிற்கு இரசியாவின் பொருளாதாரத்தில் அதன் பங்கு பெரிதாக உள்ளது.  இரசியாவிடமிருந்து இந்தியாவும் சீனாவும் பெருமளவு படைக்கலன்களை வாங்குகின்றன. இதன் மூலம் மலிவு விலையில் படைக்கலன்களை வாங்குவதோடு அவற்றின் தொழில்நுட்பத்தையும் வாங்குகின்றன. 2014-ம் ஆண்டில் இருந்து  உலகச் சந்தையில் இரசியாவின் படைக்கல ஏற்றுமதி அதிகரித்துச் செல்வதுடன் மேற்கு நாடுகளின் ஏற்றுமதி விழ்ச்சியடைகின்றது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து இரசியா படைத் துறைத் தொழில் நுட்பத்தில் அதிக முதலீடு செய்தமை நல்ல பயன் அளிக்கின்றது. சிரியாவின் இரசியா தனது வழிகாட்டல் ஏவுகணைகளை பரீட்சித்துப் பார்த்ததுடன் உலக நாடுகளுக்கும் அதன் திறமையைப் பறைசாற்றியது. 2014-ம் ஆண்டு இரசியாவின் முன்னணி படைக்கல உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் 48.4 விழுக்காட்டால் உயர்ந்தது.  உலகப் படைக்கல விற்பனையில் இரசியா மூன்றாம் இடத்தில் இருக்கின்றது. அந்த விற்பனையில் இரசியாவின் பங்கு 10 விழுக்காட்டிற்கும் அதிகமானதாகும்.  இரசியா உருவாக்கிய விமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு முறைமை உலகிலேயே சிறந்ததாகக் கருதப்படுகின்றது. இந்தியா, சீனா, ஈரான் போன்ற நாடுகள் அவற்றை வாங்கியுள்ளன. வீழ்ச்சியடையும் எரிபொருள் விலையும் மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடையும் இரசியாவின் நாணயமான ரூபிளின் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்ததால் உலகச் சந்தையில் இரசியப்படைக்கலன்களை மலிவாக வாங்கக் கூடியதாக இருக்கின்றது. மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி அமெரிக்கா படைக்கலன்கள் விறபனை செய்ய மறுக்கும் நாடுகளுக்கு இரசியா படைக்கலன்களை விற்பனை செய்கின்றது. அவ்வகையில் சிரியா, பெலரஸ், அஜர்பைஜான், கஜக்ஸ்த்தான், உகண்டா, வெனிசுவேலா ஆகிய நாடுகளிற்கு இரசியா பெருமளவு படைக்கலன்களை விற்பனை செய்கின்றது.

 

திறனற்ற உற்பத்தி

இரசியாவில் திறனற்ற நிர்வாகத்தால் பல படைக்கல உற்பத்திகள் உரிய நேரத்தில் செய்ய முடியாமல் இருப்பதாக அமேரிக்காவின் வோல் ஸ்ரிட் ஜேணல் 2015 நவம்பரில் சுட்டிக் காட்டி இருந்தது.  நேட்டோ நாடுகளிற்கு சவால் விடக் கூடிய வகையில் இரசியா வடிவமைத்த ஆர்மட்டா(Armata) தாங்கிகளின் உற்பத்தி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதன் உற்பத்தியில் காலதாமதம் ஏற்பட்டதுடன் உற்பத்திச் செலவும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. விளடிமீர் புட்டீனின் 2020-ம் ஆண்டு இரசியாவின் படைத்துறையை நவீனமயப்படுத்தும் திட்டதில் ஆர்மட்டா(Armata) தாங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உற்பத்திச் செலவு அதிகரிப்பால் இரசியா தாங்கிகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது. யூரல்ஸ் மலைச்சாரலில் உள்ள நகர் ஒன்றில் இத் தாங்கிகளை உற்பத்தி செய்யும் Uralvagonzavod தொழிற்சாலை பொதுமக்களின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது உலகின் மிகப் பெரிய தாங்கி உற்பத்தி நிறுவனமாக இருந்த இந்தத் தொழிற்சாலைக்குக் கடன் கொடுத்தோர் அதன் மீது வழக்கும் தொடுத்துள்ளனர்.  இரசியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமான T-50 jet fighter இல் நூறு உற்பத்தி செய்வதாக முதலில் திட்டமிட்டிருந்தது. இப்போது அது பன்னிரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு இரசியக் கடற்படையில் அடுத்த தலைமுறை அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் (next-generation Borei nuclear submarines) எட்டை உற்பத்தி செய்து முடிப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஆறு மட்டுமே உற்பத்தி செய்து முடிக்கப்படும் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. இரசிய அரசின் செலவீனக் குறைப்பு நடவடிக்க்கையில்  படைத்துறையின் செலவுகள் குறைக்கப்பட மாட்டாது என விளடிமீர் புட்டீன் பகிரங்கமாக முழங்கிய போதும் இரகசியமாக பல செலவீனங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க டொலரின் பெறுமதியில் இரசியப் படைத்துறைச் செலவு உலகின் மூன்றாவது பெரியது என்னும் நிலையில் இருந்து ஏழாவது என்ற நிலையை அடைந்துள்ளது. இதற்கு ரூபிளின் பெறுமதி வீழ்ச்சியும் ஒரு காரணியாகும். இந்தியாவிற்கு இரசியா தயாரித்த விக்ரமாதித்தியா விமானம் தாங்கிக் கப்பலும் சீனாவிற்குத் தயாரித்த ஐ எல் 76 படைத்துறைப் போக்குவரத்து விமானமும் உரிய நேரத்தில் விநியோகிக்க இரசியாவால் முடியாமல் போனதிற்கு இரசியாவின் திறனற்ற உற்பத்தியே காரணமாகும்.

 

தமது சுதந்திரத்தைப் பற்றிக் கவலைப் படாத இரசியர்கள்.

உலகில் சுதந்திரமாகப் பொருளாதாரம் செயற்படக்கூடிய 178 நாடுகளைக் கொண்ட பட்டியலில் ஹொங்கொங் முதலாம் இடத்திலும் சிங்கப்பூர் இரண்டாம் இடத்திலும் நியூசிலாந்து மூன்றாம் இடத்திலும் இரசியா 153வது இடத்திலும் இருக்கின்றன.  இரசியாவில் எடுத்த கருத்துக் கணிப்பீட்டின் படி 51விழுக்காடு மக்கள் சமூக நலக் கொடுப்பனவுகளுக்கும் அரச ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்க வேண்டும் என்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். 9 விழுக்காடு மக்கள் மட்டுமே பேச்சுரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். 53 விழுக்காடு மக்கள் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துதல் முக்கியம் என நினைக்கின்றார்கள்.

 

இந்திய அமெரிக்கப் படைத்துறை ஒத்துழைப்பு

இந்தியாவும் அமெரிக்காவும் படைதுறையில் ஒத்துழைப்பதற்கு இந்தியா அமெரிக்காவிலும் பார்க்க அதிக தயக்கம் காட்டுகின்றது. இந்தியாவிற்கான இரசியப் படைத்துறை ஏற்றுமதி இரசியாவைப் பொறுத்த வரை ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். உலகில் அதிக அளவு படைத்துறைக் கொள்வனவு செய்யும் நாடாக இந்தியா இருக்கின்றது. 2009-ம் ஆண்டில் இருந்து 20013-ம் ஆண்டு வரை இந்தியப் படைத்துறையின் இறக்குமதியில் 75விழுக்காடு இரசியாவில் இருந்து சென்றது.  ஆனால் அதன் பின்னர் இந்தியாவிற்கு பற்பணி நடுத்தர தாக்குதல் போர் விமானங்கள் தேவைப் பட்ட போது அவற்றை பிரான்ஸில் இருந்து பெற்றுக் கொள்ளத் தீர்மானிக்கப் பட்டது. தொடர்ந்து இந்தியா இரசியாவின் ஐ எல்-76 விமானங்களை வாங்காமல் அமெரிக்காவின் ஹேர்குல்ஸ் போக்குவரத்து விமானங்களை (C-130J Super Hercules transport aircraft) வாங்கியது. மேலும் நீர்மூழ்கிகளை வேட்டையாடும் விமானங்களையும் உலங்கு வானூர்திகளையும் ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து வாங்கத் தீர்மானித்தது. 2014-ம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு அடுத்த படியாக அதிக அமெரிக்கப் படைக்கலன்களை வாங்கும் நாடாக இந்தியா உருவெடுத்தது.  2020இற்கும் 2025இற்கும் இடையில் இந்தியா தனது படைத்துறைத் தேவையில் 75 விழுக்காட்டை தானே உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. இது இரசியப் படைத்துறை உற்பத்திக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவின் முன்னணிப் போர் விமான உற்பத்தி நிறுவனங்களான Northrop Grumman, Boeing, Lockheed Martin Corp, Raytheon Company ஆகியவையும் சுவீடனின் Saab AB நிறுவனமும் இந்தியாவில் போர் விமான உற்பத்தி செய்வதில் அக்கறைக் காட்டுகின்றன. நரேந்திர மோடியின் இந்தியாவில் உற்பத்தி செய்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக இணைவது என்ற போர்வையில் இந்தியாவிற்கு போர் விமானங்களை விற்பனை செய்வது இந்த நிறுவனங்களின் நோக்கம். எல்லாவற்றையும் முந்திக் கொண்டு அமெரிக்காவின் Lockheed Martin Corp நிறுவனம் F-16 போர் விமானங்களை இந்தியாவின் டாடா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தி செய்ய முன்வந்துள்ளது. இரசியாவின் படைத்துறை உற்பத்திப் பொருட்கள் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் மலிவானவை என்ற நிலையை இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் போது மாற்றியமைக்கும். 2016-ம் ஆண்டு மே மாதம் 11-ம் திகதி அமெரிக்கப் பாராளமன்றத்தில் இந்தியாவை மற்ற நோட்டோ நாடுகளிற்கும் இஸ்ரேலுக்கும் இணையான படைத்துறைப் பங்காளி நாடாக்கும் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 

ஆசியான் நாடுகளும் இரசியாவும்

2016 மே மாதம் 19-ம் 20-ம் திகதிகளில் இரசியாவின் சொச்சி நகரில் இரசிய – ஆசியான் இடையிலான உச்சி மாநாடு நடைபெற்றது.    இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புரூனே, வியட்நாம், லாவோஸ், மியன்மார், கம்போடியா ஆகிய நாடுகளைக் கொண்ட ஆசியான் கூட்டமைப்புடன் இரசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பாகும். ஆசியான் நாடுகளுடனான இரசியாவின் வர்த்தகம் 2015-ம் ஆண்டு 13.7 பில்லியன் டொலர்கள் மட்டுமே. இதைப் பெருக்க இரசியா விரும்புகின்றது. இது அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சி மையத்திற்கு சவாலாகும். வர்த்தகமும் பொருளாதாரமும் ஒரு புறம் இருக்க இரசியாவும் ஆசியான் நாடுகளும் தென்  சீனக் கடல் தொடர்பாக ஓர் ஒழுக்காற்றுக் கோவையை உருவாக்க ஒத்துக் கொண்டுள்ளன. அது இதுவரை காலமும் தென் சீனக் கடலில் சீனாவுடன் முரண்படும் நாடுகளுக்கு தானே இரட்சகன் என நினைத்துக் கொண்டிருந்த அமெரிக்காவிற்கு ஓர் இடியாகும். முதலில் நேட்டோவுடன் இணைய முனைந்த ஜோர்ஜியா, உக்ரேன் ஆகிய இரசியாவின் அயல் நாடுகளை இரசியா துண்டாடியது. அடுத்து சிரிய அதிபரை ஆட்சியில் இருந்து அகற்றும் அமெரிக்காவின் திட்டத்திற்கும் சவுதி அரேபியாவினதும் துருக்கியினதும் கனவிற்கும் இரசியா முட்டுக்கட்டை போட்டது. இப்போது தென் சீனக் கடலில் இரசியா கால் பதிக்க முனைகின்றது.

 

இரு முனை எரிவாயுப் போர்

புட்டீனின் உலக ஆதிக்கக் கனவைத் தகர்க்க இரச்சியாமீது மேற்கு நாடுகள் பொருளாதாராத் தடைகளை விதித்தன. பின்னர் எரிபொருள் விலைகளைச் சரிய வைத்தன. இவை இரண்டும் புட்டீனின் சண்டித்தனத்தைக் குறைக்க வில்லை. இதனால் இரசியாவிற்கு எதிரான எரிவாயுப் போரை அமெரிக்காவும் மேற்கு நாடுக்களும் தொடுத்துள்ளன.  அந்தப் போர் இரு முனைகளில் தொடுக்கப் பட்டுள்ளன.  ஒன்று கஸ்ப்பியன் கடல் எரிவாயுவை மேற்கு ஐரோப்பாவிற்கு விநியோகிப்பது. . அடுத்தது அமெரிக்காவில் இருந்து திரவ எரிவாயுவை கப்பல்கள் மூலம் மேற்கு ஐரோப்பாவிற்கு எரிபொருள் விநியோகம் செய்வது. கஸ்ப்பியன் கடற்பிராந்திய நாடான அஜர்பைஜானில் இருந்து துருக்கியூடாக இத்தாலிக்கு எரிவாயுவை குழாய் ஊடாக 45பில்லியன் டொலர்கள் பெறுமதியான விநியோகிக்கும் திட்டம் 2017-ம் ஆண்டு மே மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப் பட்டது. Trans-Adriatic Pipeline என அழைக்கப் படும் இத்திட்டம் 2020-ம் ஆண்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்கப்படுகின்றது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது எரிபொருள் தேவைக்கு இரசியாவில் தங்கியிருப்பதை தவிர்ப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். 2016 மே மாதம் 17-ம் திகதி பிரித்தானிய சஞ்சிகையான எக்கொனமிஸ்ற் இரசியாவின் எரிபொருள் நிறுவனமான காஸ்புறோமிற்கு வெட்டப் படும் பிரேதக் குழியாகும் என்ற தலைப்புடன் Trans-Adriatic Pipeline திட்டத்தைப் பற்றிய செய்தியை வெளிவிட்டது. ஐக்கிய அமெரிக்காவில் இருந்து திரவ எரிவாயுவை ஐரோப்பாவிற்கு விநியோகம் செய்வதன் மூலம் மேற்கு நாடுகள் இரசியாவில் இருந்து குழாயூடாக பெறும் எரிவாயுவிலும் பார்க்க  குறைந்த விலையில் மேற்கு ஐரோப்பியர்கள் வாங்க முடியும். அத்துடன் இரசியாவின் எரிபொருள் இன்றி மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மூன்றில் இரண்டு பகுதி வீடுகளில் அடுப்பு எரியாது மக்கள் குளிரில் நடுங்குவார்கள் என்ற நிலை மாற்றப்படும். ஒரு நீண்ட கால அடிப்படையில் ஐரோப்பாவில் இரசியாவின் எரிபொருள் மேலாதிக்கத்தை ஒழித்துக் கட்ட  சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி அதிகரிப்பையும், கஸ்பியன் கடற்பிராந்தியத்தில் இருந்தும் ஐக்கிய அமெரிக்காவில் இருந்தும் மேற்கு ஐரோப்பாவிற்கு எரிபொருள் விநியோகம் செய்வதையும் சமாளிக்க இரசியா தனது எரிபொருள் உற்பத்தியின் திறனை அதிகரிக்க வேண்டும்.

 

விளடிமீர் புட்டீனின் இரசியாவை மீண்டும் உலக அரங்கில் முன்னிலைப் படுத்தும் கனவின் முக்கிய அம்சம்  2020-ம் ஆண்டளவில் இரசியாவின் படைத்துறையை நவீன மயப்படுத்துவதாகும். நவீன மயப் படுத்தப் பட்ட படைத்துறையைப் பேணுவதற்கு உகந்தவகையில் இரசியாவின்  பொருளாதாரமும் வலுவான நிலையில் இருத்தல் அவசியம் அல்லது சோவியத் ஒன்றியத்திற்கு நடந்தது இரசியாவிற்கும் நடக்கும்