ஈழத் தமிழின அழிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுக்கும்  பிரையன் சேனவிரத்ன பற்றி சென்ற இதழில் விரிவாகப் பேச முடியவில்லை. இந்த வாரமும் அதே நிலைதான். மோடியின் பயணம் தொடர்பாகவே அதிகம் பேச வேண்டியிருக்கிறது. என்றாலும், சென்ற வாரம் பிரையன் அனுப்பியிருந்த மின்னஞ்சலில் உள்ள ஒரு வாக்கியத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் சுட்டிக்காட்டுகிறேன்.

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவை என்பது ஒரு கேலிக்கூத்து. 2009ம் ஆண்டு, ஒரு இனப்படுகொலையை ராஜபக்சே அரசு திட்டமிட்டு செய்து முடித்த ஓரிரு வாரத்தில், இலங்கையைப் பாராட்டித் தீர்மானம் போட்டது இதே பேரவை தான்” என்கிற வார்த்தைகளுடன் தனது மின்னஞ்சலை முடித்திருந்தார் பிரையன். அவரது இதயத்தின் துயரத்தை துல்லியமாக உணர்த்தின அந்த வார்த்தைகள்.

2009ல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்  கொண்டுவரப்பட்டது இலங்கையைக் கண்டிக்கிற தீர்மானம் தான். அது எப்படி பாராட்டுத் தீர்மானமாக மாற்றப்பட்டது என்பதையும், அதன் பின்னணியில்  அன்னையின்  சாம்ராஜ்யம்  கள்ளத்தனமாகப் பதுங்கி இருந்ததையும் இன்றும் நம்மால் மறக்க  முடியவில்லை. இலங்கை போயிருக்கும் ஸ்ரீமான் நரேந்திர மோடி, பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏதாவது பேசுவார் என்று பார்த்தால், சோனியாவின் துரோகத்தால் நிறைவேறிய அந்தப் பாராட்டுத் தீர்மானத்தை வரிக்கு வரி ஒப்பித்துக் கொண்டிருக்கிறார்.

பழைய திருடி, கதவைத் திறடி – என்கிற கணக்காக, ‘தீவிரவாதத்தை வெற்றிகரமாக முறியடித்திருக்கிறது இலங்கை’ என்று இலங்கை நாடாளுமன்றத்தில் முழங்குகிறது மோடியின் திருவாய். சோனியாவின் தயவில் உருவான அதே வார்த்தைகளை அப்படியே உச்சரித்திருக்கிறார் மனிதர். ஒரு வார்த்தையைக் கூட மாற்றவில்லை.

எனக்கென்னவோ சோனியாதான் மற்றவர்களைக் காட்டிலும்  தந்திரசாலி என்று தோன்றுகிறது. லட்சக்கணக்கான தமிழர்கள் அழிக்கப்படுவார்கள் என்பது தெரிந்தே திமிரோடு ஆயுதங்களைக் கொடுத்தார். இங்கேயிருந்த அரசு அதற்கு எதிராகக் கிளம்பிவிடக்கூடாது என்பதற்காக, எப்படி ‘செக்’ வைக்க வேண்டுமோ அப்படி ‘செக்’ வைத்தார். ‘இனப்படுகொலையா, அப்படின்னா என்ன? இயல்பாகத்தானே இருக்கிறது இலங்கை’ என்று ஒரு பாரதீய ஜனதா தலைவரையே சொல்லவைப்பதுதான் புத்திசாலித்தனம் என்பதை உணர்ந்து, சுஷ்மாவிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். சோனியா ஒப்படைத்த பொறுப்பை சிரமேற்கொண்டு செய்துமுடித்தார், சுஷ்மாஜி.

இப்போது, சோனியாவின் தயவால் போடப்பட்ட ஒரு தீர்மானத்தை, ஸ்ரீமான் மோடி அப்படியே ஒப்பிக்கும் அளவுக்கு நிலைமை போய்விட்டது. இத்தனைக்கும் மோடி சொந்தமாகப் பேசத் தெரிந்த தலை சிறந்த பேச்சாளர். பேச்சாற்றலாலேயே பிரதமரானவர்.

பிரையன் விஷயத்தில் எனக்கென்ன ஆச்சரியம் என்றால், இலங்கைக்காக அவர் பயன்படுத்திய சொற்றொடர் அப்படியே இந்தியாவுக்கும் பொருந்துவதுதான். இலங்கையில் மட்டுமில்லை, இந்தியாவிலும் குதிரை அதே திசையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஓட்டுபவர் மாறியிருக்கிறார்.

இந்தியாவிலிருந்து மகேந்திரரும் சங்கமித்திரையும் அமைதியையும் சகிப்புத்தன்மையையும் எடுத்துச் சென்றதாகத் தெரிவித்தபோது மோடியின் குரலில் பெருமிதம் பொங்கியிருக்கிறது. அந்த இரண்டையும் எம் தமிழ் உறவுகள் மட்டுமே கடைப்பிடித்தனர். அரசமரக் கிளையோடு கிளையாக மாறிவிட்ட  சிங்கள இனம் மானுட உணர்வுகள் மரத்துப் போய் மரமாகவே ஆகிவிட்டது. இதை மறந்து விட்டிருக்கிறார் மோடி.

அமைதியை விரும்பிய ஈழத் தமிழினத்தை, ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தைக் கொண்டுவந்து உசுப்பிவிட்டது சிங்களப் பேரினப் பூதம் தான்.  நியாயம் கேட்ட தமிழர்களை அது வதைத்தது. எதிர்த்த தமிழர்களைப் புதைத்தது. அத்தனையையும் சகித்துக் கொண்டுதான், சம உரிமை கொடு – என்று போராடினார்கள் தமிழர்கள். அது மறுக்கப்பட்ட பிறகே, ஆயுத அடக்குமுறை அதிகரித்தபிறகே, திருப்பி அடிக்கத் தொடங்கியது தமிழினம். இதையெல்லாம் மறந்துவிட்டு, தீவிரவாதம் என்று பேச எப்படி முடிகிறது ஒரு உபகண்டத்தின் பிரதமரால்?

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பற்றிய பிரையனின் கருத்து,  மோடியின் உரைக்கும் பொருந்துகிறது. வெறும் கேலிக்கூத்து!

பத்தினித் தெய்வமாக கண்ணகி போற்றப்படுவதைச் சுட்டிக்காட்டியிருக்கும் மோடிக்கு, கண்ணகி எதனால் போற்றப்படுகிறாள் என்பது தெரியுமா தெரியாதா? வீட்டுப் படிதாண்டி வெளியே வராத அந்தப் பெண்ணரசி, நிரபராதிக் கணவனுக்காக நீதி கேட்டு வீதிக்கு வந்தாளே, அதற்காகத் தான் வணங்கப்படுகிறாள். தேரா மன்னா…. என்று மன்னனின் அவையில் நின்று விழிநீர் துடைத்து விளித்தாளே…. அந்த ஓர்மத்துக்காகத் தான் போற்றப்படுகிறாள்.

இன்றைக்கு, அநீதியாகக் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் அப்பாவி உயிர்களுக்கு நீதி கேட்டுத்தான் உலகின் வீதியெங்கும் நிற்கிறார்கள் எங்கள் புலம்பெயர் உறவுகள். ராணுவத்தின் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல், வன்னி மண்ணிலும் நியாயம் கேட்கும் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. இந்தக் குரல்களைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாத மோடிக்கு, கண்ணகியின் குரல் மட்டும் கேட்கிறதாமா?

ஒன்றரை லட்சம் அப்பாவிகளின் உயிர்களுக்கு நியாயம் கேட்கும் எம் உறவுகளின் குரல்களை ஒடுக்கத்தான் – ‘தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை’ – என்கிற ஆயுதத்தைத் தூக்கிப்பிடித்தார் அன்னை சோனியா. அந்தத் துருப்பிடித்த ஆயுதத்தை சோனியாவிடமிருந்து இரவல் வாங்கலாமா மோடி!

கொழும்பில் போய் மோடி இறங்கியதும், அவருக்கு சிகப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதாக பேரானந்தத்துடன் அறிவிக்கிறது, ஒரு ஊடகம். (ஓர் ஊடகம் இல்லை – ‘ஒரு’ ஊடகம் – தமிழ் வெல்க!) ஆட்சிக் கட்டிலில் எவர் இருந்தாலும் ஊருக்கு முந்திக்கொண்டு பந்திக்குப் பாய் விரிக்கிற அந்த ஊடகம், மாண்டே போய்விட்டது பத்திரிகை தர்மம் என்பதை வேறெப்படித்தான் நிரூபிப்பது?

அந்த சிகப்புக் கம்பளத்தின் கீழே தான் ஒன்றரை லட்சம் உறவுகளின் எலும்புக்கூடுகள் இருக்கின்றன….. ஆயிரத்துக்கும் அதிகமான மீனவச் சகோதரர்களின் கனவுகள் இருக்கின்றன….. காணாமல் போனதாகக் கூறப்பட்ட எம் உறவுகளின் உயிர்கள் இருக்கின்றன. மானம் என்பதொன்று இருந்தால் தானே  இதை அறிய முடியும் அந்த அறிவாளிகளால்!

(மானம் இல்லாதவர்களையும் ஊனம் அடைந்தோர் பட்டியலில் சேர்க்க சட்டத்திருத்தம் கொண்டுவர முடியுமான்னு பாருங்க பொன்னார்! ஒரேயடியா தூங்கி வழிஞ்சுக்கிட்டிருந்தா எப்படி?)

கொழும்பு விமானநிலையத்தில் மோடியை வரவேற்றவர், ‘சுட்டுப்புடுவேன்’ புகழ் ரணில். ‘இனப்படுகொலை என்று தீர்மானம் போடுகிற விக்னேஸ்வரன் ஒரு பொய்யர்… யாழ்ப்பாணம் போகிறபோது  அந்தப் பொய்யரை நான் சந்திக்கவே மாட்டேன்’ என்று சென்ற வாரம் அறிவித்தாரே, அதே ரணில். மோடி மாதிரி மெய்யாலுமே மெய்யானவர்களை மட்டும்தான் ரணில் சந்திப்பார் போல!

காந்தி என்கிற அரை நிர்வாணப் பக்கிரி லண்டன் வருகிறபோது  பிரிட்டிஷ் பிரதமராகிய நான் சந்திக்க மாட்டேன் – என்று ஆணவத்துடன் அரைவேக்காட்டுத்தனமாக அறிவித்த பேச்சாளர் சர்ச்சிலை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இன்றைக்கு, இந்தியா வருகிற பிரிட்டிஷ் பிரதமர் எவரும் காந்தி சமாதிக்குப் போய் அஞ்சலி செலுத்தாமல் திரும்புவதில்லை. இங்கேயிருந்து போகிற தலைவர்கள் எவராவது சர்ச்சில் சமாதிக்குப் போய் அஞ்சலி செலுத்துகிறார்களா என்றால், அதுவும் இல்லை. பேச்சாளர்கள் பேச்சாளர்கள் தான், தலைவர்கள் தலைவர்கள் தான்!

கொழும்பில் மோடி கால்வைப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன், நீதி நியாயத்தையெல்லாம் இலங்கையிடம் யாரும் எதிர்பார்த்துவிடக் கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்து  விட்டார் அதிபர் மைத்திரிபாலா. ‘சர்வதேச விசாரணையின் மூலம் மட்டுமே, இனப்படுகொலைக்குக் காரணமானவர்களைக் கூண்டில் நிறுத்த முடியும்’ என்று ஒலிக்கிற உலகின் குரலை ஒதுக்கித் தள்ளிவிட்டு, “சர்வதேச விசாரணை என்கிற பேச்சுக்கே இடமில்லை” என்று கூறிவிட்டார்.

இலங்கையை இலங்கையே தான் விசாரித்துக் கொள்ளும் – என்கிற ராஜபக்சேவின் நூதனத் திட்டம் தான் மைத்திரியின் கைவசமும் இருக்கிறது. விசாரணையில் தலையிட ஐ.நா.வுக்கும் சர்வதேசத்துக்கும் அனுமதி கிடையவே கிடையாது – என்று  பறைசாற்றியிருக்கிறார் மைத்திரி. செல்லரித்துப்போன மகிந்த மிருகம்,  மைத்திரியின் திருவாசகத்தால் புல்லரித்திருக்கக் கூடும்.

“உலக நாடுகள் என்ன நெருக்கடி கொடுத்தாலும் உள்நாட்டு விசாரணையில் ஐ.நாவையும் சர்வதேசத்தையும் அனுமதிக்கப் போவதில்லை. ஒரு மாதத்தில் விசாரணைக்குழு அமைக்கப்படும். விசாரணை அதிகாரிகள் நடுநிலையாக (!) சுயேச்சையாக (!) இயங்குவார்கள்” என்று வேதம் ஓதுகிறது வேதாளம்.

மப்பும் மந்தாரமுமாக இருக்கிற ஒரு தெருப் பொறுக்கி, தெருவில் வருகிறவர்கள் போகிறவர்களையெல்லாம் புரட்டியெடுத்துவிட்டு, ‘என்னை நானே தான் விசாரித்துக் கொள்வேன்…. போலீஸ் கீலீஸெல்லாம் வந்தாக் கீச்சிடுவேன்’ என்று போதை தெளியும் வரை உதார் விடுவதைப் போல உளறிக் கொண்டிருக்கிறது இலங்கை.

அப்பாவித் தமிழ் மக்கள் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டு ஆறு ஆண்டுகளாகிறது. அப்பாவிகள் கொல்லப்பட்டதை ஐ.நா. உறுதி செய்து நான்காண்டுகள் ஆகிறது. ‘இன்னும் ஒரு மாதத்தில் விசாரணை’ என்று அப்போதிருந்து அறிவித்துக் கொண்டேயிருக்கிறது இலங்கை. இந்தியா உள்பட உலகிலிருக்கிற அத்தனை இளிச்சவாய்  நாடுகளும் – ‘என் தலையில் அரை’ என்று தத்தமது தலையில் மசாலா அரைக்க இலங்கைக்கு அழைப்பு விடுக்கிற அவலநிலை. இந்தக் கொடுமையைப் பார்த்து நொந்துபோன நிலையில்தான், ‘நடந்தது இனப்படுகொலை’ என்று ஆண்மையோடு அறிவித்தார் நீதியரசர் விக்னேஸ்வரன்.

வெற்று வேட்டு அரசியல்வாதியல்ல விக்னேஸ்வரன். வட மாகாண சபையில் ‘இனப்படுகொலை’ தீர்மானத்தை நிறைவேற்றிய கையோடு, காணாது போனவர்கள் சட்ட விரோதக்  காவலில் வைக்கப்பட்டிருப்பதாகக் குற்றஞ் சாட்டினார். அதற்கான ஆதாரம் இருப்பதாக அவர் அறிவித்த தொனியைப் பார்த்து  ஆடிப்போனது  மைத்திரி அரசு. விசாரணையின்றி காவலில் வைக்கப்பட்டிருப்போர் குறித்து விசாரிக்க உயர்நிலைக் குழு அமைக்கப்படும், அவர்களை விடுவிப்பதா வழக்குப் பதிவு செய்வதா என்பதை அந்தக் குழு முடிவு செய்யும் – என்று அவசர அவசரமாக அறிவிக்கிறது.

விக்னேஸ்வரனின் வெளிப்படையான புகார், இலங்கையின் செவுளில் மட்டுமில்லை….. கள்ளமௌனம் சாதிக்கும்  இந்தியாவின் செவுளிலும் சேர்த்தே அறைந்தது. அப்படி அறைந்தவரைப் பார்க்கத்தான், வன்னிக்கும் செல்கிறார் மோடி.

ஆறு ஆண்டுகளாக நியாயம் கேட்டுக் கொண்டிருந்தனர், காணாமல் போனவர்களின் உறவினர்கள். டேவிட் கேமரூன் வன்னிக்குப் போனபோது, சகோதரி அனந்தி தலைமையில் திரண்டனர். காணாது போன கணவனுக்காக, காணாதுபோன மகனுக்காக, காணாதுபோன தந்தைக்காக, காணாதுபோன உடன்பிறப்புக்காக…. என்று ஆயிரமாயிரம் குரல்கள் ஓங்கி ஒலித்தன. அவர்களைப் பற்றி ஒருவார்த்தை பேசவில்லை, இலங்கை. ‘பேசு கண்ணே பேசு’ என்று நண்பன் இந்தியா அறிவுறுத்தவுமில்லை.

ஆறு ஆண்டுகள் கழித்து, விக்னேஸ்வரனின் எச்சரிக்கைக்குப் பிறகு, விடுவிப்பதா விசாரணை செய்வதா என்று ஒரு குழு அமைக்கப்படும் என்று புற்றுக்குள்ளிருந்து பெருமூச்சு விடுகிறதே இலங்கை……. அந்த நாசமாய்ப் போன நச்சரவத்தின் ஒருமைப்பாட்டையா கட்டிக் காப்பாற்றப் போகிறார் நரேந்திர மோடி! முதல்ல தமிழ்நாட்டுல கட்சியைக் காப்பாத்துங்க பாஸ்! ஸ்ரீரங்கத்து முதலுக்கே மோசமாயிடக் கூடாது!

காணாமல் போனோரின் எண்ணிக்கை 80,000  என்பதை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அம்பலப்படுத்தியிருக்கும் சர்வதேச பொது மன்னிப்பு சபை (அம்னெஸ்டி), அவர்களுக்காக நீதி கேட்கும்  உறவினர்கள் கடும் நெருக்கடியில் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கிறது. ஆட்சிதான் மாறியிருக்கிறது, காட்சி மாறவில்லை – என்பது அம்னெஸ்டியின் வாதம்.

கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட, காணாமல் போன தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க மோடி துணை நிற்கவேண்டும் என்பது, தமிழர்களின்  சார்பில் பேசும் ராயப்பு ஜோசப் போன்றவர்களின் குரல் மட்டுமல்ல…. சர்வதேச மனித உரிமைப் போராளியான கல்லம் மேக்ரே போன்றவர்களின் குரலும் அதுதான்!

இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், எவன் செத்தால் எனக்கென்ன, நடைப்பிணமாயிருக்கிற இலங்கையின் ஒருமைப்பாட்டை உயிர்த்தெழச் செய்துவிட்டுத்தான் மறுவேலை என்பதைப் போல் மோடி நடந்துகொள்வதால் என்ன பயன்? இப்படியெல்லாம் பேசுவதை மெச்சி, ராஜீவ்காந்தி அறக்கட்டளையிலிருந்து விருது எதையாவது அவருக்குக் கொடுத்துவிடப் போகிறாரா அன்னை சோனியா?