“எங்கட உயிரைக் கொடுத்தாவது அண்ணையைக் காப்பாற்றணும்” பிரிகேடியர் ஆதவன் April 4, 2016 News “எங்கட உயிரைக் கொடுத்தாவது அண்ணையைக் காப்பாற்றணும்” ஆனந்தபுரத்தில் பிரிகேடியர் ஆதவன் போராளிகளுக்குக் கட்டளை வழங்கினார். போராளிகளில் ஒருவனாக மாறி, கட்டளைகளைப் பிறப்பித்த வண்ணம் பல தடைகளை உடைத்து, தானே குறிபார்த்துச் சுட்டு, எதிரிகளை வீழ்த்திய வண்ணம் முன்னேறுகிறார் ஆதவன். எப்பணி ஆற்றினாலும் தலைவரை பாதுகாப்பதே தன் முதற்பணி என எண்ணும் ஆதவனால் கள நிலைமைகளை அறிந்து கொண்டு பொறுமை காக்க முடியவில்லை, தலைவர் அருகிருந்து தலைவரைப் பாதுகாப்பதில் தன்னுடைய வாழ்நாட்களில் கூடிய காலங்களைக் கழித்த ஆதவன், கதி கலங்கி நின்றார். “எம் தலைவருக்கு சிறு இன்னல் நேருமாயின் அதைப் பார்க்க நான் உயிருடன் இருக்க கூடாது ” என தன் போராளிகளிடம், தன் பிள்ளைகளிடம் அடிக்கடி கூறும் ஆதவனால் சினம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. பகை மேல் சீற்றம் கொண்டு சீறி எழுந்தார். படைகொண்டு தடையுடைத்து எதிரியை அழித்து தலைவரை காப்பற்றினார். அக்களத்தில் இருந்து தலைவரைப் பாதுகாத்த பின்பும், தான் நேசித்த மண்ணுக்காக, தான் வளர்த்த போராளிகளுக்காக அக்களத்தை விட்டு அகலாது கலங்காது போரிட்டார். போராளிகளை உற்சாகப் படுத்தி புயலாகப் போரிட்ட ஆதவன் அவர்கள் இயங்கவே முடியாத அளவுக்கு பலத்த காயம் அடைகிறார் . காப்பாற்ற முயன்ற போராளிகளைப் பார்த்து “எதிரி அண்மித்து விட்டான், என்னை விட்டுட்டுப் போங்கோ “எனக் கூறிய இறுதி வார்த்தைகளுடன் அவருடைய மூச்சு அடங்கிப் போனது. தலைவரை உயிராக நேசித்த அந்த வீரத்தளபதி தன் இறுதி மூச்சை விடும் போது கூட தலைவரைப் பற்றியே நினைத்தார். தலைவருக்கு சிறு துன்பம் கூட நேரக் கூடாது என எண்ணினார். பல காலங்கள் தலைவரோடு நின்ற அந்த அற்புதத் தளபதியின் சாதனைகள் வியக்கத்தக்கது. எப்பணி ஆற்றினாலும் அப்பணியில் அத்தனை நேர்த்தி இருக்கும் . மிகவும் கடினமான நிர்வாகப் பணியை சுலபமாக்கிய ஒரே தளபதி ஆதவன் அவர்களே. அனைத்துத் தளபதிகளுக்கும், அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும், தலைவர் கூறும் வார்த்தை “நிர்வாகத்தை எப்படிச் செய்வது என்று கடாபியிடம் படித்து விட்டு வாருங்கள். “அது போலவே போராளிகளின் திறமைகளை இனம் கண்டு அவர்களை ஊக்குவித்து வளர்ப்பதிலும், அவர்களுடைய உள்ளத்துச் சிந்தனைகளைப் புரிந்து கொண்டு செயல்ப்படுத்துவதிலும் அவருக்கு நிகர் அவரே. குறி வல்லுணரான ஆதவனைப் பார்த்து வியக்காதவர்களே இல்லை. சொல்லிவைத்துச் சுடுவதில் அவருக்கு நிகர் அவரே. கரும்புலி வீரர்களை உருவாக்கி அவர்களை வழி நடத்திய அந்த அற்புதத் தளபதியும் இவரே, புதிய வீரர்களை போராட்டத்துக்குள் உள்வாங்கி புத்துணர்ச்சியோடும், கருத்துச் சுதந்திரத்துடனும் பயில்வித்த வித்தகரும் இவரே . பல பணிகளை நேர்த்தியாகச் செய்து, பல சாதனைகள் புரிந்து, தலைவர் மனதில் தனியிடத்தைப் பிடித்த பிரிகேடியர் ஆதவனே! என்றென்றும் உங்கள் நினைவுகளைச் சுமந்து கொண்டு உங்கள் கனவு நனவாகும் வரை உம் தடம் தொடர்வோம் . யாழ் மாவட்டம் வடமராட்சிப் பகுதியில் கொற்றாவத்தை, வதிரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 1985 – 86 காலப்பகுதியில் இணைந்து கொண்டு இந்தியாவில் பயிற்சி பெற்றவர். விமான எதிர்ப்பு ஏவுகணைகள் சுடும் பயிற்சிக்காக இந்திய இராணுவத்தால் தெரிவு செய்யப்பட்ட பத்து விடுதலைப்புலிகள் உறுப்பினர்களில் ஒருவர். இவரது குறி பார்த்து சுடும் திறமையைக் கண்டு கொண்ட லெப்.கேணல் பொன்னம்மான் தலைவருக்கு இவர் பற்றிச் சொல்லி அறிமுகப்படுத்திய காலத்திலிருந்து அவரது மெய்ப்பாதுகாவலர் குழுவில் ஒருவராக சிறப்பாக பணியாற்றியவர். இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் தலைவர் அவர்கள் சுதுமலை அம்மன் கோயில் முன்றலில் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரையின்போது தலைவரின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவராக பணியாற்றினார். சாதாரண போராளியாக இயக்கத்தில் தனது பணிகளைத் தொடங்கிய இத்தளபதி, தனக்கான தகைமைகளை வளர்த்துக்கொண்டு ஓர் உயரிய இராணுவத் தளபதியாக எப்படி உருவானார்? அல்லது எப்படி உருவாக்கப்பட்டார்? தலைவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே அவரது போராட்டப் பணிகள் ஆரம்பகாலம் தொடக்கம் இருந்ததுவே அதற்கான காரணமாகவிருக்கக் கூடும். வாகனக் கண்ணாடியில் பார்த்தே வானில் பறக்கும் பறவைகளைக் குறிபார்த்துச்சுட்டுவிடும் திறமை அவருக்கு இருந்ததாக நான் நண்பர்கள் மூலம் அறிந்திருந்தேன். உண்மையோ பொய்யோ, ஆனால் நிச்சயம் அவர் அதற்கு முயற்சி செய்திருப்பார். ‘முன்னேறிப் பாய்தல்’ என்ற பெயரில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கெதிராக புலிகள் நடத்திய ‘புலிப்பாய்ச்சல்’ நடவடிக்கையைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் படைக்கட்டுமானத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுவரை இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் கூட்டுப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக கடாபி அண்ணை நியமிக்கப்பட்டார். 1995 ஆம் ஆண்டு யூலை மாதத்திலிருந்து 2002 தொடக்கம் வரை – அதாவது விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசபடைகளுக்குமிடையில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டது வரை – கடாபி என அழைக்கப்படும் ஆதவன் அண்ணை தான் இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாகப் பணியாற்றினார். உண்மையில் இம்ரான்-பாண்டியன் படையணியென்பது பல சிறப்பு அணிகளின் கூட்டமைப்பாகவே இருந்தது. கடாபி அண்ணா பல சிறப்பு அணிகளை அப்படையணியின் கீழ் உருவாக்கி விடுதலைப் பயணத்தில் பல்வேறு சாதனைகளை ஏற்படுத்தியிருந்தார். கரும்புலிகள் அணி, லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி, மயூரன் பதுங்கிச்சுடும் அணி, செம்பியன் வேவு அணி, கேணல் சங்கர் ஆழ ஊடுருவித் தாக்கும் அணி, லெப்.கேணல் ராதா வான்காப்பு அணி, விடுதலைப் புலிகளின் கவசப் படையணி போன்ற சிறப்புப் படையணிகளையும் படையப்பயிற்சிக் கல்லூரிகள் போன்ற படைக்கட்டுமானங்களையும் தலைவரின் எண்ணங்களுக்கு ஏற்ப உருவாக்கி, வளர்த்து வழிநடத்தியதில் கடாபி அண்ணையின் தலைமைத்துவப் பண்பின் சிறப்புக்களைக் காணக்கூடியதாகவிருந்தது. இப்பணிகளுக்கு மேலதிகமாக தலைவரின் பாதுகாப்பு சார்ந்த பணிகளையும் நேரடியாகக் கண்காணித்துவந்த கடாபி அண்ணை இருபத்தி நான்கு மணிநேரமும் விடுதலைப் பணிக்காகவே ஓயாது இயங்கிக் கொண்டிருந்தார். ஒரு பயிற்சிப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு வேவுப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு தாக்குதல் பணியாகவிருந்தாலும் சரி, நேரம் எடுத்து திட்டமிடலுக்கே, கூடிய நேரத்தை ஒதுக்கி, ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றும் பாங்கு கடாபி அண்ணையின் குறிப்பிடவேண்டிய விடயமாகும். பயிற்சித்திட்டமிடல் பற்றிக் குறிப்பிடவேண்டும் என்றால் ஒரு காலத்தில் குறிப்பிட்ட பயிற்சிக்கு மூன்று மாதங்கள் என திட்டமிடப்பட்டிருக்கும். ஆனால் எதிரியின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது இப்பயிற்சிக்காலத்தைக் குறுக்கவேண்டிவரும். அப்போதுகூட குறுகிய காலப் பயிற்சிதிட்டமிடல் ஒன்றை தயார் செய்துவிட்டே பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என்பதில் கவனமாகவிருப்பார். அதேபோல தாக்குதல் நடவடிக்கை ஒன்றை பூர்த்தி செய்தாலும், அத்தாக்குதலின் வெற்றி தோல்வி என்பதைவிட அத்தாக்குதல் தொடர்பான விபரங்களை ஆவணப்படுத்துமாறே தாக்குதலணி பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். அத்தாக்குதல் வெற்றியடைந்ததற்கான காரணங்கள் அல்லது தோல்வியடைந்ததற்கான காரணங்கள், எதிர்காலத்தில் என்ன விடயங்கள் மேம்படுத்தப்படலாம் என்பன போன்ற விபரங்களை உள்ளடக்கியதாக அவ்ஆவணங்கள் தயாரிக்கப்படும். இவ்வாறு பெறப்படும் ஆவணங்கள் பயிற்சி ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதற்கேற்ற திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் பயிற்சிகளில் செய்யப்படும். இவ்வாறு இறுக்கமான காலகட்டங்களின்போதும் மரபு வழி இராணுவங்களுக்கு ஒப்பான திட்டமிடல்களையும் செயற்பாடுகளையும் பேணிவருவதில் கவனம் எடுத்துவந்தவர்தான் கடாபி அண்ணை. பலாலி விமானத்தளம் மீதான தாக்குதல் நடவடிக்கை ஒன்றைப் பற்றிய அறிக்கை தயாரிக்கப்பட வேண்டியிருந்தது. அந்தத் தாக்குதலில் பங்குகொண்டவர்களின் அறிக்கைகள், ஒலிப்பதிவு செய்யப்பட்ட தொலைத்தொடர்பு உரையாடல்கள் என்பவற்றை கொண்டு விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த அறிக்கையின் ஒரு பகுதி இவ்வாறு இருந்தது. ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது”. அதனைத் திருத்தம் செய்த கடாபி அண்ணை சொன்னார். ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அது கவசவாகனத்தில் பட்டு அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது” என்று தெளிவாக எழுதப்படவேண்டும் என்று சொன்னார். இப்படியான துல்லியமான தரவுகள் இணைக்கப்படுவதே விசாரணைகள் முழுமைபெற உதவுமென்பது அவரின் இறுக்கமான நிலைப்பாடாகவிருந்தது. மேற்குறிப்பிட்ட சம்பவம் ஒரு சிறிய விடயம்தான். ஆனால் அந்த சிறிய விடயத்திற்குள் புதைந்திருக்கும் ஆழமான இராணுவசார் முக்கியத்துவம் என்பது சாதாரண பொதுமகனுக்குப் புரியக்கூடியதன்று. ஆனால் அவற்றின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளமுடியும். இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நிறைவுசெய்வதில் கவனமாகவிருப்பார். கடாபி அண்ணையைப் பொறுத்தவரையில் தாக்குதல்களோடு சம்பந்தப்பட்ட தாக்குதலணிகளை மட்டுமன்றி பயிற்சிகள், விசாரணைகள், புலனாய்வு போன்ற நிர்வாக ரீதியிலான அணிகளையும் நிர்வகிக்கவேண்டிய பொறுப்பிலேதான் இருந்தார். ஒரு சாதாரண மரபுவழி இராணுவத்தில் உள்ள போர்வீரர்களுக்கு சண்டைக்கான மனநிலையைப் பேணுவதற்கான அறிவூட்டல்கள் செய்யவேண்டியிருக்கும். ஆனால் போராளிகளைப் பொறுத்தவரையில் அதற்கான அவசியம் இல்லை. அதேவேளையில் நிர்வாக ரீதியிலான அணிகளிலுள்ள போராளிகள் குறிப்பிட்ட சில காலங்களுக்குப் பின்னர் தாங்களும் சண்டைக்குச் செல்லவேண்டும் எனக் கேட்டு கடிதம் அனுப்புவார்கள் அல்லது நேரில் சந்தித்துக் கேட்பார்கள். பிரிகேடியர் கடாபி/ ஆதவன் நிர்வாக வேலைத்திட்டங்களிலுள்ள போராளிகளை, குறிப்பிட்ட சில வேலைத்திட்டங்களின் முக்கியத்துவம் கருதி, அவர்களை உடனடியான இன்னொருவரைக் கொண்டு மாற்றீடு செய்வது என்பது கடினமாகவிருக்கும். அவர்களுக்கு பல்வேறு உதாரணங்களை எடுத்துகாட்டி, சண்டையைப் போலவே மற்றைய பணிகளும் முக்கியமானதென பொறுமையாக அறிவுறுத்தி, தொடர்ந்தும் அவர்களை அப்பணியின் முக்கியத்துவம் கருதி வேலையில் மீண்டும் அமர்த்திவிடுவார். இவ்வாறு வெவ்வேறு பணிகளிலுள்ள போராளிகளை, ஒரே படையணியின் கீழ் நிர்வகித்து தனது திறமையின் மூலம் வழிநடத்திவந்தார் என்றே சொல்லவேண்டும். இவரது தாக்குதல் நடவடிக்கைகளை பொறுத்தவரை சிறப்பு இராணுவ நடவடிக்கைகளிலேதான் இவர் நேரடியாக பங்குபற்றியிருப்பார் என்றே எண்ணுகின்றேன். குறிப்பாக 1995 ஆம் ஆண்டில் பலாலி விமானதளத்திற்கு அருகே இரண்டு அவ்ரோ விமானங்களை சுட்டுவீழ்த்தியிருந்தார். கடாபி அண்ணையின் குறிபார்த்துசுடும் திறமையை தலைவர் அவர்கள் ஏற்கனவே இனங்கண்டிருந்ததால், அதற்கான பணி, தலைவர் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் அவ்விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய இராணுவ காலப்பகுதியில் தலைவரின் பாதுகாப்பு அணி வீரனாக இருந்த கடாபி அண்ணை, படிப்படியாக பல்வேறு கடமைகளை தலைவரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செய்துவந்தார். தமிழீழ தாயகத்திலிருந்த இராணுவதளங்கள் மீதான பெரும்பாலான கரும்புலி நடவடிக்கைகள் அனைத்தும் இவரது வழிநடத்தலின் கீழேயே நடாத்தப்பட்டது. அத்துடன் ஆழ ஊடுருவி சென்று நடத்தும் பல தாக்குதல் நடவடிக்கைகளும், இவரது வழிகாட்டலில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. கேணல் அகிலேஷ் , லெப் கேணல் ராஜேஷ் , லெப் கேணல் நளன் பிரிகேடியர் ஆதவனோடு ஆனந்தபுரத்தில் அருகிருந்த பொறுப்பாளர்கள் இவர்கள். ஆதவனால் பல்லாண்டுகளாக பயில்விக்கப்பட்ட பண்பாளர்கள் இவர்கள். பல போர் வீரர்களை வளர்த்தெடுத்து, தேசக்கடமை ஆற்றிய சேவகர்கள் இவர்கள். வரலாறே பிரமித்து நிற்பதாக சிலரின் வரலாறுகள் அமைந்து விடுகின்றன. அத்தனை அர்ப்பணமும், ஈகமும், தியாகமும் அவர்களின் வரலாறுமுழுவதும் நிறைந்தே கிடக்கும். அப்படியான ஒரு வரலாற்றுக்கு உரியவர்களாகவே இவர்கள் செயலாற்றினார்கள். தேசவிடுதலைப் போரில் ஒரு காலை இழந்திருந்த அகிலேசை தளபதி ஆதவன் அவர்கள் தளப்பணிக்காக அமர்த்திய போதும், “இல்லை அண்ணை நான் உங்களோடு சண்டைக்கு வாறன் , என்னாலை சண்டை பிடிக்க முடியும்.”எனக் கூறி, போட்டிருந்த பொய்க் காலுடன் களம் புகுந்தவன் . தன்னை வளர்த்த தளபதியோடு இணைந்து தன் தேசத்தையும், தலைவரையும் காப்பாற்றப் போராடினான். பல்லாண்டுகளாக பல பணிகள் ஆற்றிய கேணல் அகிலேஷ் ஆனந்தபுரத்தில் விதையாகிப் போனான் . அகிலேசுடனான எனது முதற்சந்திப்பு முள்ளியவளையில் ஒரு முகாமில் அகிலேசும் அவனது உற்ற தோழனும் அங்கு வந்திருந்தார்கள்.பார்ப்பதற்கு பெரியவர் பாவனையில் இருக்கும் இவனோடு, பழகியபின் புரியும் அவனுடைய குழந்தைத்தனமான பேச்சும் பணிவும், வயது வேறுபாடின்றி அனைவரையும் மதித்து நடக்கும் பண்பு மிக்கவன்.அவனுடைய போராட்ட வாழ்க்கையில் அதிக காலத்தை பிரிகேடியர் ஆதவன்/கடாபி அருகிருந்து பணி செய்தவன். இறுதி நாள் வரை அவனுடைய இறுதிக்கணம் வரை அவர் அருகிருந்தவன். மெல்லிய பேச்சுத் தடுமாற்றம் இழையோடும் இவன் பேச்சில் சுவாரசியமிருக்கும். பேசும் வேளையெல்லாம் கண்ணைச் சிமிட்டியபடியே பேசுவது அவனுடைய இயல்பு ஆதலால் ஒரு சிலர் பிழை நினைத்திருக்கவும் கூடும். என்னையே சிலர் கேட்டதுண்டு.ஆனால் அடுத்தவர் மனம்நோக இவன் வாழ்நாளில் என்றும் நடந்திருக்கமாட்டான். அப்படியொரு சாந்தம் குடிகொண்டவன். என்னை அன்பாக அவன் அழைக்கும் வார்த்தைக்காக என் மனம் இன்றும் ஏங்கி நிற்பது நீ அறிய வாய்ப்பில்லை. பிரிகேடியர் ஆதவன் படுகாயமடைந்த நிலையில் அகிலேஷ் அவ்வணியை செவ்வனே வழிநடாத்தினான். அவர் அருகிருந்து அறிவுரை கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கான திட்டம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். அந்த வேளையில் தான் அது நடைபெற்றதாக ஏனைய தோழர்கள் சொன்னபோது உங்கள் இருவரின் கடைமைக்கு அப்பாற்பட்ட அன்பை பார்த்து வியந்து நின்றேன். எங்கிருந்தோ வந்த எதிரிரவை ஒன்று உன் நெற்றியை துளைத்துவிட ஆதவன் அண்ணா மடிமீது நீ சரிந்து வீழ்ந்ததாக! உனை ஊட்டி வளர்த்தவர்,உரிமையோடு ஏசுபவர், உணவு கூடி உண்டவரின் குடும்பமும் உன் உறவாய் ஏற்றிருந்த உந்தனை அணைத்தபடி அழுதாராம் அந்தத்தளபதி. 27.03.2009 அன்று நீயும் உன் பொறுப்பாளரும் பச்சைப் புல்வெளியூடாக இறுதிப்பயணம் வந்தீர்கள். உன் வீட்டில் சொல்லி வைத்து கோழிசமைத்து இருவரும் சேர்ந்து உன் அம்மாவின் கையால் கடைசிச் சோறு உண்டதாக உன் துணைவி சொல்லி அழவே தெரிந்து கொண்டேன். யார் வீட்டிற்கும் அலுவலின்றி போகாத நீங்கள் இருவரும் அன்று நேசமாக அணைத்து விடை பெற்று சென்றதுவும் முன் ஏற்பாடான திட்டம் என்று பின்பு நாம் உணர்ந்து கொண்டோம். சிறு குழந்தைகள் என்றால் அகிலேஸ்மாமா ஆச்சுமாமா ஆகிடுவார். அது அவனுடைய செல்லப் பெயர். அனைவருக்கும் பார்த்தவுடன் இவனை பிடித்துக் கொள்ளும் பணிவு மிக்கவன். ஆனால் கடமையில் கண்ணயராது உழைத்தவன். இவனுடைய பல பணிகள் இன்றுமென்ன இனியும் இனிவரும் காலங்களில் கூட வெளித்தெரிய வாய்ப்பில்லை. இவன் தன் விசுவாசமான பணியால் மட்டுமே தலைமையின் அருகு சென்றவன். அண்ணனே அகிலேசின் வேலை என்றுதான் கதைத்ததை என் காதால் கேட்டிருக்கிறேன். இரகசியம் காப்பதில் நீ மகா கெட்டிக்காரன். உன் மனைவிக்கும் கூட மூச்சு விட மாட்டாய். அண்ணனால் பெரிதும் விரும்பபட்டவர்களில் நீ முக்கியமானவன். கடல் நடுவில் ஒரு திட்டமிட்ட தாக்குதலுக்காக ஆதவனோடு நீ சென்றிருந்தாய், அங்கு திட்டத்துக்கு மாறாக எதிரி உலங்குவானூர்தி சடுதியாக மிக அண்மையில் தோன்றி தாக்குதலை ஆரம்பிக்க இருபகுதிக்கும் கடுஞ்சமர் மூண்டது. உடனடியாக பிரிகேடியர் ஆதவனின் கட்டளைக்கு, அகிலேஸ் உலங்குவானுர்தி நோக்கி சற்றும் பதட்டம் இன்றி உந்து கணையை ஏவி விட உலங்குவானூர்தி வெடித்துச் சிதறியது. சற்றும் எதிர் பாராமல் கள நிலைமை மாறிவிட இவர்கள் வெற்றியோடு தளம் திரும்பினார்கள். இந்த வரலாற்றுச் சாதனைக்கு கேணல் அகிலேஷ்தான் சொந்தக்காரன் என்று யாரும் அறிய வாய்ப்பில்லை. அன்று மட்டும் துணிந்து இவன் கணப்பொழுதில் அவ் உலங்கு வானுர்தியை அழித்திருக்காவிட்டால் அனைவரும் படகோடு மூழ்கும் நிலையே இருந்ததாக ஆதவன் பெருமையாக கூறிக்கொண்டார். பல சந்தர்பங்களில் அவர் அருகிருந்தும் , உன் கால் ஒன்றை இழந்த பின்னும் சளைக்காது பணி செய்தவன். அவரைக் காப்பரனாய்க் காத்து நின்றவன். உன் அருகிலேயே அவரும் உறங்கியதை நீ அறிய வாய்ப்பு இல்லை. உங்கள் அனைவரையும் விட்டு வர மனமின்றி கண்டல் காட்டுக்குள் தன் கல்லறையை அமைத்துக் கொண்டார். இனி நீ அமைதியாக சேர்ந்துறங்கும் உன் தோழர்களும் அங்குதான் உன்னருகில் துயில்கின்றார். அனைவரையும் இந்நாளில் மனதிருத்தி வணங்குகிறோம். தமிழீழ விடுதலைப் போரில் பல களங்கள் கண்ட ராஜேஷ் களத்தில் ஒருகண்ணை இழந்திருந்தார். கடமையை கண்ணியத்துடன் செய்யும் ஓர் அற்புத வீரனாகவும், பல போராளிகளை வளர்த்தெடுத்து அவர்களுக்கு முன் உதாரணமாகவும் திகழ்ந்தார். நீண்ட காலங்களாக தேசவிடுதலைப் போரில் பங்காற்றியவர், களங்களில் மட்டுமின்றி தளங்களிலும், சிறப்புறப் பணியாற்றினார். தேசத் தலைவரைக் காக்கும் பணியிலும் பல வருடங்கள் ஈடுபட்டான். தமிழ்த் தேசத்தின் விடிவுக்காக அயராது உழைத்த லெப் கேணல் ராஜேஷ் ஆனந்தபுர பெருஞ்சமரில் வீர காவியமானான். இந்த வீரனை என்றென்றும் மனதில் இருத்தி இவன் தடம் தொடர்வோம். மூர்க்கத்தனத்தோடு முன்னேறிய இராணுவத்தைக் கொன்று குவித்து விதையானவன் இவன் .தன்னுடைய இரண்டு வயதுக் குழந்தையை சிங்கள அரக்கர்களின் விமானத்தாக்குதலுக்குப் பலிகொடுத்து, அத்துயரில் இருந்து மீழமுன்பே களம் நோக்கி விரைந்தவன் நளன். ஆனந்தபுரத்தில் நடந்த உக்கிரப் போரில் தேச விடுதலைக்காக பல பணிகள் ஆற்றிய இவன் இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புப் பொறுப்பாளராக சில காலம் பணிபுரிந்தான். மிகவேகமாகவே அனைவரது தேவைகளையும் அனைவரது கோரிக்கைகளையும் உள்வாங்கி படையணியை நிர்வகிக்கும் ஒருவனாக ஆகிப்போனான். நிர்வாகப் பணிகளை அழகாக போராளிகளுக்குக் கற்று கொடுத்தான். அனைவராலும் விரும்பப்படும் பொறுப்பாளனாகச் செயலாற்றிய லெப் கேணல் நளன் அவர்களை என்றுமே மறக்க முடியாது . இவர்களோடு கப்டன் குட்டியருவி, கப்டன் இசைப்பிரியன், கப்டன் அமர்முரசு, கப்டன் நெடியவன், மேயர் ஈழச்செல்வன் இவர்கள் எம் இனத்தின் இருள் நீக்கிகள் ,எம்மனங்களில் சுடர் விட்டெரியும் சுடர் மணிகள். தூக்கம், சோர்வு, உணவு என்று எல்லாம் மறந்து எந்நேரமும் இயங்கியவர்கள். ஆனந்தபுரத்தில் பிரிகேடியர் ஆதவனோடு இறுதிவரை உறுதியுடன் உழைத்தவர்கள். கட்டளைக்குக் கீழ்ப் பணிந்து அனைத்துக் கடினமான பணிகளையும் அர்பணிப்புடன் ஆற்றியவர்கள். இந்தத் தியாகச் செம்மல்களை என்றும் எம் மனங்களில் இருத்திப் பூசிப்போமாக.