தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுவணக்க நிகழ்வு – Bochum யேர்மனி December 31, 2015 News, TCC யேர்மனி Bochum நகரத்தில் எழுச்சியோடு நடைபெற்ற தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுவணக்க நிகழ்வு விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக, பிதாமகனாக மூன்று தசாப்தங்களாக வாழ்ந்து எமது முதிர்ந்த அரசியல் போராளியாக, மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றிற்கு மேலாக தேசியத்தலைவரின் உற்ற நண்பனாக இருந்து எம்மை விட்டுச்சென்ற தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுவணக்க நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப் படத்துக்கு மலர்வணக்கம், சுடர்வணக்கம் செலுத்தப்பட்டது. “மாவீரர்களின் தியாகமும், மக்களின் அர்ப்பணிப்புமே ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ள நிலையில் எமது கைகளில் தற்போதுள்ள ஆயுதம்” எனும் கருப்பொருளுக்கு அமைய தமிழின உணர்வாளரும் ,நாம் தமிழர் கட்சியின் சிரேஸ்ட்ட உறுப்பினரும் ஆகிய பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார் . தாயகம், தேசியம் தன்னாட்சி உரிமை என்பதன் நீட்சியும், எமது இலட்சியமாம் தமிழீழ தேசம் மலரவேண்டும் என்பதன் தேவையும் எக்காலத்திலும் இருத்ததைவிட இன்று இருக்கின்றது என்பதையும் தனது பேச்சில் தொடர்ந்து எடுத்துரைத்தார். தொடர்ந்து தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுகளை மீட்கும் காணொளித் தொகுப்பும் திரையில் காண்பிக்கப்பட்டு, மாவீரர்களின் நினைவை எடுத்துரைக்கும் விடுதலை நடனங்கள் , கவிதைகள் , நாடகம் என அரங்கேறின. தாயக விடுதலை உணர்வோடு தமிழீழ விடுதலையை வென்றெடுப்போம் என உறுதி எடுத்துக்கொண்டு வணக்க நிகழ்வு நிறைவுபெற்றது.