2009 ஆம் ஆண்டு, சிங்களப் பேரினவாத அரசினால் தமிழினவழிப்புப்போர் மிகக் கொடூரமாக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், அதனைத் தடுத்து நிறுத்திட ஏனைய  நாடுகளில்  வாழந்துகொண்டிருந்த எமது உறவுகளைப் போலவே பெரும் உணர்வெழுச்சிமிக்க போராட்டங்களைப் பிரான்சு மண்ணிலும் நாம் நடாத்தினோம்.

நெஞ்சைப் பிழியும் பெரும் வலி சுமந்த நாட்கள் அவை! எமது அவலக் குரலைக் கேட்டு யாரும் எமக்கு உதவ முன்வரவில்லையே! தினமும் கொன்றிழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எமது மக்களைக் காப்பாற்ற முடியவில்லையே என ஆற்றாமையாலும் இயலாமையாலும் நெஞ்சம் பதறிக் கொண்டிருந்த நாட்கள் அவை.

அந்நாட்களில் தான் எமது வலியினைத் துயரினை உணர்ந்தவராக எமது போராட்டங்களில் போலா தன்னை இணைத்துக் கொண்டார்.தன் தள்ளாத  வயோதிபக் காலத்தில்  தளராத உறுதியோடு இடையறாது எமது போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றவர். அவரைத் தெரியாத தமிழர்கள்   இருக்கமுடியாது! அப்படி யாரேனும் இருந்தால் அவர்கள் போராட்டங்களில் பங்கேற்காத  தமிழர்களாக இருக்க வேண்டும். ஆனால் அவர் அவர்களுக்குமாகவே போராடினார். கடமை மறந்த தமிழர்கள் வெட்கப்படும்படி அவர் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றார்.

வெள்ளையின வயோதிபத் தாய், எமது போராட்டக்களங்களில் எப்போதும் முன்னணியில்  இருப்பார். எமது  தேசியக் கொடியினை தாங்கி நிற்பார்.

தலையிலே  தேசியத் தலைவரின் படம் பொறித்த  கிரீடம்  அணிந்திருப்பார். எமக்கு  ஆறுதல் வார்த்தைகளைக் கூறிக் கொண்டேயிருப்பார். சோர்ந்து போகாமல் எம்மை உற்சாக மூட்டிக்கொண்டே இருப்பார் அவர் தான் அன்னை போலா!பின்னர் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் உறுப்பினராகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டார்.தனது இறுதிக் காலங்களில் தமிழ்மக்களோடு மிக நெருக்கமான உறவைப் பேணிக் கொண்டார்.

அவர்  தனது முதுமைக் காலத்திலும் தனிமையிலேயே வாழ்ந்து வந்தார். ஆயினும் இன்று கோடிக்கணக்கான தமிழர்களின் உறவுக்காரராக அவர் எம் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து நிற்பார்!

போய் வாருங்கள் தாயே! உங்களது பணிகள் குறித்து நாம் பெருமிதம் கொள்கின்றோம். அன்பினில் விளைந்த நன்றியுணர்வோடு மதித்துப் போற்றுகின்றோம். எங்கள் தாயகக் கனவில் உங்கள் பெயரையும் பொறித்து வைப்போம்!

ஊடகப்பிரிவு

பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை.

01-04-2015