விடுதலைப் புலிகளின் சிந்தனையை தான் சரியாக புரிந்து கொள்வதுடன் அதற்கு ஆதரவு வழங்குவதாக அமெரிக்க செனட்டின் கறுப்பின பிரதிநிதி டானி டேவிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த  வாரம் இலங்கையில் இன மதசுதந்திரம் தொடர்பான அமெரிக்க காங்கிரஸின் குழுவினர்  சிறிசேன அரசாங்கத்தின் கீழான தற்போதைய நிலை குறித்து கூடி ஆராய்ந்துள்ளனர்.

இவர்களுக்கு இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து சர்வதேச நெருக்கடி குழு,மனித உரிமை கண்காணிப்பகம், பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு போன்ற அமைப்புகள் விளக்கவுரை வழங்கியுள்ளன..

இங்கு உரையாற்றிய அமெரிக்க செனட் பிரதிநிதி பில்ஜோன்சன் இலங்;கையில் உண்மையான முன்னேற்றம் ஏற்படுவதற்கு யுத்தகுற்றங்களுக்கு பொறுப்பு கூறப்படுதல் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் காண்பதற்காக சர்வதேச சமூகம் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என செனட் பிரதிநிதி டானி டேவிஸ் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னியிருந்தவேளை தான் செஞ்சோலைக்கு விஜயம் மேற்கொண்டதையும்,பின்னர் அதனை பயங்கரவாதிகள் முகாம் என பிழையாக சித்தரித்து இலங்கை விமானப்படையினர் குண்டுவீசி அழித்ததையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

இலங்கையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களையும் நினைவு கூர்ந்துள்ள அவர் விடுதலைப்புலிகளின் கொள்கைக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

நான் சரியான பக்கத்திலேயே உள்ளேன் அமெரிக்காவில் உள்ள ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனத்தை சேர்ந்தவன் என்ற வகையில் புலிகளின் சிந்தனையை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது என அவர் தெரிவித்துள்ளார்