தலைவருக்கு வயது அறுபத்தி ஒன்றாகிறது. அவர் குரல் கேட்காமல்விட்ட இந்த ஆறுவருடங்களில் இந்த இனம் படும் அலைக்கழிப்புகள், சிதைவுகள், துரோகங்கள், அவமானப்படுத்தல்கள் என்பனவற்றை பார்க்கும்போதுதான் எவ்வளவுதூரம்,

அந்த ஒற்றை மனிதனே இத்தகைய சீரழிவுகளிலிருந்து முழுத் தமிழினத்தையும் காப்பாற்றும் கேடயமாக இருந்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிகிறது.
இன்றைக்கு யோசித்து பார்த்தால் வார்த்தைகளால் விபரிக்க முடியா பெரும் வியப்பு ஏற்படுகின்றது.

ஒரு கல்லூரி மாணவனாக வீட்டின் கதவுகளுக்கு அப்பால் பெரிதாக போய் இருக்காத இந்த மனிதன் தனது சிறு பராயத்தில் இந்த விடுதலைக்கான பெரும் யாகத்தில் இறங்கி நடந்தபோது அவரிடம் எதுவுமே இல்லை.

விடுதலைக்காக தன்னை அர்ப்பணிப்பது என்ற இலட்சிய வேட்கையைவிட வேறெதுவும் இல்லை.

ஆனால் தினமும் அவர் நடந்த பாதையின் தடைகள், சந்தித்த சோதனைகள், தடங்கல்கள் இவையே அந்த மனிதரை ஆளுமைகளின் உச்சமாக உருவாக்கியது. அனைத்து திறமைகளின் வழிநடாத்தும் அற்புத தலைமைப் பண்பின் உதாரணமாக உருவாக்கியது.

தினமும் ஏதாவது ஒன்றை தெரிந்து கொண்டபடியே தன் பயணத்தில் உறுதியாக நடந்தார்.

தன் அனுபவங்கள் ஒவ்வொன்றையுமே தன் மனதுக்குள் ஆழப்பதிந்துவைத்து அதனை தன்னுடன் இணைந்த ஒவ்வொரு போராளிக்கும் சொல்லி கற்பித்து ஆளாக்கிய ஒரு மகத்துவம் தேசியதலைவர்.

ஒரு தாய்க்கு உரிய பரிவுடன்,தந்தையின் பொறுப்புடன், அண்ணனுக்கு உரிய ஆதரவுடன், எல்லாவற்றிலும் மேலாக ஒரு உற்ற தோழனுக்கு மட்டுமே இருக்கும் அற்புதமான தோழமையுடன் சாப்பிடும்போது,

சைக்கிளில் ஓடும்போது, தூங்கும்முன் கதைக்கும்போது, நடந்து கொண்டிருக்கும்போது,ஒரு பேரூந்து பணயத்திலோ, அல்லது புகையிரத பயணத்தின்போதோ என்று சின்ன சின்ன விடயங்களாக சொல்லி சொல்லி தனக்கு அடுத்த போராளிகளை வளர்த்த அந்த பக்குவம் இன்று நினைத்தாலும் மலைக்க வைக்கிறது.

ஒருமுறை, அது தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம். 1979ன் இறுதி மாதங்கள்.

தலைவரின் கண்காணிப்பு, ஆலோசனைகளுடன் பயிற்சி நடந்தது.செல்லக்கிளி அம்மான், பொன்னம்மான், சங்கர் உட்பட 10பேருக்கு பயிற்சி. பயிற்சிமுகாம் வேலைகளுக்கு உதவியாக கிட்டுவும் சோமண்ணையும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது தானியங்கி ரைபிள் ஜி3 அப்போதுதான் தலைவரால் வேறு ஒரு நாட்டில் வாங்கப்பட்டு கொண்டுவரப்பட்டிருந்தது.

அதனுடன் அதற்கான 7.62ரக தோட்டாக்கள் 700 கொண்டு வந்திருந்தார்.

பயிற்சி காலத்தில் மிக அவசர வேலையாக தலைவர் வேறு இடம் சென்றுவிட்டார். தலைவர் போனபின்னர் உணவுத் தேவைக்காக ஒருநாள் இரவில் தானியங்கி துப்பாக்கி ஜி3 ஐ எடுத்துக்கொண்’டு குளக்கட்டுக்கு செல்லக்கிளி அம்மான், கலா அண்ணா, கிட்டு உட்பட நாலைந்து பேர் போய் காத்திருந்து,

ஒரு குளுவன்மாட்டை சுட்டுக்கொண்டுவந்து சமைத்து சாப்பிட்டு மிகுதியை வத்தல்போட்டு ஏனைய முகாம்களுக்கு (நம்பர்3, திருமலை 8ம் கட்டை) அனுப்பும் முயற்சியில் இருந்தனர்.

சில நாட்களில் தலைவரும் தனது அலுவல் முடிந்து முகாம் திரும்பினார். குளுவன் மாட்டின் வத்தலை சாப்பிட்டுக்கொண்டே இயல்பாக விசாரித்தார்.

எங்கே வாங்கினீங்கள் என்று, நீங்கள் வாங்கி கொண்டுவந்த புதிய ஜி3ஆல்தான் குளுவன்மாட்டை சுட்டோம் என்று பெருமையுடன் சொன்னார்கள்.

தலைவர் கேட்டார் எத்தனை மாட்டை சுட்டனீங்கள் என்று. இருட்டுக்குள் சரியாக தெரியவில்லை.ஆனாலும் ஒரு மூன்று நாலு வெடி வைத்தோம் என்றனர்.

தலைவர் சொன்னார்.’ சாப்பாட்டுக்காக வெடிவைக்கிறது சரி.ஆனால் நீங்கள் மற்ற மாடுகளை அங்கேயே விட்டுவிட்டு வந்ததுதான் பிழை என்றார்.

முகாமில் இருந்தவர்களுக்கு என்ன பிழை என்று தெரியவில்லை.தலைவரே தொடர்ந்தார்.

இப்ப எங்களிட்டை இருக்கிற தானியங்கி துப்பாக்கி ரகம் சிங்கள இராணுவத்திலும் இல்லை.அவங்கள் ஆமி வேட்டைக்கு காட்டுக்குள்ளை அடிக்கடி வரும்போது செத்த மாடுகளின் காயத்தை பார்த்தே பிடிப்பாங்கள்

இந்த காயம் நிச்சயமாக ஒரு தானியங்கி ரைபிளால்தான் வந்தது என்று.பிறகு அவங்கள் எச்சரிக்கையாயிடுவாங்கள் ‘ என்று..

தலைவர் பார்த்த கோணத்தில் அந்த முகாமில் எவருமே பார்த்திருக்கவில்லை. அவருக்கு அதுவே வாழ்வு.அதுவே யாகம், அதுவே மூச்சு..

அதுதான் அவரது வாழ்வு.அதனால்தான் அவரால் ஒவ்வொரு விடயத்தையும் அது விடுதலைக்கு எவ்வளவுதூரம் உரம்சேர்க்கும், அல்லது எவ்வளவு தூரம் சீர்குலைக்கும்,

எதிரி இதனை எவ்வாறு நோக்குவான், எமது மக்களுக்கு இந்த விடயத்தால் எவ்வளவு நன்’மை என்றெல்லாம் அணுஅணுவாக ஒவ்வொரு கணமும் சீர்தூக்கி அலச முடிந்தது.

இன்னுமொரு சம்பவம், இதில் சங்கர் சம்பந்தபடுகின்றான். 1982ல் சிங்களதேசத்தின் சாரணர்களை அனுப்பி விடுதலைப்புலிகளை அழிப்பேன் என்று ஜேஆர் ஜெயவர்த்தனா ஆணவத்துடன் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை கொச்கைப்படுத்தியபோது அதற்கு பதிலடியாக சங்கரின் முக்கிய பங்கேற்றலுடன்,

நெல்லியடியில் சிறீலங்கா காவல்துறை ஜீப்வண்டிமீது நடாத்தப்பட்ட தாக்குதலில் நான்கு சிறீலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டு அவர்களின் ஆயுதங்கள் கையப்படுத்தப்பட்டன.

மறைந்திருந்து தாக்கும் முறையில் அல்லாமல் பல நூற்றுக்கணக்கான மக்கள் நிறைந்த ஒரு பொழுதில் ஜீப் வண்டிக்கு மிகஅருகில் சென்று நடாத்தப்பட்ட ஒரு தாக்குதல் அது.

மூன்று காவல்துறையினர் ஜீப்வண்டிக்குள்ளும் ஒரு காவல்துறையினன் அதில் இருந்து ஒரு 100மீட்டர் தூரத்தில் நெல்லியடி யாழ்வீதியிலும் உயிரற்று கிடந்தனர். சிங்களதேசத்தை உலுக்கிய ஒரு நிகழ்வு இது.

இது நடந்தபோது தலைவர் தமிழ்நாட்டில் இருந்தார். இந்த சம்பவத்தின் பின்னர் தாயகத்தில் இருந்து தலைவரை சந்திக்க சென்ற போராளியிடம் தலைவர் கேட்ட முதல் கேள்வியே ‘ நெல்லியடி தாக்குதலில் ஜீப்புக்கு வெளியே 100மீட்டர் தூரத்தில் விழுந்து கிடந்த காவல்துறையினனை சுட்ட போராளி யார் என்பதே..

சங்கர்தான் சுட்டது. அதன் பின்னர் ஒருசில நாட்களில் சங்கருக்கு என்று ஒரு ஐந்து, ஆறு பக்க கடிதம் தலைவர் அனுப்பி இருந்தார்.

அதில் ‘ஒரு தாக்குதலில் ஓடும் ஒருவனை கலைத்து போய் சுட்டால்,மறு தாக்குதலில் எமக்கான எதிர்ப்பு அதிகமாக இருக்கும்.

உயிருக்கு பயந்து ஓட நினைக்கும் எதிரி நினைப்பான் ‘ஓடினாலும் கலைத்து வந்து சுட்டுகொல்வார்கள். எப்படியோ சாகப்போகின்ற நான் நாலு சூடுசுட்டுவிட்டு சாவோம் என்று நினைப்பானாகில்,

அது எமது போராளிகளுக்கு நிறைய அழிவுகளை கொடுக்கும் என்று ஆழ்ந்த ஒரு உளவியல் பார்வையுடன் எழுதப்பட்ட அந்த கடிதம் பார்த்தபோது இந்த மனிதன் எப்படித்தான் ஒவ்வொன்றையும் எங்களை போல இல்லாமல் வித்தியாசமாக அணுகி பார்க்கின்றார் என்ற வியப்பு வானுயர்ந்து நிமிர வைத்தது.

இன்னுமொருமுறை,இது 83மே உள்ளூராட்சி தேர்தல் நிராகரிப்பு காலம்.இருக்கின்ற ஒரு சில வாரங்களுக்குள் மக்களை முழுமையாக வீடுவீடாக சந்தித்து வாக்களிக்க வேண்டாம் என்று காரணங்களை சொல்லி விளக்க வேண்டிய ஒரு வியூகத்தை தலைவர் வகுத்தார் 83மார்ச் நடுப்பகுதியில்.

அப்போது இருந்த 30க்கும் குறைவான போராளிகளுக்கும் அவரவர் செல்லவேண்டிய இடங்கள் பற்றி தலைவர் விளக்க கொண்டிருந்தார்.

திடீரென கேட்டார். இதிலை தேனீர்குடிக்காதவர்கள் எத்தனை பேர்’ என்று.அதிகமான போராளிகள் அப்போது தேனீர் குடிப்பதில்லை.

தலைவர் மீண்டும் ஒரு கேள்வியை போட்டார்.

நீங்கள் மக்களை சந்திக்க வீடுகளுக்கு,குடிசைகளுக்கு போகும்போது மக்கள் தேனீர் தந்தால் என்ன சொல்லுவீங்கள்’ஒருமித்த குரலில் எல்லோரும் சொன்னார்கள் ‘நாங்கள் தேனீர்குடிக்கிறது இல்லை.எங்களுக்கு தேனீர் வேண்டாம்’ என்று சொல்லுவோம்.

தலைவர் உடனே குரலை உயர்த்தி சொன்னார் “நீங்கள் தேனீர் குடிக்கிறதை விட்டிருந்தால்கூட பரவாயில்லை, மக்களின் வீடுகள்,குடிசைகளுக்கு போகும்போது தேனீர்தந்தால் கட்டாயம் குடிக்க வேணும் என்றார்.

என்னடா தலைவர் இப்படி ஏன் சொல்லுகிறார் என்று நினைத்த தருணத்தில் தலைவரே ஏன் என்ற காரணத்தையும் விளக்குகிறார்.

எமது சமூகம் சாதீய ஏற்ற தாழ்வுகளால் பிளவுண்டு,உயர்வு தாழ்வு பார்த்திருக்கும் ஒரு பொழுதில் நாம் போராட இறங்கி இருக்கிறோம்.

இங்கு பொதுமக்களுக்கு எதனையும் சாதீய கண்கொண்டு பார்க்கும் மேலாதிக்க எண்ணமும்,அதே நேரம் தாழ்வு மனப்பான்மையும் எல்லா இடத்திலும் இருக்குது.

நீங்கள் போகும் ஒரு வீட்டிலோ குடிசையிலோ உங்களுக்கு அன்புடன் தரப்படுற தேனீரை நீங்கள் நிராகரிக்கும்போது அவர்களின் மனங்களை நீங்கள் காயப்படுத்துகிறீங்கள்.

நாம் உங்களில் ஒருவர் என்று காட்டுவதற்கு அவர்கள் அன்புடன் தரும் உபசரிப்புகளை அது உங்களுக்கு தனிப்பட்ட முறையில் விருப்பம் இல்லாதுவிட்டாலும்கூட இந்த தேசிய விடுதலைக்காக நீங்கள் அதனை முகம்சுழிக்’காமல்” ஏற்றுக்கொள்ளத்தான் வேணும் என்றார்.

ஒரு உற்சாகத்துக்கு, ஒரு சுவைக்கு அருந்தும் சாதாரண தேனீரிலேயே இத்தனை உளவியல் பார்வையா என்று தலைவரை பெரு வியப்பு கலந்து பார்க்க வைத்தது.

இப்படி எதிர்ப்படும் அனைத்து சம்பவங்களில் இருந்தும் பாடங்களை எடுத்து தான் கற்று அதனையே அடுத்த போராளிகளுக்கும் அவர்கள் ஊடாக அடுத்த போராளிகளுக்கும் அவர்களின் வழியாக அனைத்து தமிழ்மக்களுக்கும் என்று விரிய வைத்த அந்த அதிமானுடனின் அகவை அறுபத்திஒன்று.

அவர் போராட புறப்பட்ட 72லிருந்து இன்றுவரை அவருக்கு தெரிந்ததுஎல்லாம் விடுதலைக்காக ஏதாவது செய்வதுதான்.

யாருடயை பதிலுக்காகவும், ஒப்புதலுக்காகவும் ஒருபோதும் காத்திருந்தது கிடையாது. அவர் மிகுந்த எதிர்பார்ப்புடனும் இலட்சிய கனலுடனும் கட்டி வளர்த்து வந்த விடுதலைப்புலிகள் அமைப்பு மிகப்பாரிய உடைவை 79ல் சந்தித்தது.

குழப்பவாதிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை பிரித்து எடுத்தார்கள். மிகுதியாக தலைவருடன் நின்றவர்களிலும் பலர் மனச்சோர்வு அடைந்து தலைவரைவிட்டு பிரிந்து தமது பழைய படிப்புகளை தொடரவும் சொந்தவேலைகளுக்கும் சென்ற அந்த பொழுதில் ஏறத்தாள ஒரு கை விரலில் அடங்கக்கூடிய உறுப்பினர்களே தலைவருடன் நின்றிருந்தார்கள்.

அப்படியான ஒரு பொழுதில் அவரை கோண்டாவில் பஸ்டிப்போவுக்கு முன்பாக கண்டபோது அப்போதும் அவர் எந்தவித சோர்வும் மனக்குழப்பமும் இன்றி சிங்களத்துக்கு எதிரான போராட்டம் பற்றியே கதைத்தது இன்றும் நினைவில் நிற்கிறது.

அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் இப்போதும் நெஞ்சுக்குள் நிற்கிறது. இப்ப என்னுடன் இருக்கிறவங்கள் விட்டுவிட்டு போனாலும்கூட நான் தனித்து நின்று தன்னும் எங்கள் மக்களின் விடுதலைக்காக ஏதும் செய்துதான்.

போவேன் என்று சொன்ன அந்த அறச்சீற்றம், அந்த இலட்சியக்கனல், எந்த நேரமும் தற்தியாகத்துக்கும், அர்ப்பணிப்புக்கும் தயாரான இந்த குணங்களே அவரை பல்லாயிரம் ஆண்டுகால செழுமையும் வளமும் செம்மொழித் தன்மைகளும் கொண்ட ஒரு மொழியை பேசிடும் பத்துகொடி மக்களினதும் ஒற்றை குரலாக உருவாக்கியுள்ளது.

அது என்றென்றும் வழிகாட்டும்.

ச.ச.முத்து
ilamparavai@hotmail.com